Published : 29 Nov 2016 10:18 AM
Last Updated : 29 Nov 2016 10:18 AM

உங்கள் குரல்: வாழப்பாடி பேருந்து நிலைய டாஸ்மாக் மதுக்கடையால் பயணிகள் அவதி

கொடமாண்டப்பட்டியில் நூலக கட்டிடத்தில் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கொடமாண்டப்பட்டியில் நூலக கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

புதிய கட்டிடம் கட்டப்பட்டும் தொடர்ந்து நூலக கட்டிடத்திலேயே ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதால் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதாக 'தி இந்து'வின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் அக்கிராமத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி ரவிந்தராசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘கொடமாண்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இம் மருத்துவமனையில் நாள்தோறும் சிகிச்சைக்காக ஒட்டப்பட்டி, அந்தேரிப்பட்டி, கொடமாண்டப்பட்டி, பாளே தோட்டம், வாலிப்பட்டி, கவுண்டனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். நூலகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் தொடர் வற்புறுத்தலின் பேரில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப் பட்டுள்ளது.

இந்த கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு 4 மாதங்கள் கடந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மக்களின் நலன் காக்க, தற்போது நூலகத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும்,’’ என்றார்.

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடையால் பயணிகள் அவதி

வாழப்பாடி பேருந்து நிலைய வணிக வளாகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது என ‘தி இந்து’ உங்கள் குரல் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட வடுகத்தாம்பட்டி வாசகர் ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

வட்டாரமாக உள்ள வாழப்பாடிக்கு சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர். வாழப்பாடியில் இருந்து பல கிராமங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்காரணமாக வாழப்பாடி பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் காணப்படும்.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு அதில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. பேருந்துக்காக காத்து நிற்பவர் களுக்கு மது குடித்துவிட்டு வருபவர்களால் இடையூறு ஏற்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்தின் உள்ளேயே மதுபானக்கடை இருப்பதால் பலர் மது அருந்திவிட்டு பேருந்துகளில் ஏறி, பயணிகளிடம் ரகளை செய்கின்றனர்.

பேருந்து நிலையத்தின் அருகிலேயே அரசு பள்ளி, கிறிஸ்தவ தேவாலயம், ரயில்வே ஸ்டேஷன் ஆகியவை செயல்படும் நிலையில், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எனவே, மக்களின் நலன்கருதி இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை, மக்களுக்கு தொந்தரவு இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, “வாழப்பாடி பேருந்து நிலையத்தின் உள்ளே செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை இட மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

வாழப்பாடி பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x