Published : 09 Dec 2016 10:22 AM
Last Updated : 09 Dec 2016 10:22 AM

உங்கள் குரல்: கிருஷ்ணகிரியில் சேதமான மின்கம்பங்களால் ஆபத்து

சேதமான மின்கம்பங்களால் ஆபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள கொல்லனூர் கிராமத்தில் 4 மின் கம்பங்கள் சேதம் அடைந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மக்களின் உயிருக்கு ஆபத்தான நிலை நிலவுகிறது. சேதமான மின் கம்பங்களை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயமுருகன், கொல்லனூர், ஊத்தங்கரை.

கழிவறைகள் பராமரிக்கப்படுமா?

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பல கழிவறைகளில் துர்நாற்றம் வீசுகிறது. குழாய்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால், ஆட்சியர் அலுவலகம் வருபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கழிவறைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.கோவிந்தன், சேலம்.

வங்கிகளில் தனி வரிசை வேண்டும்

பண மதிப்பு நீக்கத்தால், வங்கிகளில் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. தருமபுரி மாவட்டம் அரியகுளத்தில் ஓய்வூதியம் பெற வரும் முதியவர்கள் நெரிசலில் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, ஓய்வூதியம் பெற வருபவர்களுக்கு தனி வரிசை ஒதுக்கி பணம் வழங்க வேண்டும்.

- சூரியகாந்தி, அரியகுளம், தருமபுரி.

சென்டர் மீடியன் தேவை

சேலம் தாதகாப்பட்டி திருச்சி சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்கள் செல்வதற்கு போதிய இடமில்லாமல் நெருக்கடி நிலவுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும், சாலையில் சென்டர் மீடியன் அமைத்தால் விபத்துகளை தவிர்க்க முடியும்.

- கே.கணேஷ், தாதகாப்பட்டி, சேலம்.

நிழற்கூடம் ஆக்கிரமிப்பு

நாமக்கல் - திருச்சி சாலை ரமேஷ் தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதால் பயணிகள் நிற்க இடமில்லாத சூழல் நிலவி வருகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ம.ஆச்சி சிவப்பிரகாசம், நாமக்கல்.

சாலையில் வீசப்படும் கழிவுகள்

கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை பகுதியில் சாலையோரம் குப்பைகளை மக்கள் கொட்டிச் செல்கின்றனர். கோழி இறைச்சிக் கழிவு, பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் என பலவும் கொட்டப்படுவதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பழையபேட்டையில் குப்பை போடுவதை தடை செய்ய வேண்டும்.

-திருமலை, கிருஷ்ணகிரி.

வெட்டப்படும் புளியமரங்கள்

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள புளியமரங்களை சிலர் வெட்டி கடத்தி வருகின்றனர். குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்கள் நெடுஞ்சாலையோரத்தில் ஆங்காங்கே புளியமரங்களை வெட்டுவது அதிகரித்து வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும்.

- மூர்த்தி, தீர்த்தமலை.

டூ வீலர்களால் விபத்து அபாயம்

நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நெரிசல் மற்றும் விபத்து அபாயம் நிலவி வருகிறது. இதைத் தடுக்க போக்குவரத்து காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோபிகிருஷ்ணா, தில்லைபுரம், நாமக்கல்.

ஆக்கிரமிப்புகளால் நெருக்கடி

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வெளியேறும் பாதை எதிரே மெய்யனூர் சாலையில் கடைகளின் முன்பாக வாகனங்கள் ஏராளமாக நிறுத்தப்பட்டு எப்போதும் சாலை ஆக்கிரமிப்பில் இருக்கிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.

- மனோகர், சேலம்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x