Published : 09 Dec 2016 10:08 AM
Last Updated : 09 Dec 2016 10:08 AM
தாமதமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள்
அண்மைக் காலமாக கடற்கரை ரயில்நிலையம் வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. ஆவடியிலிருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் ரயில், வேளச்சேரி மார்க்கத்தில், சேப்பாக்கம் செல்லவே காலை 10.30 மணி ஆகிறது. இவ்வாறு தாமதமாக இயக்கப்படுவதால், ரயில் பயணிகள் செல்ல வேண்டிய இடத்துக்கு காலத்தோடு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் ரயில்களை வேகமாக இயக்க வேண்டும்.
- வாசகர், அம்பத்தூர்.
கழிவுநீர் குழாயில் அடிக்கடி அடைப்பு
ஆழ்வார்திருநகர் பகுதியில், கங்கைத் தெருவில் உள்ள கழிவுநீர் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல், ஆள் நுழைவு மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி, அப்பகுதி துர்நாற்றம் வீசி வருகிறது. வாரந்தோறும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. குடிநீர் வாரியத்தில் புகார் தெரிவித்தால், அடைப்பை நீக்குகின்றனர். ஆனால் சில தினங்களிலேயே மீண்டும் அடைப்பு ஏற்படுகிறது. அதனால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.
- வாசகர், ஆழ்வார்திருநகர்.
பெயர் பலகையில் விளக்கு எரியவில்லை
திருவொற்றியூர் ரயில் நிலையம் மற்றும் பேசின் பாலம் ரயில் நிலையம் ஆகியவற்றில் நடைமேடைகளில் உள்ள பெயர் பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள் எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறார்கள், எந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும் என்பதை அறியமுடியாமல், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே எரியாத மின் விளக்குகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.அமலநாதன், திருவொற்றியூர்.
சாலையில் வெளியேறும் கழிவுநீர்
பெருங்குடி சரவணன் நகர், 3-வது தெருவில் (சென்னை மாநகராட்சி வார்டு- 186), கழிவுநீர் இறைக்கும் நிலைய கழிவுநீர் குழாய் உள்ளது. இதில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே அப்பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.
- எஸ்.சச்சிதானந்தம், பெருங்குடி.
சிற்றுந்து சேவை நீட்டிக்க வேண்டும்
பல்லாவரம்- சங்கர்நகர் இடையே குறுகிய தூர இடைவெளியில் எஸ்7 என்ற வழித்தட எண் கொண்ட சிற்றுந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயன்பெறும் மக்கள் குறைவாக உள்ளனர். எனவே இந்த சிற்றுந்தை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் வகையில், இதன் சேவையை குரோம்பேட்டை வரை நீட்டிக்க மாநகர போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.பி.ஆறுமுகம், பம்மல்.
சாலை நடுவில் தடுப்புகள் இல்லை
ஜிஎஸ்டி சாலையில் இருந்து திருநீர்மலை வரை செல்லும் சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாகி வருகிறது. இந்த சாலையில் பலர் சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுகின்றனர். அவ்வாறு ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால் அந்த சாலையின் நடுவில் தடுப்புகளை ஏற்படுத்த, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
- வாசகர், பம்மல்.
நடைபாதை சீரமைக்கப்படுமா?
வேளச்சேரி ஏரிக் கரையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் முதியோர் பலர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடைபாதை போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் மேடு, பள்ளங்களாக உள்ளது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியோர் தடுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே அந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.வி.நீலமேகம், வேளச்சேரி.
தெரு நாய்களால் தொல்லை
மதுரவாயல், ஆலப்பாக்கம் அடுத்த கிருஷ்ணா நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் தெருக்கள் தோறும் 20-க்கும் அதிகமான நாய்கள் சுற்றி வருகின்றன. இதனால், பள்ளி சிறுவர், சிறுமியர் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் இங்குள்ள நாய்கள் துரத்துகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் சுற்றி வரும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாசகர், மதுரவாயல்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT