Published : 20 Dec 2016 09:15 AM
Last Updated : 20 Dec 2016 09:15 AM
கும்பகோணம் அரசுப் போக்கு வரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எல்ஐசி காப்பீடு பிரீமியத்துக்கான தொகை மாதந் தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டும், கடந்த 6 மாதங்களாக பிரீமியம் செலுத்தப்படாமல் உள்ளது என்று ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில், வாசகர் சரவணன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விபத்து நேரிடும்போது அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர் கள், நடத்துநர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு பாது காப்பு வழங்கவும், காயமடைந்தால், மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளிக்கவும் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட ஊழியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் பிரீமியத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக எல்ஐசி நிறு வனத்தில் அந்த தொகையை செலுத் தாமல், நிர்வாகம் முறை கேடாக பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் எல்ஐசி உதவியுடன் வீடு கட்டுவதற்கு கடனுதவி கேட்டால் நீங்கள் முறையாக தவணை செலுத்தவில்லை என்று கூறி கடன்தர மறுக்கின்றனர். அதேபோல, விபத்தில் சிக்கினாலும் உரிய இழப்பீடு பலனைப் பெற முடியாமல் தொழிலாளர்கள், குடும்பத்தினர் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்றார்.
இதுதொடர்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத, போக்கு வரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியபோது, “பிடித்தம் செய்யப்படும் நிதியை டீசல், ஊதியம், பராமரிப்பு நிதி ஆகியவற்றுக்கு நிர்வாகம் பயன்படுத்திக் கொள்கிறது. இது ஆண்டுதோறும் தொடர்கிறது. தொழிலாளர்கள் நிர்வாகத்தில் முறையிட்டால் மட்டுமே பிரீமியத்தை செலுத்துகின்றனர்” என்றார்.
இதுகுறித்து கும்பகோணம் கோட்டப் பொது மேலாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, “தொழிலாளர்களின் எல்ஐசி பிரீமியம் செலுத்துவதை கணக்குத் துறைதான் கையாளுகிறது. இந்த விவரம் இப்போதுதான் எனக்குத் தெரிய வருகிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பெரியார் ஈவெரா கல்லூரி வளாகத்தில் ஓராண்டாக மூடிக்கிடக்கும் மாணவர் விடுதி: பயன்பாட்டுக்கு கொண்டு வர மாணவர்கள் கோரிக்கை
திருச்சியில் பெரியார் ஈவெரா அரசுக் கல்லூரி வளாகத்தில் ஓராண்டுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் மாணவர் விடுதியை பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி காஜாமலையில் பெரியார் ஈவெரா அரசுக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் மைதானத்தை ஒட்டிய பகுதியில் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.1.46 கோடி செலவில் மாணவர்களுக்கான விடுதி கட்டப்பட்டது. சுமார் 100 மாணவர்கள் தங்கும் வகையில், இரு தளங்களுடன் கூடிய இந்த விடுதியின் கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்கு முன்பே முடிவடைந்துவிட்டன. எனினும், இதுவரை அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், தற்போது அந்த வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
இந்நிலையில், இந்த விடுதியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் மாணவர்கள் சிலர் கூறியபோது, “திருச்சியிலுள்ள கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பயன்பாட்டுக்காக இந்த விடுதி கட்டப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணி முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை.
இதனால் விடுதி கிடைக்காமல் ஏராளமான மாணவர்கள் வெளியிடங்களில், வாடகைக்கு அறை எடுத்து தங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, இந்த விடுதியை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த விடுதி பெரியார் ஈவெரா கல்லூரி வளாகத்தில் இருந்தாலும், பிற கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர். எனவே, பெரியார் கல்லூரியின் நுழைவுவாயிலைப் பயன்படுத்தாமல், பக்கவாட்டுச் சுற்றுச்சுவரை உடைத்து, காஜாமலை வழியாக தனி வழியை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
அதற்கு, அங்கு வசிக்கும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்துக்குச் சென்றதால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும் நிலை உருவாகி உள்ளதால், விரைவில் இந்த விடுதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.
இதற்கிடையே, பெரியார் ஈவெரா அரசுக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிப்பதால், இந்த விடுதியில் இக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT