Published : 16 Sep 2017 10:55 AM
Last Updated : 16 Sep 2017 10:55 AM
சு
வர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். அதுபோல, நமது தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால்தான், வாழ்க்கையில் நம் குறிக்கோள்களை எளிதில் அடைய முடியும். நல்ல உணவு உண்ணுதல், நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தல், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவை உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிகளில் முக்கியமானவை. இவை அல்லாது, நமது பாரத தேசத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பதஞ்சலி முனிவர், ‘யோகாசனம்’ என்ற ஒரு பயிற்சி வகையைத் தோற்றுவித்தார். அது வம்சாவளியாகத் தொடர்ந்து, இன்று நம் நாட்டில் எண்ணிலடங்கா யோகப் பயிற்சி நிலையங்களாக வளர்ந்து நிற்கின்றன.
உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதிலும், அதைத் தக்கவைத்துக்கொள்வதிலும் யோகாசனம் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அத்தகைய யோகாசனக் கலையை நமது ‘தி இந்து’ வாயிலாக வாசகர்களுக்குப் பயிற்றுவிக்க, தமிழகத்தின் தலைசிறந்த யோகப் பயிற்சி நிபுணர்களில் ஒருவரான டாக்டர் புவனேஸ்வரி ஒப்புக்கொண்டுள்ளார். நாளை முதல் யோகப் பயிற்சிகளை அவர் நமக்கு வழங்கவுள்ளார். யோகப் பயிற்சியாளரை அறிமுகப்படுத்தும் வகையில் அவருடன் ஒரு நேர்காணல்.
டாக்டர் புவனேஸ்வரி, உங்களைப் பற்றி...
நான் மருத்துவம் படித்த டாக்டர் அல்ல. யோகக்கலையில் விரிவான படிப்பை மேற்கொண்டு யோகாசனத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறேன். பெரும்பாலும் உடம்பைக் குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குமான ஒரு பயிற்சியாகத்தான் மக்கள் யோகக்கலையை நினைக்கின்றனர். ஆனால், யோகக்கலை மற்றும் அதன் பயிற்சிகளை உடற்கூறு இயலோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும்போது, அதன் பலன் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும்.
பொதுவாக மருத்துவம், பொறியியல் துறைகளை மட்டுமே வாழ்வாதாரக் கல்வியாகப் பார்க்கும் சூழலில், நீங்கள் இத்துறையைத் தேர்ந்தெடுத்த காரணம்..?
நான் 7-ம் வகுப்பு படிக்கும்போது, காஞ்சி மடத்தில் பகவத்கீதை போட்டி நடத்தினார்கள். அதில் முதல் பரிசு பெற்றேன். அதற்குப் பரிசாகக் கிடைத்த 3 புத்தகங்களில் ஒன்று யோகக்கலை பற்றியது. முதலில் படித்தபோது தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்புதான் அதைப் பற்றிய புரிதல் கிடைத்தது. பின்னர் பெற்றோர் அனுமதியோடு ரிஷிகேஷ் சென்று அங்கேயே 5 ஆண்டு காலம் தங்கி, யோகக்கலை பயின்றேன். பின்னர் சிறிதுகாலம் கேரளாவில் உள்ள சிவானந்தா யோகா குருகுலத்தில் பயின்றேன். அதற்குப் பிறகு, யோகக்கலையில் முனைவர் பட்டம் பெற ஆயத்தமாகி அதில் வெற்றியும் கண்டேன். யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமே அல்ல. மருத்துவ ரீதியாக உடல் உபாதைகளுக்கும், உடல் சார்ந்த மற்ற விஷயங்களுக்கும் யோக சிகிச்சை மூலமாக தீர்வு கிடைக்கும் என்பது நான் கண்டறிந்த ஒன்று. இப்போது பயிற்சி வகுப்புகள் மட்டுமின்றி ஒரு மருத்துவமனையையும் நிறுவி, யோகாசனங்கள் பற்றிய மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன். இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியைக் கொடுக்கிறது.
யோகம் என்பதைப் பற்றி எளிதாக கூறுங்களேன்.
நமக்கு யோகக்கலையை அளித்த பதஞ்சலி முனிவர், ‘யோகம் செய்வதற்கே ஒரு யோகம் வேண்டும்’ என்று கூறியுள்ளார். கண்ணை மூடி நம் மூச்சுக் காற்றை நன்கு கவனிக்க வேண்டும். கண்ணை மூடி நமக்குள் ஓடும் எண்ண அலைகளைக் கவனிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்வதற்குக்கூட நேரம் இல்லை என்று கூறிக்கொண்டு, வேறு எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். தற்போதைய காலகட்டத்தில், அனைவருக்குமே நேரம் என்பது அரிதான ஒன்றாக ஆகிவருகிறது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடற்கூறியல் வெவ்வேறு. குறிப்பாக, பெண்களின் சிறப்பே அவர்கள் மட்டுமே தாய்மை என்ற அனுபவத்தை உணரமுடியும் என்பது. மிகவும் உன்னதமான இந்த அனுபவத்தை இந்த காலத்தில் நாகரிகம் என்ற பெயரில் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். பூப்பெய்தும் வயது காலப்போக்கில் குறைந்துகொண்டே வருகிறது. வளர்ந்து திருமண வயதை எட்டும்போது, அவளது கர்ப்பப்பை குழந்தையை உருவாக்கத் தன்னைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு, அந்தத் தருணத்தை ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும். ஆனால் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட பலவித உத்திகளைக் கையாளும்போது, அந்த கர்ப்பப்பை ஏமாற்றமடைந்து சோர்வாகிவிடும். அதன்பிறகு, தம்பதியர் குழந்தையை எதிர்நோக்கி எடுக்கும் முயற்சிகள் பெரும் தோல்வி அடைகின்றன. இம்மாதிரி பிரச்சினைகளுக்கும் யோகக் கலையில் தீர்வு உள்ளது.
இதுபற்றி சற்று விளக்கமாக கூறுங்கள்...
பெண்களுக்கு, திருமணத்துக்கு முன்பிருந்தே இதுதொடர்பாக ஆலோசனைகளை வழங்குகிறேன். திருமணமான பிறகும் யோகாசனங்களைப் பயிற்றுவித்து, குழந்தையைப் பெற்றெடுக்க தயார் நிலைக்குக் கொண்டு வருகிறேன். பதஞ்சலி 84 லட்சம் ஆசனங்களை அளித்துள்ளார். உலகில் 84 லட்சம் வகை உயிரினங்கள் இருந்திருக்கின்றன என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உயிரினங்கள் சார்ந்தே ஆசனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதும் புலப்படுகிறது. இந்த ஆசனங்களில் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து பயிற்சி மேற்கொண்டால் காயத்தைக் கல்பமாக்கலாம்!
கர்ப்ப காலத்திலும் இப்பயிற்சிகளைச் செய்யலாமா ?
முன்பெல்லாம் பெண்கள் சர்வ சாதாரணமாக பல குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் செய்யும் வீட்டு வேலைகளிலும் ஒருவித உடற்பயிற்சி இயற்கையாகவே அமைந்திருந்தது. ஆனால் எல்லாம் இயந்திரமயம் ஆகிவிட்டதன் விளைவு, பெண்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகினர். ஒரு குழந்தை பெற்றெடுப்பதற்கே திணறிப்போகிறார்கள். சிறிதும் இயக்கம் இல்லாமல் குளிர்சாதன அலுவலகத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு, பிரசவம் என்பது ஒரு சவாலாகவே இருக்கும். அதனால், நிறைய மூச்சுப் பயிற்சிகளைச் சொல்லிக்கொடுப்போம். பிராணாயாமமும், முத்திரைகளும் சொல்லித் தருவோம். சுலபமாக பிரசவம் நடப்பதற்கான ஆசனங்களைச் சொல்லிக் கொடுப்போம். குழந்தை பெறுவதை கஷ்டமின்றி ஒரு சுகமான அனுபவமாக மாற்றியமைக்கும் திறன் கொண்டது யோகக்கலை.
மாதவிலக்கு நிற்கும் தருணத்தில் நிறைய சிரமங்களைச் சந்திக்கிறார்கள். அவர்களுக்கான தீர்வுகள் குறித்து...
இந்தப் பிரச்சினையை சார்ந்து வருவதுதான் கர்ப்பப்பை இறங்குதல், ஹெர்னியா போன்ற உபாதைகள். 35-40 வயதுக்குள்ளாக இதற்கான பிரத்யேக யோகப் பயிற்சியை மேற்கொண்டால் இப்பிரச்சினைகளை எளிதில் தவிர்க்கலாம்.
யோகாவால் எல்லோருக்குமான பொதுப்பயன்கள் என்ன?
முறையாக யோகப் பயிற்சி செய்தால் உடலில் சோர்வு இருக்காது. நல்ல உத்வேகம், உற்சாகத்தைக் கொடுக்கும். அதனால்தான் இதை ஆங்கிலத்தில் ‘இசோடானிக்’ என்பார்கள். அதேபோல இள வயது முதல் யோகப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மூட்டு வலி, இதயம் - கல்லீரல் சம்பந்தமான நோய்கள் எல்லாவற்றையும் வரவிடாமல் அறவே தவிர்த்துவிடலாம். ஸ்திரம் - சுகம் - ஆசனம். இவை மூன்றும் யோகக்கலையின் மூலமந்திரங்கள். கற்றுக்கொண்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே உடலில் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். உடலில் ஏற்படக்கூடிய எந்த ஒரு வியாதிக்கும் யோகக்கலையில் நல்ல தீர்வு உண்டு!
- யோகம் பெறுவோம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT