Published : 22 Sep 2017 09:27 AM
Last Updated : 22 Sep 2017 09:27 AM
ஒரு காலத்தில், பையனுக்கு உதகை இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் (ஹெச்.பி.எஃப்) தொழிற்சாலையில் வேலை என்றால் கண்ணை மூடிக்கொண்டு பெண் கொடுப்பார்கள். அப்படி கவுரமாக நடத்தப்பட்டு வந்த ஹெச்.பி.எஃப் தொழிற்சாலையில், இப்போது நிலுவைச் சம்பளத்தைத் கேட்டு குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள் !
இந்திரா காந்தி தொடங்கியது
உதகையில் 1967-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் ஹெச்.பி.எஃப் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. தெற்காசியாவின் ஒரே ஃபிலிம் தொழிற்சாலை என்ற பெருமையுடைய இந்த ஆலையில் தொடக்கத்தில் போட்டோ ஃபிலிம் ரோல், எக்ஸ்-ரே பிலிம், கருப்பு - வெள்ளை ஃபிலிம், ‘ப்ரோமைட் பேப்பர்’ ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. இதன் மூலம் 5,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்து வந்தனர். குறிப்பாக இந்தத் தொழிற்சாலையில், பார்வையற்ற பலருக்கு வேலை வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலையை மேலும் விரிவுப்படுத்த எண்ணிய மத்திய அரசு, 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எக்ஸ்-ரே தொழிற்சாலையை, உதகை இந்து நகர் பகுதியில் அமைத்தது. இரண்டு தொழிற்சாலைகளுமே லாபகரமாக இயங்கி வந்த நிலையில், 1991-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் ஆலைக்கு ஆபத்து வந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையால் பல அந்நிய முதலீட்டாளர்களும், தனியார் ஃபிலிம் நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் நுழைந்தார்கள். இதனால், லாபத்தில் இயங்கி வந்த ஹெச்.பி.எஃப் தொழிற்சாலை நஷ்டத் தில் தள்ளப்பட்டது.
மூடப்படுவது உறுதி
இதையடுத்து, தொடர் சரிவை சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், விருப்ப ஓய்வு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொழிலாளர்களைப் படிப்படியாக குறைக்க ஆரம்பித்தது மத்திய அரசு. தற்போது இங்கு, 167 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்களையும் அடுத்த சில மாதங்களில் வெளியேற்ற வேலைகள் நடப்பதால் பொன்விழா ஆண்டில் இந்தத் தொழிற்சாலை மூடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஹெச்.பி.எஃப் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் மஞ்சை வி.மோகன் தனது ஆதங்கத்தைக் கொட்டினார். “ஹெச்.பி.எப் தொழிற்சாலை சுமார் 570 ஏக்கரில் அமைந் திருக்கிறது. இதில் தமிழக அரசுக்கு சொந்தமான நிலம் மட்டுமே 303 ஏக்கர். இந்த தொழிற்சாலை வளாகத்துக்குள், சின்னதாய் ஒரு நகரத்தையே கட்டமைக்கும் அளவுக்கு அடிப்படை வசதிகள் இருக்கின்றன. புதிய பொருளாதாரக் கொள்கையின் வரவால் ஃபிலிம் உற்பத்தியில் தான் பின்னடைவு ஏற்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட எக்ஸ்-ரே ஃபிலிம் உற்பத்திக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இங்கு உற்பத்தியான எக்ஸ்-ரே ஃபிலிம்கள் தான் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்பட்டன. இங்கிருந்து ஃபிலிம் அனுப்பப்பட்ட வரை, அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்-ரே இலவசமாக எடுக்கப்பட்டது. இங்கே உற்பத்தியை நிறுத்திய பிறகுதான் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்-ரே எடுக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.
‘மேக் இன் இந்தியா’ என சொல்லிவிட்டு..
மற்ற தயாரிப்புகளை நிறுத்தியிருந்தாலும் எக்ஸ்-ரே உற்பத்தியை நிறுத்தாமல் தொடர்ந்திருந்தால் இன்றைக்கு இந்தத் தொழிற்சாலையை மூடக்கூடிய நிலை வந்திருக்காது. ஆனால், நிர்வாக குளறுபடிகள் காரணமாக அது நடக்காமல் போய்விட்டது. எக்ஸ்-ரே மட்டுமின்றி, பூமிக்கடியில் செல்லும் காஸ் குழாய்களில் கசிவை கண்டறிய உதவும் ஃபிலிம்களும் இங்கு தயார்செய்யப்பட்டன. ராணுவத்திலும் இந்த ஃபிலிம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கே உற்பத்தியை நிறுத்திவிட்டதால் தற்போது ராணுவத்துக்கே வெளிநாடுகளிலிருந்து ஃபிலிம் இறக்குமதி செய்யப்படுகிறது.
‘மேக் இன் இந்தியா’ எனச் சொல்லிவிட்டு, உள்நாட்டுத் தொழிற்சாலைக்கு பூட்டுப் போடுவது கவலையளிக்கிறது. சிறு, சிறு மாற்றங்களைச் செய்தால் மீண்டும் இங்கே உற்பத்தியை தொடங்கலாம். அதேசமயம், தொழிற்சாலையை மூட அரசு முடிவெடுத் துள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது வேந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. நிலுவையில் உள்ள சம்பளத்தைக் கேட்டு நாங்கள் குடும்பத்துடன் பிச்சையெடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால், நிர்வாகம் எதற்குமே இறங்கிவர மறுக்கிறது” என்றார் மோகன்.
உற்பத்தி இல்லை; ஊதியம் இல்லை
“இந்தத் தொழிற்சாலையை மீண்டும் பழையபடி செயல்பட வைப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்று சொல்லும் இந்த ஆலையின் பொதுமேலாளர் வினயன், ”தொழிற் சாலையில் உற்பத்தி இல்லை என்பதால் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கமுடியவில்லை. இடையில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மட்டுமே மத்திய அரசு நிதியளித்து வந்தது. அதுவும் கடந்த ஓராண்டாக நிறுத் தப்பட்டதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாத சூழல் நிலவுகிறது” என்றார்.
இது தொடர்பாக ஹெச்.பி.எஃப் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) கிரீஷ்குமாரை தொடர்பு கொண்டோம். ஹெச்.பி.எஃப் ஆலை பிரச்சினை என நாம் ஆரம்பித்ததுமே, ”நான் ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்; பிறகு பேசலாம்” என்று சொன்னவர், அதன்பிறகு நமது அழைப்பை ஏற்கவே இல்லை.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் இன்னமும் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில், ஹெச்.பி.எஃப் தொழிற்சாலை வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்கி அந்தத் தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம் என்ற கருத்தும் பேசப்படுகிறது. அண்மையில், இந்தத் தொழிற்சாலையை ஆய்வு செய்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, ‘இங்கு மருத்துவக் கல்லுாரி அமைக்கப் பரிந்துரைக்கும் யோசனையும் உள்ளது’ என்று தெரிவித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT