Published : 02 Dec 2016 10:54 AM
Last Updated : 02 Dec 2016 10:54 AM
பட்ரோடு பகுதியில் பழுதான ஏடிஎம்
பரங்கிமலை பட்ரோடு அருகே கரையார்கோயில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், வேறு ஏடிஎம்களுக்கு சென்று பணம் எடுக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த ஏடிஎம்மை சரிசெய்து இயங்கச் செய்தால், இங்குள்ள மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
- என்.சவுந்தரவள்ளி, பரங்கிமலை.
வெள்ளகுளத்துக்கு பஸ் வசதி இல்லை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள வெள்ளகுளம் பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் 3 கி.மீ. தொலைவு நடந்து சென்று, பஸ் பிடித்து பள்ளிக்குச் செல்கின்றனர். இதனால் மாணவிகள் பலர் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களில் பலர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். எனவே பொன்னேரி - வெள்ளகுளம் இடையே பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.
- கே.எஸ்.நீலகண்டன், வெள்ளகுளம்.
சாலையை கடக்கும் வழிமூடல்
பழைய மாமல்லபுரம் சாலையில் (ஓஎம்ஆர்), சிடிஎஸ் நிறுவனம் எதிரில் பொதுமக்கள் கடக்கும் வகையில் இரு சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புகளில் வழி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழி தற்போது அடைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேம்பாலமோ, அருகில் சாலையை கடக்குமிடமோ இல்லாத நிலையில் பொதுமக்கள், ஆபத்தான முறையில் சாலை தடுப்பைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. அதனால் அப்பகுதியில் ஏற்கெனவே இருந்த வழியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
- பார்வதி ராஜேஷ், காரப்பாக்கம்.
மாங்காளி நகரில் நாய்கள் தொல்லை
அரும்பாக்கம் மாங்காளி நகர் 2-வது தெரு பகுதியில், தெரு நாய் ஒன்று சுற்றி வருகிறது. இது அப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுடன் சண்டையிட்டு, அவற்றை காயப்படுத்தி வருகிறது. பொதுமக்களையும் விரட்டி வருகிறது. எனவே, இப்பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி வரும் நாயைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாசகர், அரும்பாக்கம்.
சக்திநகர் பகுதியில் குடிநீர் மோட்டார் பழுது
பீர்க்கன்கரணை சக்திநகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மொத்தம் 198 குடும்பங்கள் உள்ளன. இந்தக் குடியிருப்பில் கடந்த சில மாதங்களாக குடிநீர் ஏற்றும் மோட்டார் பழுதாகிக் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அனைத்து பயன்பாட்டுக்கும் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு வசிப்போர், வெகுதூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். சில நேரங்களில் விலைக்கும் வாங்க வேண்டியுள்ளது. எனவே மோட்டாரை சரி செய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.எஸ்.செல்வம், பீர்க்கன்கரணை.
வடமேல்பாக்கத்துக்கு சிற்றுந்து வசதி வேண்டும்
மறைமலைநகர் அருகில் உள்ள வடமேல்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனால், அந்த ஊருக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. அங்குள்ள, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, செங்கல்பட்டில் இருந்தோ அல்லது மறைமலைநகரில் இருந்தோ வடமேல்பாக்கத்துக்கு மினி பஸ் (சிற்றுந்து) இயக்க வேண்டும்.
- வாசகர், சிங்கபெருமாள்கோவில்.
சிலிண்டர் விநியோகிக்க ரூ.50 வசூல்
ஊரப்பாக்கம் பகுதியில் எந்த எண்ணெய் நிறுவனத்தின்கீழ் காஸ் இணைப்பு வைத்திருந்தாலும், வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகிக்க வருவோர் கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கின்றனர். கொடுக்க மறுத்தால், சிலிண்டர் விநியோகிக்காமல் சென்றுவிடுகின்றனர். இதனால், வேறு வழியின்றி, ரூ.50 செலுத்தி சிலிண்டர்களை பெற்று வருகிறோம். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாசகி, ஊரப்பாக்கம்.
மணலி- அம்பத்தூர் நேரடி பஸ் வசதி தேவை
மணலியில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் மணலியில் உள்ள பல தொழிலாளர்கள் பெரம்பூர் வரை பஸ்ஸிலும், பின்னர் அம்பத்தூர் வரை ரயிலிலும் சென்று, அங்கிருந்து தொழிற்பேட்டைக்குச் செல்கின்றனர். தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மணலியில் இருந்து நேரடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு சின்னமாத்தூர் எம்எம்டிஏ பஸ் நிறுத்தம் வழியாக பஸ்களை இயக்க வேண்டும்.
- வாசகர், மணலி.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT