Published : 20 Dec 2016 09:46 AM
Last Updated : 20 Dec 2016 09:46 AM
கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நியமிக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசு தேர்வுத்துறை நடத்திய இந்த போட்டித் தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் எழுதினர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில், அறந்தாங்கி வாசகர் அருள்முருகன் கூறும்போது, ‘‘தேர்வு நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. தாமதத்துக்கான காரணத்தை அரசு வெளியிட வேண்டும்’’ என்றார்.
இதே கேள்வியைத் தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் எழுப்பி வரும் நிலையில், இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆய்வக உதவியாளர்களை நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த தேர்வு முறையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அல்லது எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்வுமுறை குறித்து அரசு முடிவு எடுத்த பின்னரே ஆய்வக உதவியாளர் பணி நியமன பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தனர்.
சிட்லபாக்கத்தில் தினமும் குப்பை எரிப்பு பள்ளி மாணவர்கள் பாதிப்பு
சிட்லபாக்கத்தில் குப்பை தொடர்ந்து தீயிட்டு எரிக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கூறியதாவது:
சிட்லபாக்கம் பேரூராட்சியில் 18 வார்டு கள் உள்ளன. 40 ஆயிரத்துக்கும் அதிக மாக மக்கள் வசிக்கின்றனர். இங்கு தினமும் சேகரமாகும் 10 டன் குப்பை, பேரூராட்சி ஊழியர்களால் சேகரிக்கப்பட்டு, சிட்லபாக் கம் ஏரி அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதன் அருகே அங்கன் வாடி மைய அலுவலகம், துணை சுகாதார நிலையம், அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி, சமுதாயக் கூடம், காவல் நிலையம், மத்திய அரசின் உணவு தானிய கிடங்கு ஆகியவை உள்ளன.
இவற்றில் குப்பை கிடங்குக்கு மிக அரு கில், அரசுப் பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தின மும், காலையில், குப்பை தீ வைத்து எரிக்கப் படுவதால், புகை மண்டலம் ஏற்படுகிறது. இந்த புகை, வகுப்பறைகளை சூழ்ந்து கொள் கிறது. இதனால், மாணவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், தோல் வியாதி கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக் கின்றனர்.
ஏற்கெனவே குப்பை கிடங்கால், கர்ப்பிணி கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற் போது பள்ளி மாணவர்களும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். சிட்லபாக்கம் பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது.
குப்பை கிளறி விடப்படும்போது, தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதனால், அருகில் உள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குப்பை கிடங்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படா ததால் அருகில் உள்ள பள்ளியில் மாண வர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண, குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றுவது மட்டுமே நிரந்தர தீர்வு என்றார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செம்பகராஜ் கூறும்போது, “வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வரை, தற்போது கொட்டப்படும் இடத்திலேயே குப்பை கொட்டப்படும். இதைத் தவிர வேறு எங்கும் குப்பை கொட்ட வழியும் இல்லை, இடமும் இல்லை. அதுவரை மாற்று ஏற்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்படி தற்போது 5 டன் மட்டுமே தரம் பிரிக்கப்படுகிறது. மீதி 5 டன் குப்பையை தரம் பிரிக்க வேண்டிய பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT