Published : 15 Nov 2016 11:26 AM
Last Updated : 15 Nov 2016 11:26 AM
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் மத்தியில் தற்போது பாட்டில் குடிநீர் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. வெளியூர் செல்லும் மக்கள், தண்ணீர் பாட்டிலை தவறவிடுவதில்லை. இதனை பயன்படுத்தி குடிநீர் பாட்டில் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. மினரல் வாட்டர் என்ற பெயரில் இந்த குடிநீர் 1 லிட்டர் ரூ.20-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
அம்மா குடிநீர்
இதனால் சாதாரண மக்கள் பாட்டில் குடிநீரை வாங்கி பருக முடியாத நிலை காணப்பட்டது. இந்த குறையை போக்கும் வகையில் தமிழக அரசு அம்மா குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் அம்மா குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட அம்மா குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் மட்டும் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படவில்லை. இதுதொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதிக்கு பேசிய வாசகர் ஒருவர், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில்கள் கிடைக்காததால் பயணிகள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தார்.
முக்கிய பேருந்து நிலையம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதியம்புத்தூர், திருச்செந்தூர் பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தூத்துக்குடி மாநகரை பொறுத்தவரை புதிய பேருந்து நிலையத்தைவிட பழைய பேருந்து நிலையத்துக்கே அதிக பயணிகள் வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, பெங்களூரு, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வந்தே செல்கின்றன.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில் போன்ற இடங் களுக்கு பழைய பேருந்து நிலையத் தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், நகர பேருந்துகள், மினி பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்படுகின்றன. இதனால் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பழைய பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். எனவே, பழைய பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை கவுன்ட்டர் திறக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
அரசு உத்தரவிட்டால்…
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தூத்துக்குடி நகரில் ஒரு இடத்தில் மட்டும் அம்மா குடிநீர் விற்பனை கவுன்ட்டர் வைக்க அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் வெளியூர் பேருந்துகள் அதிகம் செல்லும் புதிய பேருந்து நிலையத்தில் கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டால், அதற் கான ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார் அவர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT