Published : 01 Nov 2016 12:40 PM
Last Updated : 01 Nov 2016 12:40 PM

உங்கள் குரல்: கரூரில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்

கரூர் உழவர் சந்தைக்கு எதிரில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்

கரூர் உழவர் சந்தைக்கு எதிரில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பெயர் வெளியிடாத விரும்பாத வாசகர், ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் கூறியது:

கரூர் திரு.வி.க. சாலையில் உழவர் சந்தை எதிரில், உழவர் சந்தை அடையாள அட்டை இல்லாத மற்றும் உழவர் சந்தையில் காய்கறிகளை வைத்து விற்க நேரம், ஆள் வசதி இல்லாத விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து அதிகாலையில் மொத்தமாக விற்பனை செய்வது வழக்கம்.

இதற்கு, 30 கிலோ வரை உள்ள சிறிய மூட்டைக்கு ரூ.12-ம், 70 கிலோ கொண்ட பெரிய மூட்டைக்கு ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறிய மூட்டைக்கு ரூ.15-ம், பெரிய மூட்டைக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கின்றனர். இதுகுறித்து கட்டணம் வசூலிப்பவர்களிடம் கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

மேலும், உழவர் சந்தைக்கு எதிரே நிரந்தர கடை வைத்திருக்கும் காய்கறி வியாபாரிகள், விவசாயிகளை அங்கு வியாபாரம் செய்யவிடாமல் இடையூறு செய்து வருகின்றனர்.

போக்குவரத்து போலீஸாரும் வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கின்றனர் என்றார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார் கூறியம்போது, மூட்டைக்கு தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்யவேண்டும். விவசாயிகளிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்து பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் வலியுறுத்தல்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தும் நகராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை, விரைந்து சீரமைக்க வேண்டும் என, ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் டி.ஹெச்.அலிமைதீன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:

வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி வழியாக குடவாசல் வரை செல்லும் சாலை கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. குறிப்பாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன.

சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் வடியாமல் தேங்குவதால் சாலைகள் சேதமடைகின்றன. இதேபோல, கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியிலும் சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளன. இவற்றைச் சீரமைக்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளில் பலமுறை நகராட்சித் தலைவர் மற்றும் நிர்வாகத்தை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. நெடுஞ்சாலைத் துறையும் சாலையைச் சீரமைக்க முன்வரவில்லை. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கூத்தாநல்லூர் பெரிய கடைத்தெருவில் பாலம் அருகே சுமார் 100 அடி தூரத்துக்கு சாலை முற்றிலும் பெயர்ந்த நிலையில் உள்ளது. அதுபோல வடபாதிமங்கலம் வரை செல்லும் சாலையில் ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் (பொ) சந்திரசேகரன் கூறியபோது, “நகராட்சிப் பகுதியில் உள்ள 24 சாலைகளில் 8 சாலைகளைச் சீரமைக்கும் பணி சுமார் ரூ.1.5 கோடியில் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள சாலைகளை ரூ. 1.5 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலை நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.

நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன் கூறியபோது, “கூத்தாநல்லூரில் இருந்து மாவூர் வரை செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்தைச் சீரமைக்க ரூ.36 லட்சத்தில் திட்டமிடப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மழைக் காலத்துக்குப் பின்னர் சாலை அமைக்கும் பணி நடைபெறும்” என்றார்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x