Published : 22 Nov 2016 12:09 PM
Last Updated : 22 Nov 2016 12:09 PM
திருச்சி பொன்மலை ஜி கார்னர் முதல் டிவிஎஸ் டோல்கேட் வரையிலான சாலையில் இருபுறமும் வாகனங்களை இயக்குவதாலும், சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதாலும் விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாசகர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பொன்மலை செல்வதற்காக டிவிஎஸ் டோல்கேட் வழியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், ஜி கார்னர் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க சுரங்கப்பாதை ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால், பொன்மலை செல்ல வேண்டியவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் வரை சென்று, வலதுபுறம் திரும்பி மீண்டும் ஜி கார்னருக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு பயணிக்கும்போது சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் கூடுதலாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் இவ்வழித்தடத்தைப் பயன்படுத்து வதை தவிர்த்தனர். அதற்கு பதிலாக, ஜி கார்னரில் இருந்து ரஞ்சிதபுரம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் நோக்கி வரக்கூடிய, சர்வீஸ் சாலையின் எதிர்திசையில் (ராங் ரூட்) செல்லத் தொடங்கினர். குறுகிய அளவே அகலமுள்ள இந்த ஒருவழிச்சாலையில், இருபுறங்களில் இருந்தும் வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சாலையோரத்திலுள்ள வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், டீ மற்றும் பெட்டி கடைகள், உணவு விடுதிகளுக்கு வருவோர், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக ‘தி இந்து- உங்கள் குரல்’ பகுதியில் பொன்மலையைச் சேர்ந்த வாசகர் நீலமேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கடைகளுக்கு வருவோர் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திக்கொள்வதால் தினமும் மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சமயங்களில் இருபுறத்தில் இருந்தும் வரும் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன. இதைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து பிரிவு உதவி ஆணையர் முருகேசனிடம் கேட்டபோது, “சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை தினந்தோறும் ரெக்கவரி வேன் மூலம் பறிமுதல் செய்து வருகிறோம். பலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இனிவரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும்” என்றார்.
ஜெயில் கார்னர் வழியாக பொன்மலைக்கு…
ஜி கார்னர் முதல் டிவிஸ் டோல்கேட் வரையிலான ஒருவழிப்பாதையில் விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தவிர்க்க டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து சுப்பிரமணியபுரம், ஜெயில் கார்னர், காவேரி நகர், டீசல் காலனி வழியாக பொன்மலைக்கு செல்லும் வழித்தடத்தில் வாகனங்களை இயக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “இந்த வழித்தடத்தில் பயணிக்க கூடுதலாக அரை கிலோமீட்டர் தொலைவு மட்டுமே சுற்றிச் செல்ல வேண்டும். ஆனால் பாதுகாப்பாக, நெரிசலின்றி சென்றுவிடலாம்.
இவ்வழியாகச் செல்ல பொன்மலையில் வசிக்கும் பொதுமக்களும், அமைப்புகளும் தயாராக உள்ளனர். எனவே, பொன்மலைக்குச் செல்லும் அனைத்து நகர பேருந்துகளையும் இந்த வழித்தடத்தில் இயக்குமாறு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில் விபத்து, நெரிசலைக் குறைக்க முடியும்” என்றனர்.
*
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT