Published : 09 Dec 2016 10:26 AM
Last Updated : 09 Dec 2016 10:26 AM

உங்கள் குரல்: திருவண்ணாமலையில் ரேஷன் கார்டுக்கு பணம் வசூல்

ரேஷனில் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை

திருப்பத்தூரில் உள்ள ரேஷன் கடை எண் 8-ல் கடந்த இரண்டு மாதங்களாக குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க முயன்றேன். ஆனால், இதுநாள் வரை ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை. அதேபோல், செல்போன் எண்ணை இணைக்க வலியுறுத்தினாலும் ஊழியர் மறுக்கிறார். இதுகுறித்து, அவரிடம் கேட்டால் வட்ட வழங்கல் அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என கூறுகிறார். நாங்கள் முழுமையான விவரங்களை பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம்.

- பொன்னம்பலம், திருப்பத்தூர் .

மாற்றுப் பாதை இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தென் எலப்பாக்கம் கிராமம் உள்ளது. காஞ்சிபுரம் சாலை மாலையிட்டான்குப்பம் கிராமத்தில் இருந்து எங்கள் கிராமத்துக்கு வரும் சாலை போடும் பணி நடைபெறுகிறது. அதற்காக, அந்த சாலையில் உள்ள சிறிய பாலங்கள் இடிக்கப்பட்டு புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன. பாலங்களை இடித்தபின், மாற்றுப் பாதையை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

இதனால், பாலங்கள் அருகே இருக்கும் பள்ளத்தின் வழியாக சென்று வருகிறோம். சமீபத்தில் பெய்த மழையால், அந்தப் பாதையும் சேறும் சகதியுமாகிவிட்டது. இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து படுகாயமடைகின்றனர். மேலும், அவசரத் தேவைக்கு ஆட்டோ, கார், ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட வழி இல்லை. வீரம்பாக்கம், சவுந்தர்யபுரம் கிராமம் வழியாக 10 கி.மீ., கூடுதலாக சுற்றி வரவேண்டும். அதனால், பாலங்கள் கட்டும் வரை மாற்றுப் பாதையை அமைத்துக் கொடுக்கவேண்டும்.

-விநாயகம், தென்எலப்பாக்கம்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுக்கு பணம் வசூல்

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு கடந்த ஜுலை மாதம் விண்ணப்பித்தேன். 5 மாதங்களாகியும் எந்தப் பதிலும் இல்லை. என்னுடைய விண்ணப்பம் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை. இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டால், முறையான பதில் கூறாமல் தட்டிக் கழிக்கின்றனர். மேலும் அவர்கள், ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை பணம் கேட்கின்றனர். பணம் கொடுத்தவர்களே 6 மாதங்களாக காத்திருக்கின்றனர். பணம் கொடுக்காத நீங்கள் உடனே வேண்டும் என்கிறீர்கள் என்று எதிர்கேள்வி கேட்கின்றனர். அதுமட்டும் இல்லாமல், விண்ணப்பத்துடன் அனைத்துச் சான்றுகளை இணைத்திருந்தாலும் பணம் இருந்தால்தான் ரேஷன் கார்டு கொடுக்கமுடியும் என்கின்றனர்.

-ராஜ்குமார், திருவண்ணாமலை.

காக்கங்கரை ரயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும்

திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை ரயில் நிலையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கவேண்டும். இங்கு மேம்பாலம் இல்லாததால் பொதுமக்கள் தண்டவாளத்தைக் கடக்கும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள் மீது அக்கறை கொண்டு மேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-திருமால், திருப்பத்தூர்.

தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஆற்காடு அடுத்த திமிரியில் இயங்குகிறது. இந்தக் கிளையின் சார்பில் கடந்த மே மாதம் 200 குழுவினருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் கடன் வழங்கினர். நாங்கள் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வீதம் முறையாக கடனை திருப்பிச் செலுத்தி வருகிறோம்.

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு எங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க நிதி நிறுவன ஊழியர்கள் மறுக்கிறார்கள். கடனை செலுத்தவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் வட்டியாக வசூலிக்கிறார்கள். வங்கியில் பணம் இல்லை என்பதால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படும் நேரத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளால் 200 குழுவினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிதி நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- வாசகர், திமிரி.

6 ஆண்டுகள் முடிந்தும் ரேஷன் கடை திறக்கவில்லை

திருப்பத்தூர் பாரதி சாலையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வேணுகோபால் அவரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரேஷன் கடை கட்டினர். இந்தக் கட்டிடம் கட்டி முடித்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், கட்டிடத்தைத் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதியில் 3-ம் எண் கடை குறுகிய சந்துப் பகுதியில் இயங்குகிறது. சொந்தக் கட்டிடம் பொதுமக்கள் பார்வையில் நன்கு தெரியும் நிலையில் உள்ளது. எனவே, கட்டப்பட்ட கடையை திறக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நடராஜன், திருப்பத்தூர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x