Published : 20 Sep 2017 11:12 AM
Last Updated : 20 Sep 2017 11:12 AM
யோகா செய்வதற்கு உடலையும், மனதையும் முதலில் தயார்படுத்து வது அவசியம் என்று பார்த்தோம். அதற்காக, கண்ணை மூடிய நிலையில், நிமிர்ந்து உட்கார்ந்து, கைகளில் தியான முத்திரை வைத்தபடி பொறுமையாக மூச்சை இழுத்துவிட்டோம். ஒரு தொடர் ஓட்டப் பந்தயத்துக்குத் தயாராவதுபோல, நாம் செய்யப்போகும் பயிற்சிகளுக்கு ஏற்றவாறு, நம் உடலில் உள்ள அத்தனை தசை, மூட்டு, எலும்பு போன்றவற்றை நாம் சரிசெய்து தயார்படுத்த வேண்டும். உடம்பில் உள்ள மூட்டுகள் வலுவாக இருந்தால்தான், நாம் கைகளைத் தூக்கி, சுழற்றி பயிற்சிகளைச் செய்ய முடியும்.
எந்த ஒரு சின்ன வேலையாக இருந்தாலும் அதற்கான முன்னேற்பாடுகள் அவசியம். அதுபோல, நம் உடலை ஒரு மிகப் பெரிய பயிற்சிக்கு உட்படுத்தும்போது, உடலின் மற்ற பாகங்களுக்கு சின்னச் சின்ன பயிற்சிகள் கொடுப்பதன் மூலம், உடலை தயார்நிலையில் வைக்க வேண்டியது அவசியமாகிறது.
ஸ்திரம், சுகம் , ஆசனம்
யோகாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘ஸ்திரம், சுகம், ஆசனம்’ என்பார்கள். ஸ்திரம் என்றால் நிலையாக உடலை, உடல் உறுப்புகளை வைப்பது. சுகம் என்பது எந்த அசவுகரியமும் இல்லாமல் அந்த நிலையிலேயே உடம்பை வசதியாக, சுகமாக வைப்பது. அதனால்தான் ‘ஸ்திரம் சுகம் ஆசனம்’ என்கிறோம். எனவே, நிலையாகவும், சுகமாகவும், சந்தோஷமாகவும் யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
சரி, நாம் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள ஒரு சின்ன பரிசோதனை செய்து பார்க்கலாம்!
சுய பரிசோதனை
இதற்கு எங்கும் போய் அலைய வேண்டாம். நம் வீட்டிலேயே தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொள்ளுங்கள். இப்போது, இரு கைகளையும் இடுப்புக்கு மேல் தூக்கிக்கொண்டு எழுந்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
உங்களால் கைகளை ஊன்றாமலேயே எழுந்துகொள்ள முடிகிறதா? அப்படியானால், நீங்கள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நமக்கு நாமே தோளில் தட்டி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால், அப்படி எழ முடியாமல் ஒரு கையை ஊன்றித்தான் எழ முடிகிறது என்றால், நீங்கள் 75 சதவீதம் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம். இரு கைகளையும் ஊன்றித்தான் எழ முடிகிறது என்றால், 50 சதவீதம் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று பொருள். இரண்டு கைகளை ஊன்றியும் எழ முடியவில்லையா? உடலை நாம் சரிசெய்யும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
இப்போது எழுந்து சுவர் ஓரமாக நின்றுகொள்ளுங்கள். இரு கால்களும் தரையில் நன்றாக பதிந்திருக்க வேண்டும். சுவரில் முதுகு நன்றாகப் பதியும்படி நிற்க வேண்டும். இந்த நிலையில் கண்களை மூடிக்கொண்டு, 5-9 முறை மூச்சை இழுத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால், நம் உடலும் நம்முடன் பயிற்சிக்குத் தயாராகிவிடும்.
பிறகு, இரு கால்களையும் நன்றாக சேர்த்து வைக்க வேண்டும். இரு கைகளையும் உடம் போடு சேர்த்து ஒட்டி வைக்க வேண்டும். பிறகு காதுகளை ஒட்டியிருக்குமாறு கைகளைப் பக்கவாட்டில் மெதுவாக மேல்நோக்கி உயர்த்த வேண்டும். முழங்கையும், புஜமும் சுவரிலும் பதிந்திருக்க வேண்டும். தலை நேராக இருக்கவேண்டும். இப்போது கையை நன்றாக தூக்கி இறக்கவேண்டும். இதேபோல, அடுத்து இடதுகையால் செய்ய வேண்டும். இந்த எளிய பயிற்சியை சிரமமின்றி செய்ய முடிந்தால் நம் கை, தோள்பட்டை ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இப்பயிற்சியைச் செய்தால், வருங்காலத்தில் Frozen Shoulder எனப்படும் உறைந்த தோள்பட்டை பிரச்சினை வராது.
‘தோள்கொடுப்போம்’
தவிர, ஐ.டி. துறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து 8-12 மணி நேரம் வேலை செய்கின்றனர். இதனால், கைகள் மட்டும் ஒரே நிலையிலேயே அசைந்து கொண்டிருக்கிறது.
இதுபோன்ற பணியில் இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் கைகளைத் தூக்கி தலை வாருவது, ஆடை அணிந்து கொள்வது கூட இயலாமல் போய்விடும். இருசக்கர வாகனங்களில் வெகுதொலைவு பயணிப்பவர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.
எனவே, எளிமையான இந்த பயிற்சியை தினமும் மேற்கொண்டால், தோள்பட்டை பிரச்சினை வரவே வராது. இதற்கு ஒதுக்க வேண்டிய நேரம் அதிகபட்சம் 15 நிமிடங்கள். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வெறும் 15 நிமிடம் நம் தோளுக்கு ‘தோள்கொடுக்க’ கூடாதா!
- யோகம் வரும்...
எழுத்தாக்கம்:
ப.கோமதி சுரேஷ்
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT