Published : 22 Nov 2016 12:08 PM
Last Updated : 22 Nov 2016 12:08 PM

உங்கள் குரல்: ராமநாதபுரம் அங்கன்வாடியில் உடைந்த மதுபாட்டில்களால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை

ராமநாதபுரம் மாவட்டம், தேவி பட்டினம் தெற்கு அங்கன்வாடி மையத்தில் சமூக விரோதிகளால் மது அருந்திவிட்டு உடைத்து போடப்படும் கண்ணாடிகளால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

தேவிபட்டினம் தெற்குப்பகுதி மூட்டைக்காரத் தெருவில் அங்கன்வாடி மையம் எண் 2 அமைந்துள்ளது. இதில் 15 குழந்தைகள் உள்ளனர். அங்கன் வாடி மைய கட்டிடத்தை சுற்றிலும் துர்நாற்றம் வீசும் குப்பை, திறந்தவெளி கழிப்பிடங்கள் திறந்தவெளி பார்களாக பயன் படுத்தப்படுகின்றன.

இங்குள்ள குழந்தைகளும், அங்கன்வாடி ஊழியரும் துர் நாற்றத்தில் தினமும் பொழுதைக் கழிக்கின்றனர்.

மாலையில் மையம் மூடப் பட்டதும், சமூக விரோதிகள் கட்டிடத்தின் முன் அமர்ந்து மது அருந்துகின்றனர். குடித்த பாட்டில்களை உடைத்து கட்டிடத்தின் முன்பும், குழந்தை களுக்கான கழிப்பறையிலும் போட்டுவிட்டுச் செல்கின்ற னர். அதனால் கழிப்பறையில் உடைந்த கண்ணாடிகளும், மதுகுடித்த பிளாஸ்டிக் கப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. சமூக விரோதிகள் கழிப்பறையை பயன்படுத்தி சுகாதாரமின்றி வைத்துவிட்டுச் செல்கின்றனர். குழந்தைகள் கழிப்பறைக்குள் செல்ல முடியாத வகையில் மதுபாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. அதனால் இக்கழிப்பறை குழந்தைகள் பயன்படுத்தாமல் கிடக்கிறது. கட்டிடத்தின் நுழைவுப் பகுதியில் உடைந்த மதுபாட்டில்களாக கிடக்கின்றன. துர்நாற்றம், உடைந்த கண்ணாடிகளால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

மேலும் இப்பகுதி பொது மக்களும், குப்பைகளை மையத்தின் முன் தெருவில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். ஊராட்சி நிர்வாகமும் குப்பையை அகற்றாமல், அங்கேயே தீவைத்து விட்டுச் செல்கிறது.

எனவே சமூக விரோதி களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அங்கன்வாடி மைய ஊழியர் எஸ்.தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது அவர் கூறியது:

தினமும் காலையில் வரும் போது மையத்தின் முன்பும், கதவு பகுதியிலும் மது பாட்டில்கள் உடைந்தும், மதுகுடித்த கப்புகளும் குப்பைகளும் நிறைந்துகிடக்கும். தினமும் நான் சுத்தம் செய்த பின்னரே குழந்தைகளை உள்ளே அழைத்து வருவேன். வாரம் ஒரு முறை குழந்தைகள் கழிப்பறை மற்றும் மையத்தைச் சுற்றிலும் 2 மூட்டை கண்ணாடிகளை சுத்தம் செய்து அகற்றுகிறோம்.

2 மாதங்களுக்கு முன் தேவிபட்டினம் போலீஸில் புகார் அளித்தேன். போலீஸார் 2 நாள் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதன் பின்னரும் மது குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டுச் செல்வதும், மையத்தை திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துவதும் தொடர்கிறது. இதுபோன்ற காரணங்களால் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்ப மறுகின்றனர்.

சமூகவிரோதிகளிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x