Published : 13 Sep 2017 09:26 AM
Last Updated : 13 Sep 2017 09:26 AM

நாளும் சேவை.. நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகள்..!

மா

தச் சம்பளத்தில் அவரவர் குடும்பத் தேவை களையே முழுமையாக கவனிக்க முடியவில்லை. இந்தச் சூழலில், தனது குடும்ப வருமானத்தில் கால் பங்கை இயலாதவர்களுக்கு உதவி செய்ய ஒதுக்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த ஒரு மனிதநேயர்!

பாராட்டுவது இவரது இயல்பு

மதுரை பரசுராம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். வேளாண் அலுவலரான இவர், தனது குடும்ப வருவாயில் 25 சதவீதத்தை முகம் தெரியாத நபர்களுக்கு உதவிட மட்டுமே ஒதுக்கிவைக்கிறார். தனது உதவியால் இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு உதவியிருக்கிறார் இவர். ஆண்டு தோறும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களைத் தேடிச் சென்று பரிசு வழங்கிப் பாராட்டுவது இவரது இயல்பு. ஒவ்வொரு ஆண்டும் பத்து ஏழைக் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களின் மேல்படிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கிறார். அப்படி, இவரால் கைதூக்கிவிடப்பட்ட பிள்ளைகளில் பலர் இன்றைக்கு உன்னத நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

கல்விச்சேவை இப்படியிருக்க.. விடுமுறை நாட்களில் முதியோர்கள் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளையும் செய்து கொடுக்கிறார் ஆறுமுகம். ஊனமுற்றோர் இருந்தால் அவர்களுக்கான உபகரணங்களையும் வாங்கித் தருகிறார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தால் அங்கேயும் வலியப்போய்ச் சென்று தன்னாலான உதவிகளைச் செய்கிறார் ஆறுமுகம். உதவும் தொகை பத்தாயிரம் ரூபாய்க்குள் இருந்தால் தானே அதைத் தந்துவிடுகிறார். அதைத் தாண்டினால் நண்பர்கள் மூலமாக அந்த உதவியைச் செய்ய வைக்கிறார்.

ஒரே நாளில் ஒரு லட்சம்

இப்படித்தான் ஒருமுறை, மதுரையைச் சேர்ந்த காமாட்சி என்ற மாணவிக்கு தாய்லாந்தில் நடந்த ஊனமுற்றோருக்கான சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அதில் கலந்துகொள்வதற்கான நிதி ஆதாரம் ஏழையான காமாட்சியிடம் இல்லை. இதையறிந்த ஆறுமுகம், ஒரே நாளில் லட்ச ரூபாய் திரட்டி, காமாட்சியை தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தார். தங்கப் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய காமாட்சி, ஓடிவந்து நன்றி சொன்ன முதல் நபர் ஆறுமுகம்தான்!

தனது வேளாண்மை பணியிலும் சோடை போகாத இவர், விவசாயிகளுக்கான வேளாண் துறையின் சலுகைகளை கடைக்கோடி விவசாயிக்கும் தெரியவைக்கிறார். விடுமுறை நாட்களில் இளைஞர்களுடன் கைகோர்த்துக் கொண்டு, மரக் கன்றுகள் நடுவதை ஊக்கப்படுத்துகிறார். 2009-ல், மதுரை மாவட்டத்தில் அதிக மரக் கன்றுகள் நட்டு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தமைக்காக சுற்றுச்சூழல் விருதும், 2011-ல், சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுவதற்கு விவசாயிகளை ஊக்குவித்தமைக்காக சிறந்த வேளாண் அலுவலர் விருதும் மாவட்ட ஆட்சியர்களால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகள்

இவை தவிர 2014-15-ல், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக தமிழக அரசின் சிறந்த சமூகப் பணியாளர் விருதும் பெற்றுள்ளார் ஆறுமுகம். இப்படி, வேளாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விளையாட்டு, மருத்துவம், முதியோர் - ஊனமுற்றோர் நலன் என சுயநலமற்ற தனது பன்முக சேவைக்காக இதுவரை 8 ஆட்சியர்களால் விருதளித்துக் கவுரவிக்கப்பட்டிருக்கும் இவர், இதுவரை பெற்ற விருதுகள் நாற்பதுக்கும் அதிகம்!

வேளாண் அதிகாரி ஒருவர் சொன்ன இந்தத் தகவல்களை அறிந்து ஆச்சரியப்பட்டு ஆறுமுகத் திடம் பேசினோம். ”வாழும்போது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை விட எத்தனை பேருக்கு பிரயோஜனமாக வாழ்கிறோம் என்பதில்தான் ஆத்ம திருப்தி இருக்கிறது. மற்றவர்களுக்கு உதவி செய்து பாருங்கள். அப்புறம், அதில் கிடைக்கும் மன நிறைவும் மகிழ்ச்சியும் வேறெதிலும் கிடைக்காது என்று நீங்களே சொல்வீர்கள்’’ என்கிறார் ஆறுமுகம்.

ஆளாக்கிய சைக்கிள் கடைக்காரர்

தற்போது மதுரை மண் பரிசோதனை மையத்தில் வேளாண் அலுவலராக பணிபுரிகிறார் ஆறுமுகம். இவரது மனைவி பூபதி கிராமச் சுகாதாரச் செவிலியர். இவர்களுடைய ஒரே மகன், பொறியியல் பட்டயப் படிப்புப் படிக்கிறார். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு தனக்குள் வந்தவிதம் குறித்துச் சொன்ன ஆறுமுகம், “சிறு வயதிலேயே தந்தையை இழந்த எனக்கு ஏழாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை; எங்களது குடும்பம் அவ்வளவு வறுமையில் இருந்தது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, எங்கள் ஊரிலிருந்த சைக்கிள் கடைக்காரர் ஒருவர் தான் என்னை மறுபடியும் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்தார்.

அன்றைக்கு ஒரு சைக்கிள் கடைக்காரர் உதவியதால் தான் இன்றைக்கு நான் கைநிறையச் சம்பாதிக்கும் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறேன். அதை நினைத்துப் பார்த்து அந்த சைக்கிள் கடைக்காரரைப் போலவே, இல்லாதவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன். மதுரை மாவட்ட ஆட்சி யராக இருந்த சகாயம் சார் தான் எனக்குள் சமூக சிந்தனையை இன்னும் வேகமாகத் தூண்டிவிட்டவர்.

தொடக்கத்தில், மற்றவர்களுக்கு நான் இப்படி உதவி செய்வதால் எனக்கும் எனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், என்னால் உதவிபெற்றவர்கள் என்னைத் தேடிவந்து கண்கலங்கி நன்றி சொல்வதைப் பார்த்த அவர், தானாகவே மனம் மாறினார். தற்போது, என்னிடம் பணம் இல்லாவிட்டாலும் தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொடுத்து உதவச் சொல்கிறார். இப்போது, இயலாதவர்களுக்காக நாங்கள் இருவருமே சேர்ந்து குடும்ப வருமானத்தில் 25 சதவீதத்தை ஒதுக்கிச் செலவழித்து வருகிறோம்; ஆத்ம திருப்தியுடன் வாழ்கிறோம்” என்று சொன்னார்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x