Published : 09 Dec 2016 10:23 AM
Last Updated : 09 Dec 2016 10:23 AM
ரேஷன் கடைகள் திறக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையாளர் விடுப்பில் சென்றால், கடைக்கும் விடுமுறை விடப்படுகிறது. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
-நடராஜன், திருச்சி.
குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள இளங்காக்குறிச்சி கிராமத்தில் சாலை வசதிகள் சரியாக இல்லை, சுகாதார வசதியும் இல்லை. இந்த பகுதியில் குரங்குகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்குத் தொல்லை கொடுத்துவரும் குரங்குகளைப் பிடித்து வேறு இடத்தில் விடுவதற்கு வனத் துறையினர் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
-முகமது அசாருதீன், இளங்காக்குறிச்சி.
ஸ்ரீரங்கம்- நொச்சியம் இடையே தரைப்பாலம் கட்ட வேண்டும்
ரங்கம்- நொச்சியம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் கட்ட வேண்டும். இந்த பகுதியில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட ஆழ்குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இந்த பகுதியில் தரைப்பாலம் அமைத்தால், போக்குவரத்து நெரிசலும் குறையும், நீர் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், ரங்கம்.
மத்திய பேருந்து நிலையத்தில் அருவருக்கத்தக்க நிலையில் கழிப்பிடங்கள்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன இலவச பொது மற்றும் கட்டண கழிப்பிடங்கள் உள்ளன. ஆனால், இரு கழிப்பிடங்களும் போதிய பராமரிப்பு இன்றி மிகவும் அருவருக்கத்தக்க நிலையில் உள்ளன. இலவச கழிப்பிடம் என்பதால் பராமரிக்கவில்லையோ என்ற எண்ணத்தில் கட்டண கழிப்பிடத்துக்குச் சென்றால், அதுவும் மோசமான நிலையில்தான் உள்ளது. பேருந்து நிலையத்தில் கழிப்பிடங்களைப் பயன்படுத்துமாறு அறிவிக்கும் மாநகராட்சி நிர்வாகம், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், இந்தக் கழிப்பிடங்களை தூய்மையாகப் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அண்ணா ரவி, மணப்பாறை.
விபத்துகளை தவிர்க்க ஆந்தக்குடி சாலையை சீரமைக்க வேண்டும்
ஆந்தக்குடியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையைச் சீரமைக்காததால் தான் அண்மையில் அவ்வழியே சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஆந்தக்குடி- நாகப்பட்டினம் வழித்தடத்தில் காலை, மாலை இருவேளைகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.
-செந்தில்குமரன், வேதாரண்யம்.
நீதிமன்ற வளாகத்தில் பராமரிக்கப்படாத கழிப்பிடங்கள்
மயிலாடுதுறையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறை மிகவும் மோசமாக உள்ளது. வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்துசெல்லும் அங்கு கழிப்பிடங்கள் சரிவர பராமரிக்கப் படாததால் அவசரத்துக்கு அதனைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, வயதானவர்கள், பெண்கள் உட்பட அனைவரும் இயற்கை உபாதைகளைப் போக்க இயலாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். தொடர்புடைய அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, கழிப்பிடங்களைச் சுத்தமாகப் பராமரிக்க ஆவன செய்ய வேண்டும்.
-முகம்மது ஆசிக், பொறையார்.
கறம்பக்குடியில் வேகத்தடை இடம்மாற்றப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, செட்டித் தெருவில் சாலையின் வளைவான இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேகத்தடையில் வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வளைவான அந்த இடத்தில் உள்ள வேகத்தடையை அகற்றி, அங்கிருந்து சற்று தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுகன்யா, கறம்பக்குடி.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT