Published : 23 Nov 2016 11:35 AM
Last Updated : 23 Nov 2016 11:35 AM
ரேஷன் கடையில் 27 ரூபாய்க்கு சர்க்கரை வாங்குபவர்களிடம் 72 ரூபாய்க்கு கடலை பருப்பு வாங்க கட்டாயப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் இலவச அரிசி வாங்கும் நபர்களிடம் கூடுதல் பொருட்களை வாங்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக திரு வண்ணாமலையைச் சேர்ந்த வாசகர் நாராயணன் என்பவர், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ‘திருவண்ணாமலை ரமணா ஆசிரமம் பின்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரசு வழங்கும் இலவச அரிசி மற்றும் சர்க்கரை கடந்த 14-ம் தேதி வாங்கினேன். சர்க்கரைக்கு 27 ரூபாய் கொடுத்தேன். அப்போது விற்பனையாளர், அரை கிலோ கடலை பருப்பு வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார். அதன் விலை ரூ.72. அதற்கு ரசீது தர மறுத்துவிட்டார். அவரிடம், நீண்ட நேரம் போராடி கடலைப் பருப்புக்கான ரசீதை பெற்று வந்தேன்.
27 ரூபாய்க்கு சர்க்கரை வாங்கி 72 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த நிலை அனைவருக்கும் ஏற்படுகிறது. கடலைப் பருப்பு வாங்க மறுப்பவர்களை விற்பனையாளர் திட்டுகிறார். முதியோருக்கு மரியாதை கொடுப்பது இல்லை. அவர்கள் ஏதாவது கேட்டால், விரட்டுகின்றனர். வெளிச் சந்தையில் ஒரு கிலோ கடலைப் பருப்பு 120 முதல்140 ரூபாய் வரை கிடைக்கிறது. குறைந்த விலையில் விற்காமல், ஒரு கிலோ கடலை பருப்பை ரூ.144-க்கு விற்றால் எப்படி வாங்க முடியும்.
பிற ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை வாங்குவோரிடம் ரூ.10 மதிப்புள்ள சோப்பு, உப்பு, டீத்தூள் வாங்க வற்புறுத்தப்படுகிறது. 10 ரூபாய் என்பது பரவாயில்லை. ஆனால் இங்கு 50 ரூபாய்க்கு மேல் கூடுதல் பொருட்களை வாங்க வேண்டும். அவர்களிடம் கேள்வி கேட்க முடியாமல் பொதுமக்கள் திரும்புகின்றனர். அப்படியே கேள்வி எழுப்பினால், ‘ உயர் அதிகாரிகள் விற்க சொல்கிறார்கள்’ என்கிறார். ரேஷன் கடைகளில் கூடுதல் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதை ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
இது குறித்து திருவண்ணாமலை குடிமைப் பொருள் வட்டாட்சியர் சுப்ரமணியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘ரேஷன் கடைகளில் மக்களுக்கு என்ன பொருள் தேவையோ, அந்தப் பொருளை வாங்கிச் செல்லலாம். கூடுதல் பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை. ரமணா ஆசிரமம் பின்புறம் உள்ள ரேஷன் கடையில் என்ன நடக்கிறது என்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT