Published : 13 Sep 2017 09:27 AM
Last Updated : 13 Sep 2017 09:27 AM
அ
ன்னதானம் அடுத்த பரிணாமத்தை அடைந் திருப்பதாக ஏற்கெனவே இங்கே.. இவர்கள்.. இப்படி! பகுதியில் நாம் சொல்லியிருந்தோம். இதோ, இங்கொருவரும் அப்படித்தான் இயலாதவர்களுக்கு தினமும் அன்ன சேவை செய்கிறார்!
‘பசி என்று வந்தவருக்கு புசி என்று ஒரு பிடி உணவை கொடுத்துப் பாரப்பா..’ என்றார் ராமலிங்க வள்ளலார். பசி நெருப்புக்கு ஒப்பானது. அந்த நெருப்பை அணைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வடலூரில் வள்ளலார் மூட்டிய அடுப்பு இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. அவரது வழியில்தான் தினமும் இந்த அன்ன சேவையைச் செய்வதாகச் சொல்கிறார் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன்.
120 பேருக்கு ஒருவேளை உணவு
எல்லா ஊர்களையும் போல உடுமலைப்பகுதியிலும் ஆதரவற்று விடப்பட்ட ஜீவன்களை ஆங்காங்கே பார்க்கமுடியும். இவர்களின் பலர் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே குப்பைகளைக் கிளறி அதில் கிடைக்கும் கெட்டுப்போன உணவுப் பொருட்களை எடுத்துத் தின்றுகொண்டிருப்பார்கள். என்ன செய்வது.. பசி வந்தால் தான் பத்தும் பறந்து விடுகிறதே! முன்பு, இவர்களைக் கவனிக்க ஆளில்லாமல் இருந்தது. இப்போது, இவர் களையும் கவனிக்க ஒரு ஜீவனிருக்கிறது. அவர்தான் பாலமுருகன்!
உடுமலையில் ரீவைண்டிங் தொழில் செய்து வருபவர் பாலமுருகன். ஆதரவற்றோருக்கு தினமும் காலையில் அவர்களது இடத்துக்கே தேடிப் போய் ஒருவேளை உணவளித்து வருகிறார் இவர். கடந்த ஒரு வருடம் முன்பு சாதாரணமாய் நினைத்து இவர் தொடங்கிய இந்த அன்ன சேவையின் மூலம் இப்போது தினமும் 120 பேருக்கு ஒருவேளை உணவுக்கு உத்தரவாதம் கிடைத்திருக்கிறது.
தினமும் அதிகாலையில்..
அதிகாலையிலேயே தனது வீட்டில் தயாராகிவிடும் உணவை சூடு குறைவதற்குள் பொட்டலங்களாக மடித்து அடுக்கிக் கொண்டு, தண்ணீர் பாட்டில்கள் சகிதம் சூரியன் விழிக்கும் முன்னதாகவே புறப்பட்டு விடுகிறது பாலமுருகனின் அன்ன சேவை வாகனம்.
அப்படியே, போகிற போக்கில் அன்றைய தினத்துக்கு யார் வருகிறார்களோ அவர்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு ஆதரவற்றோரின் இடம் தேடி விரைகிறார் பாலமுருகன். யாருமில்லாத பட்சத்தில் தனது பிள்ளைகளைக் கூட்டிக் கொள்கிறார். சற்று நேரத்தில், உடுமலை மத்திய பேருந்து நிலையம், பழநி செல்லும் சாலை, பழைய பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, ராஜேந்திரா சாலை, தளி சாலை என நகரின் நாலாபக்கமும் சென்று ஆதரவற்றோரின் கைகளில் நிறைகிறது இவரது காலை உணவு.
எனது சுயநலமும் இருக்கிறது
தனது அன்ன சேவை குறித்து நம்மிடம் நெகிழ்ந்து பேசிய பாலமுருகன், “பொள்ளாச்சியில் நண்பர் ஒருவர் இதுபோல இயலாதவர்களுக்கு உணவளித்து வருகிறார். இதற்கு முன்பு, எங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் வந்தால் ஏழைகளுக்கு உணவளிப்போம். ஒரு கட்டத்தில், நமக்கு அருகிலிருக்கும் ஏழைகளுக்கு தினமும் ஏன் இந்த உதவியைச் செய்யக்கூடாது என எனக்குத் தோன்றியது. உடனேயே செயலில் இறங்கிவிட்டேன்.
ஆரம்பத்தில், தினமும் 20 பேருக்குத்தான் என்னால் உதவ முடிந்தது. போகப் போக எனது சேவையைப் புரிந்துகொண்ட நண்பர்கள் சிலர், அரிசி, பருப்பு என பொருள்களைத் தந்து ஊக்கப்படுத்தினர். சிலர், உதவிக்கும் வந்தார்கள். அப்படித்தான் இந்த எண்ணிக்கை 120 ஆனது. வள்ளலாரின் வழியில், பசித்தவருக்கு உணவளிக்கும் இந்த அன்ன சேவை எங்களுக்கு மிகுந்த மனநிம்மதியைத் தருகிறது. இது, எனக்குப் பிறகும் தொடரணும். அதற்காகத்தான் எனது பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்கிறேன். இதில், வறுமையும் பசியும் எவ்வளவு கொடியது என்பதை எனது பிள்ளைகளும் உணர வேண்டும் என்ற எனது சுயநலமும் இருக்கிறது.” என்று சொன்னார்.
தொடரட்டும் இவரது அன்ன சேவை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT