Published : 14 Oct 2017 10:35 AM
Last Updated : 14 Oct 2017 10:35 AM
உலகுக்கு நீர் போல, நம் உடலுக்கு மிக முக்கியமானது ரத்தம். இதுதான் நம் உடல் முழுவதும் ஜீவ நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்வரை எந்த பிரச்சினை யும் இல்லை. ரத்த அழுத்தம் ஏற்படும்போது மூளை, சிறுநீரகம், கண் பாதிப்புகள், மாரடைப்பு என பல தொல்லைகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விட்டால் ரத்த நாளங்கள் தடிமனாகி மூளையில் ரத்தக் கசிவை உருவாக்கும் அபாயமும் உண்டு.
கொழுப்பு மிகுந்த, எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளைத் தவிர்ப்பது, உப்பு, சர்க்கரையைக் குறைத்துக்கொள்வதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும். காய் கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 3-5 கி.மீ. தொலைவுக்கு நடைபயில்வது அவசியம். தியானமும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உழைப்புக்கு இடையே போதிய ஓய்வும் அவசியம். உடலையும், உள்ளத்தையும் உறுதிப்படுத்த மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள் பெரிதும் துணை நிற்கும். சிரசாசனம், சர்வாங்காசனம், விபரீதகரணி போன்ற தலைகீழ் ஆசனங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, முகத்துக்கும் தலைக்கும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனங்களைச் செய்யக்கூடாது.
சுகப் பிராணாயாமம்
‘பிராண’ என்றால் ஆற்றல், சக்தி. ‘நியமம்’ என்றால் ஒழுங்கு. மூச்சை முறையாக ஒழுங்கு படுத்தி விடுவதே பிராணாயாமம். கால்களை நன்றாக மடித்து சம்மணக்காலிட்டு தரையில் அமரவேண்டும். இந்த நிலையை சுகாசனம் என்கிறோம். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். ஆரம்ப நிலையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொள்ளலாம். இரு கைகளையும் தியான முத்திரையில் வைத்துக் கொள்ளுங்கள். ஆள்காட்டி விரலை கட்டை விரல் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இதுதான் தியான முத்திரை. இப்போது மூச்சை பொறுமையாக இழுத்து பொறுமையாக விடவேண்டும். இதை 15-25 முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
காலை மற்றும் மாலையிலும் 4 மணி முதல் 6 மணிக்குள் செய்வது அதிக பலன் தரும். எவ்வளவு தூரம் மூச்சை உள்வாங்க முடியுமோ இழுத்து, மெதுவாக மூச்சை வெளியில் விடவும். ஆரம்ப நிலையில், ஒருபோதும் மூச்சை உள்ளடக்கி வைக்க முயற்சிக்க வேண்டாம். இதனால் இதயம் சிரமப்படும்.
ஆதம் பிராணாயாமம்
ஆதம் என்றால் கீழே அல்லது அடிப்பகுதி. வயிறு மற்றும் வயிற்றுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மூச்சுப் பயிற்சி இது. ஏற்கெனவே சுகப் பிராணாயாமத்தில் உட்கார்ந்தது போலவே, சுகாசனத்தில் அமர வேண்டும். இரு கைகளையும் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். இரு கைகளின் நடுவிரல் தொப்புளைத் தொட்டபடி இருக்கட்டும். இப்போது மூச்சை நன்கு உள்வாங்கி மெதுவாக வெளியில் விடவேண்டும். முதலில் 9 முறையில் ஆரம்பித்து படிப்படியாக 15-25 வரை செய்யலாம்.
மத்யம் பிராணாயாமம்
சுகாசனத்தில் அமர்ந்து நமது இரு கைகளையும் நடு மார்பு பகுதியில் வைத்து இப்போது மூச்சை நன்கு உள்வாங்கி மெதுவாக வெளியில் விட வேண்டும். இந்த மூச்சுப் பயிற்சி நமது இதயத்தை பலப்படுத்துகிறது.
ஆதியம் பிராணாயாமம்
சுகாசனத்தில் அமர்ந்து கைகளைக் கழுத்துப் பகுதியில் வைத்து, மூச்சை நன்கு உள்வாங்கி மெதுவாக வெளியில் விட வேண்டும்.
வஜ்ராசனத்தில் அமர்ந்தும் இப்பயிற்சிகளைச் செய்யலாம்.
- யோகம் வரும்...
எழுத்து: ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT