Published : 02 Nov 2016 11:32 AM
Last Updated : 02 Nov 2016 11:32 AM
ராணுவ வீரர்கள் அதிகமாக உள்ள வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க கோரிக்கை: நிலத்தை அடையாளம் காணும் பணி தொடங்குவதாக அதிகாரி தகவல்
தமிழ்நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் அதிகம் வசிக்கும் மாவட்ட மாக வேலூர் உள்ளது. குறிப் பாக, வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த வர்கள் அதிகம் பேர் ராணுவத்தில் பணியாற்றுகின்றனர்.
முன்னாள் படை வீரர்கள் மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றும் குடும்பத்தினரின் வசதிக்காக வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் வைக் கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் அம்பலூர் அசோகன் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘‘இந்திய ராணுவத்தில் சிப்பாய் அளவிலான வீரர்கள் அதிகளவில் பணியாற்றும் மாவட்டமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளது. இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் பிரிட்டீஷ் இந்திய ராணுவத்தில் அப்போதைய வடாற்காடு மாவட்டத்தைச் சேர்ந் தவர்கள் போரில் பங்கேற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக ராணு வத்தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால் ராணுவத்துக்குச் சென்ற பலர் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர்.
ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினரின் மேம்பாட்டுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்கவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பான கோரிக்கை வைத்தும் அதற்கான நிலத்தை அடையாளம் காண்பதில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக இருக்கிறது.
வேலூர் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்க முயற்சி எடுத்தார். வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள ராணுவ எஸ்டேட்டுக்குச் சொந்தமான இடம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதுதொடர்பான விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால், ‘அதுபோன்ற நிலம் இல்லை’ என்று தெரிவிக்கின்றனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க 5 முதல் 8 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. பள்ளி தொடங்க போதுமான இடம் மாவட்டத்தில் எங்குமே இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பது வேடிக்கை யாக உள்ளது.
வேலூர் பகுதியில் நிலம் இல்லாவிட்டால் நாட்றம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பல நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் பள்ளியை தொடங்க நடவடிக்கை எடுக்கலாம். மாவட்ட நிர்வாகம் நினைத்தால் பள்ளியை தொடங்குவதற்கான நிலத்தை அடையாளம் காண முடியும். முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் அலுவலகம் இதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘வேலூர் விஐடி பல்கலைக் கழகத்துக்கு பின்புறம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் உள்ளது. இதன் அருகில் பள்ளி தொடங்க ஆரம்ப காலத்தில் முயற்சி செய்தோம். ஆனால், அங்கு மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்று கூறி கேந்திரிய வித்யாலயா அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்க முயற்சி செய்தார். அவர் கூறியபடி, ஆம்பூர் அருகே உள்ள மகமதுபுரம் என்ற இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அந்த இடமும் பள்ளி தொடங்க பாதுகாப்பானதாக இல்லை எனக் கூறிவிட்டனர்.
பள்ளி தொடங்க நகரின் முக்கியமான இடத்தில் 5 முதல் 8 ஏக்கர் நிலம் வேண்டும் என்கின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நிலம் இல்லை. கடந்த வாரம் நடந்த முன்னாள் படைவீரர்கள் நல குறைதீர்வுக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக் கப்பட்டது. நிலத்தை அடை யாளம் காண நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’’ என்றனர்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் (பொறுப்பு) ஓய்வு பெற்ற பிளைட் லெப்டினன்ட் மணி வண்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கு வதற்கு நிதி கோரப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். அதற்கு முன்னதாக, வேலூர் மாவட்டத்தில் நிலத்தை அடையாளம் காண வேண்டி உள்ளது. இதுதொடர்பான பணி மீண்டும் தொடங்கப்படும்’’ என்றார்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT