Published : 02 Dec 2016 10:55 AM
Last Updated : 02 Dec 2016 10:55 AM
நடைபாதையில் வாகனங்கள்
கோவை அவிநாசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபாதையிலேயே சிலர் வாகனங்களை ஓட்டுகின்றனர். இதனால் நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், விபத்துகள் நேரிடவும் வாய்ப்புள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை-அவிநாசி சாலையில் பல்வேறு கல்லூரிகள் உள்ள பகுதியில் மாணவ, மாணவிகள் சாலையைக் கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, கல்வி நிலையங்கள் உள்ள பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
பா.திருக்குமரன், கோவை.
டாஸ்மாக் கடையால் அவதி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரவும், சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கவும், கழிப்பிடங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகம், மேட்டுப்பாளையம்.
நோட்டுக்கு காலநீட்டிப்பு?
பண மதிப்பு இழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிச.31-ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை, கால நீட்டிப்பு செய்ய வேண்டும். பொதுமக்கள் மத்தியில் போதிய அளவு பணப்புழக்கம் அதிகம் இல்லாத நிலையில், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு கூடுதலாக காலநீட்டிப்பு அவசியம்.
பட்டாபிராமன், கோவை.
கடும் துர்நாற்றம்
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள கழிவறைகள் பராமரிப்பில் படுசுணக்கம் நிலவுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆதார், இ-சேவை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என பொதுமக்கள் அதிகளவில் தரைதளப் பகுதிக்கு வந்து செல்வதால், தரைதளத்தில் இருபுறமும் உள்ள கழிவறைகளை கூடுதல் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். மாதக்கணக்கில் சுத்தம் செய்யாமல் இருப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. போதிய தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பது உட்பட பல்வேறு சிரமங்களை அரசுப் பணியாளர்கள் உட்பட பலரும் அன்றாடம் எதிர்கொள்கின்றனர்.
அசோக்குமார், திருப்பூர்.
எரியாத தெருவிளக்குகள்
கோவை துடியலூர் - வெள்ளக்கிணறு சாலையின் ஓரங்களில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இந்த சாலை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சாலை வழியாக அதிகளவில் சரக்கு வாகனங்கள் செல்வதால், விபத்துகள் தவிர்க்க முடியாததாக உள்ளன. எனவே தெருவிளக்குகள் அனைத்தையும் சீரமைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
ரஞ்சித், வெள்ளக்கிணறு.
தேவை விழிப்புணர்வு
கோவையில் சாலையில் தேங்கும் மண் சுத்தம் செய்யும் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மாநகராட்சியில் எத்தனை இடங்களை சுத்தம் செய்ய முடியும். எனவே பொது இடங்களில் குப்பையைக் கொட்டி, மண் மேடுகள் உண்டாவதைத் தடுக்க மக்களிடம் மாநகராட்சி நிர்வாகம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஷாஜகான், தாராபுரம்.
தகவல் தொடர்பாளர் தேவை
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சீட்டு வாங்கும் இடத்தில் சரியான தகவல்களைக் கொடுப்பதில்லை. எந்த வார்டுக்கு செல்வது எனச் சரியாக கூறினால் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தகவல்கள் கிடைக்காததால், நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, நோயாளிகள் எந்தெந்த வார்டுக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதைத் தெரிவிக்க ஏற்பாடுகள் தேவை. தன்னார்வலர்கள் மூலம் கூட இதற்கான ஏற்பாட்டை மருத்துவமனை நிர்வாகம் செய்ய முடியும்.
சிவா, பீளமேடு.
சீரற்ற சாலை
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காஸ் கம்பெனியில் இருந்து இடிகரை செல்லும் சாலையில் கோவை - மேட்டுப்பாளையம் ரயில்பாதை குறுக்கிடுகிறது. இந்த ரயில்பாதை கடவுப் பகுதியில் சாலை சரிவர அமைக்கப்படாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட லாரி விபத்துக்குள்ளாகி ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் ரயில் பாதை கடவுப் பகுதியில் சாலையை சரி செய்து விபத்துகளைத் தடுக்க வேண்டும்.
செபஸ்டியன், இடிகரை.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT