Published : 09 Sep 2017 09:56 AM
Last Updated : 09 Sep 2017 09:56 AM
இ
ந்திய விடுதலைக்காக எத்தனையோ தலைவர்கள் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்திருக் கிறார்கள். அவர்களில் சிலரே வரலாற்றில் இடம்பிடித்திருக் கிறார்கள்; வெகுசிலர் நாம் போற்றிக் கொண்டாட மறந்ததால் வரலாற்று வெளிச்சத்திலிருந்து விலகிப் போயிருக்கிறார்கள். சேலம் அர்த்தநாரீச வர்மாவும் அப்படி விலகிப்போன தியாகிதான்!
பாரதிக்கு இரங்கற்பா
சுப்பிரமணிய பாரதி - தனது கனல்கக்கும் கவிதைகளால் தேசத்தின் விடுதலை வேட்கையை தூண்டிய ஒப்பற்ற கவிஞன். பாரதியை அவரது 38-வது வயதில் இயற்கை அழைத்துக் கொண்டபோது, நாடு சுதந்திரப் போராட்டத்தின் உச்சத்தைக் கண்டிருந்தது. அவரது இறுதிச்சடங்கில்கூட சொற்பமான மனிதர்களே கலந்து கொண்டார்கள். அன்றைக்கு பாரதியின் இறுதிச்சடங்கில் பங்கெடுத்தது மட்டுமின்றி, அவருக்காக இரங்கற்பாவும் எழுதியவர் அர்த்தநாரீச வர்மா.
சேலத்தில், சுகவனம் - லட்சுமி தம்பதிக்கு மகனாக 1874 ஜூன் 27-ல் பிறந்தவர் அர்த்தநாரீசவர்மா. திருப்பூந்துருத்தி மடத்தில் குருகுல கல்வியை முடித்த இவர், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். 1911-ல் சேலத்தில் இயங்கிய சுதேசாபிமானி அச்சுக்கூடத்தில் மேனேஜராக பணிபுரிந்தார் வர்மா. அப்போது பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர், சுதந்திரப் போராட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டார். தானும் கவிதைகளையும் கருத்துக் களையும் எழுதி வெளியிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் பாரதியாரின் மரணம் நிகழ்கிறது. அந்த துக்க நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வர்மா, பாரதிக்காக பதினாறு வரிகளில் இரங்கற்பா எழுதினார். அதை சுதேசமித்திரன் பத்திரிகை வெளியிட்டது.
சத்திரியன் பத்திரிகை
அந்தக் காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இளைஞர் படை ஒன்று நாடு முழுவதும் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வந்தது. அந்தப் படையில் வர்மாவும் அவரது நண்பர் கோவை பூபதி பழனியப்பாவும் இருந்தார்கள். சுதந்திரக் கருத்துக்களை பரப்புவதற்காக சத்திரியன் என்ற பத்திரிகையை தொடங்க நினைத்தார் பூபதி பழனியப்பா. ஆனால், அம்முயற்சி முழுவடிவம் பெறுவதற்குள் அவர் காலமாகிவிடுகிறார். இதையடுத்து நண்பனுக்காக சத்திரியன் பத்திரிகையை 1923-ல், பி.மாணிக்கம்பிள்ளை என்பவரை பதிப்பாளராக வைத்து தொடங்கினார் வர்மா. ஆனால், மூன்றாண்டுகளுக்கு மேல் அவரால் அதை நடத்த முடியவில்லை.
சிறிது இடைவெளிவிட்டு, 1931-ல் வீரபாரதி என்ற பத்திரிகையின் ஆசிரியரானார் வர்மா. இந்தப் பத்திரிகைக்கான நிதி ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி தந்தது. சுதந்திரப் போராட்ட வீரன் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, ஆங்கிலேய அதிகாரிகளை தீர்த்துக்கட்டும் சிந்தனையுடன் இளைஞர் குழுக்கள் ரகசிய திட்டங்களை தீட்டின. இதற்கான மறைமுக பிரச்சாரத்தை வீரபாரதி பத்திரிகை மூலம் பரப்பினார் வர்மா. இதையடுத்து, இந்திய மொழி பத்திரிகைகளுக்கான தணிக்கைச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்தது ஆங்கிலேய அரசு.
வீரபாரதிக்கு தடை
திருத்தம் தொடர்பான தீர்மானம் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, அரசுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிவிடும் பத்திரிகைகள் பட்டியலிடப்பட்டன. அதில், தமிழகத்திலிருந்து வெளிவந்த வீரபாரதி, விஷ்வ கர்நாடகா, காங்கிரஸ் பத்திரிகைகளும் இருந்தன.
வாரம் மும்முறையாக வெளியாகிக் கொண்டிருந்த வீரபாரதியை தினசரியாக கொண்டுவர நினைத்தார் வர்மா. ஆனால், 64 இதழ்களுக்கு மேல் அவரால் வீரபாரதியை நடத்தமுடியவில்லை. காரணம், ஆங்கிலேய அரசாங்கம் கொண்டுவந்த சட்டத் திருத்தம். வீரபாரதியுடன், முன்பு நின்றுபோன சத்திரியன், சத்திரிய சிகாமணி, தமிழ்மன்னன் உள்ளிட்ட பத்திரிகை களையும் நடத்தி வந்த வர்மா, பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி இருக்கிறார். இலக்கியத் தளத்திலும் தனக்கான இடத்தைத் தக்கவைத்த இவர், தனது இறுதி நாட்களை திருவண்ணாமலையில் தங்கிக் கழித்தார். 1964-ல் தனது 90-வது வயதில் மரணத்தை தழுவிய வர்மாவுக்கு திருவண்ணாமலையிலேயே சமாதியும் எழுப்பப்பட்டது. அத்துடன் அவரது தியாகத்தையும் தேசவிடுதலைக்கான அவரது பங்களிப்பையும் மெல்ல மறந்து போனது தேசம்.
வரலாற்றுப் பக்கங்களில்..
இதுகுறித்த நம்மிடம் பேசிய வர்மா வரலாறு ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அண்ணல் வெளியீடு பதிப்பகத்தின் உரிமையாளர் ஆறு.அண்ணல், “பாரதிக்கு இரங்கற்பா எழுதிய ஒரே கவிஞர் அர்த்தநாரீச வர்மா. ஆனால், தேச விடுதலைக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்த வர்மாவுக்கு வரலாற்றுப் பக்கங்களில் நாம் முக்கிய இடமளிக்கத் தவறிவிட்டோம்.
தனது மங்கள மனைவியுடன் ஊர் ஊராய்ச் சென்று விடுதலை முழக்கமிட்டதாக கவிதை பாடியிருக்கிறார் வர்மா. வர்மாவின் புகழை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக, அவரது சத்திரியன் இதழின் 5,840 பக்கங்களை 17 தொகுதிகளாக 2010-ல் வெளியிட்டோம். இப்போது, வீரபாரதியின் 64 இதழ்களையும் அப்படியே வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
திரு.வி.க. பாராட்டு
குடந்தை தமிழ்ப்பேரவை ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் அர்த்தநாரீச வர்மா நினைவு நாள் கருத்தரங்கை நடத்துகிறது. அதன் நிறுவன தலைவரும் திண்டிவனம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வருமான அ.ம.சத்தியமூர்த்தி நம்மிடம் பேசுகையில், “சுதந்திரப் போராட்டத்தில் தீவிர போக்கை ஆதரித்தவர் என்றபோதும் காந்தியை கடவுளுக்குச் சமமாக மதித்தவர் வர்மா. 1920-ல் நடந்த வட ஆற்காடு அரசியல் மாநாட்டில் பேசிய திரு.வி.க. ‘சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும் அர்த்தநாரீச வர்மாவின் பாடல் களும் மக்கட்கு தேசபக்தியை ஊட்டுவது போல் கற்றை கற்றையாக அரசியல் நூல்களை ஓதியவரின் சொற்பெருக்குகளும் ஊட்டா’ என புகழ்ந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட மனிதரை நாம் போற்ற மறந்துவிட்டோம் வர்மாவின் புகழும் தியாகமும் காலத்துக்கும் நிலைத் திருக்கும் வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார். வர்மா குறித்த தகவலை நமக்குத் தந்த ஏலகிரி பாரதி தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் ஞானபாரதி ஏ.சி.வெங்கடேசனும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.
நாளை மறுநாள் மகாகவி பாரதியார் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT