Published : 22 Nov 2016 11:39 AM
Last Updated : 22 Nov 2016 11:39 AM

உங்கள் குரல்: இருளில் தத்தளிக்கும் கோவை மாநகராட்சி பகுதி

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தெருவிளக்குப் பணிகள்

கோவை மாநகராட்சியில் 5 வருடங்களில் 16,374 புதிய தெருவிளக்குகளை அமைத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் பாதி பணி கூட முடியாமல் சாலைகள் இருளில் மூழ்கிக் கிடப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. இதில் புதிய 28 வார்டுகளும், இணைக்கப்பட்ட பகுதிகளில் உருவானவை. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களிடம் இருந்து இணைக்கப்பட்ட பகுதிகள் என்பதால் அங்கு அடிப்படைத் தேவைகளான தெருவிளக்கு, சாலை வசதி ஆகியவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பணிகள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

16,374 விளக்குகள்

இதனிடையே மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மின்சார செலவைக் குறைத்து, அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை மாற்றியமைக்கும் பணிகளும் நடக்கின்றன. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 16,374 தெருவிளக்குகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ளலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் படி, 100 வார்டுகளில் மொத்தம் 69,977 தெருவிளக்குகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 16,374 விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள், 5 வருடங்களில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் அமைத்துள்ளதாக தெரிவித்தாலும், மாநகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் ஒப்பந்தப்பணிகள் தொடங்கப்பட்டு தெருவிளக்கு அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான பி.என்.புதூர், வடவள்ளி, குறிச்சி, சுந்தராபுரம், காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில இடங்களில் பணிகளே தொடங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பி.என்.புதூர்

பி.என்.புதூரைச் சேர்ந்த சரவணன் என்ற வாசகர் ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் தெரிவித்திருப்பதாவது: தடாகம் சாலையில் பால் கம்பெனி முதல் மருதமலை வரை சுமார் 13 கி.மீ. தூரத்துக்கு தெருவிளக்குகள் அமைக்கும் பணி முழுமை பெறவில்லை. பல மாதங்களுக்கு முன்பாகவே, பணிகளைத் தொடங்கினர். சாலை நடுவே கம்பங்களை நட்டு, இணைப்புகளைக் கொடுத்து அப்படியே விட்டுச் சென்றுவிட்டனர். இதுவரை பணிகள் முடியவில்லை. அதிக விபத்துகள் ஏற்படும் குறுகிய சாலை என்பதால், மருதமலை சாலையில் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இரவில் வாகன வெளிச்சத்தை மட்டுமே நம்பி மக்கள் செல்ல வேண்டியிருக்கிறது. உடனடியாக தெருவிளக்குகளை அமைத்தால் மட்டுமே நிலைமை சீரடையும் என்று கூறி உள்ளார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாநகராட்சி முழுவதும் புதிய தெருவிளக்குகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பணப் பரிவர்த்தனை பிரச்சினையால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. வெகு விரைவில் தெருவிளக்குகளை அமைக்கும் பணி தொடங்கும்’ என்றனர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x