Published : 02 Dec 2016 11:00 AM
Last Updated : 02 Dec 2016 11:00 AM
மேடான சாலையால் விபத்து
திருச்செங்கோட்டில் கொசவம்பாளையம் சாலை மிகவும் மேடாக உள்ளது. இதனால், சாலையின் பள்ளமான பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களை சரிவர கவனிக்க முடியாமல் போவதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. எனவே, கொசவம்பாளையம் சாலையை சமதளமாக்கினால் விபத்துகளை தவிர்க்கலாம். நகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி மக்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும்.
- பிரவீன், திருச்செங்கோடு.
குடிநீர் தட்டுப்பாடு
சேலம் மாநகராட்சி 3-வது கோட்டம் நகரமலை அடிவாரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. குடிநீருக்காக மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
- பார்த்தசாரதி, நகரமலை அடிவாரம், சேலம்.
ஒளிரும் விளக்குகள் வேண்டும்
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. சாலை அமைப்பு விபத்துகளுக்கு ஒரு காரணம் என்றாலும், இரவு நேரத்தில் இந்தப்பகுதியில் பயணிக்கும் போது சாலையில் ஒளிரும் விளக்குகள் இல்லாதது பெரும் குறையாகத் தெரிகிறது. தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் விபத்துகளை தடுக்க உதவும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும்
- குருமூர்த்தி, தருமபுரி.
பொதுமக்களுக்கு இடையூறு
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் சுங்கச்சாவடி பகுதியிலும், தருமபுரி ரயில் நிலையம், பேருந்து நிலையப் பகுதிகளிலும் இரவு நேரங்களில் சுற்றி திரியும் திருநங்கைகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடைகளில், வியாபாரிகளிடம் கட்டாய பண வசூல், மிரட்டுதல் உள்ளிட்ட செயல்களிலும் சில திருநங்கைகள் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்.
- தர், தருமபுரி.
இரவில் தவிக்கும் பயணிகள்
திருவண்ணாமலை - பெங்களூரு நோக்கிச் செல்லும் பேருந்துகளில் இரவு நேரங்களில் மத்தூர், ஊத்தங்கரை, செங்கம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முதியவர்கள், பெண்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். கூட்டம் குறைவாக இருந்தால் மட்டும் நடத்துநர்கள் பேருந்தில் அனுமதிக்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெயமுருகன், ஊத்தங்கரை
எல்லைக்கோடு தேவை
சேலம் சகாதேவபுரத்தில் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் முறையாக நின்று செல்வது கிடையாது. குறிப்பாக, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் எல்லைக்கோடு இல்லாததால் வாகனங்கள் சாலையை அடைத்தபடி நிற்கின்றன. இதனால், மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் பலர் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சாலையில் எல்லைக்கோடு போட வேண்டும்.
- வி.ராஜேந்திரன், சேலம்.
வழிகாட்டி பலகைகள் இல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநில மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நகரின் முக்கிய சாலைகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் கிளை சாலைகள் அதிகளவில் பிரிந்து செல்கின்றன. ஆனால், பெரும்பாலான சாலை சந்திப்பு இடங்களில் (கிமீ., அளவுடன் கூடிய) வழிகாட்டி பலகை வைக்கப்படவில்லை. இதனால் ஓசூருக்கு புதிதாக வருபவர்கள் தடுமாறுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.எழில்வேந்தன், ஓசூர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT