Published : 19 Sep 2017 10:43 AM
Last Updated : 19 Sep 2017 10:43 AM
நம்மையும், உயிரற்ற ஜடப்பொருளையும் வித்தியாசப்படுத்துவது எது தெரியுமா, நம் உடலில் இருக்கும் பிராணன்தான். அந்தப் பிராணன் இருப்பதால்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்; நம் உறுப்பு கள் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் பிராணன்தான் இயக்குகிறது. அனைத்து உறுப்புகளும் இருந்து, பிராணன் இல்லாவிட்டால் என்ன பயன்? அதனால், முதல்கட்டமாக நமது பிராணனை ஒழுங்குபடுத்த வேண்டும். உண்மையில், மூச்சுதான் அந்தப் பிராணன். மூச்சை நிலைநிறுத்தி, ஒரு ஒழுங்குக்கு கொண்டு வருவது தான் முதல்நிலை மூச்சுப் பயிற்சி.
சவாசனத்தில் படுத்து 9-15 முறை நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும் என்று பார்த்தோம். அதன்பிறகு, நிதானமாக ஒரு பக்கம் திரும்பியவாறு எழுந்து உட்கார வேண்டும். முதுகுத்தண்டை நேராக்கி, சாதாரணமாக சம்மணமிட்டு அமர வேண்டும். இந்த நிலையில் வேறு எந்தவித ஆசனங்களும் முயற்சி செய்ய வேண்டாம். கைகளில் உள்ள ஆள்காட்டி விரலும், கட்டை விரலும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருப்பதுபோல வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நன்றாக நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். இது ‘தியான முத்திரை’ எனப்படும். இதுபற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். இப்போது இந்த நிலையில் கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக மூச்சை இழுத்து விடவேண்டும். இப்போது நமது உடலும் மனமும் யோகம் பயில தயார் நிலைக்கு வந்துவிட்டன.
அடுத்து நமக்கு எழக்கூடிய கேள்வி, ஒரு நாளுக்கு எத்தனை ஆசனங்கள் செய்ய வேண்டும் என்பது. மொத்தம் எத்தனை ஆசனங்கள் உள்ளன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
கேட்டால் மலைத்துப் போவோம்! யோக சாஸ்திரத்தில் மொத்தம் 84 லட்சம் ஆசனங்கள் இருக்கின்றன. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு ஆசனம் என்ற அடிப்படையில் பதஞ்சலி முனிவர் வரையறுத்துள்ளார். இந்த 84 லட்சம் ஆசனங்களையும் ஒருவர் கற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. அது தேவையும் அல்ல.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில், தூங்கி எழுந்தது முதல் அந்த நாள் முழுக்க நாம் முழு ஆற்றலுடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட 3 முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, நமது அனைத்து வேலைகளையும் சந்தோஷமாக செய்ய வேண்டும். நம் குடும்பத்தினருக்கு, நம் அலுவலகத்துக்கு, நம் நட்பு வட்டத்துக்கு என எதைச் செய்தாலும் சந்தோஷத்தோடும், அர்ப்பணிப்போடும் செய்ய வேண்டும். இரண்டாவதாக, எந்த வேலையை செய்யத் தொடங்கினாலும் அதை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். சிலருக்கு ஒரு வேலையைத் தொடங்கும்போது இருக்கும் உற்சாகம், அதை தொடர்வதில் இருக்காது. மூன்றாவதாக, இவை அனைத்தையும் செய்வதற்கு நம் உடலில் எந்த அளவுக்கு சக்தி, ஆற்றல் உள்ளது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். மலையைப் புரட்ட வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை; ஆனால், அதற்கேற்ற உடல் உறுதியும், மன உறுதியும் வேண்டாமா?
நாம் செய்ய நினைக்கும் வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு, நம் உடல் மற்றும் மனதுக்கு வலிவையும், பொலிவையும் தருவதற்காகத்தான் யோகப் பயிற்சியை செய்யப் போகிறோம். நம் உடல்நலனுக்காக நாம் செலவிடப்போகும் ஒரு மணி நேர பயிற்சி, அடுத்து இருக்கக்கூடிய 23 மணி நேரமும் நம்மை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கும். நம் வேலைகளை சந்தோஷத்துடனும், முழுமையாகவும், சக்தியுடனும் செய்ய ஒரு நாளில் ஒரு மணி நேரம் செலவிடுவது தவறில்லை தானே!
எந்த ஒரு கட்டிடத்துக்கும் அஸ்திவாரம் வலுவாக இருப்பது அவசியம். இந்த உடல் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் நமது அன்றாடப் பணிகள், கடமைகள், வீட்டுப் பணிகள், அலுவலகப் பணிகள் அனைத்தும் அமைந்திருக்கின்றன. அவை அனைத்தும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், உடல் என்ற அஸ்திவாரம் ஆரோக்கியமாக, உறுதியாக, ஆற்றலோடு இருக்க வேண்டியது அவசியம். அதற்கு யோகா அவசியம். சரி, 23 மணி நேரம் உற்சாகமாக இருப்பதற்காக ஒரு மணி நேரம் செலவிடத் தயாராகிவிட்டோம். அந்த ஒரு மணி நேரத்தில் என்ன செய்யப்போகிறோம்?
திருமூலர் வாக்கின்படி, உயிர் தங்கக்கூடிய இறைவன் அளித்த இந்த உடம்பெனும் பாத்திரத்தை நாம் எவ்வாறு சுத்தமாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ளப் போகிறோம்? வரவிருக்கும் அத்தியாயங்களில், இதற்கான 24 உத்திகளைப் பார்க்க இருக்கிறோம்!
- யோகம் வரும்...
எழுத்தாக்கம்:
ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT