Published : 07 Nov 2016 02:50 PM
Last Updated : 07 Nov 2016 02:50 PM
வாசகர் திருவிழா 2016 | ஓசூர்
சமுதாயப் பணிகளில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு ‘தி இந்து’ நாளிதழ் தூண்டுகோலாக இருக்கிறது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஓசூரில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் பாராட்டிப் பேசினார்.
‘தி இந்து’ நாளிதழ் மக்களின் நன்மதிப்பை பெற்று வாசகர்களின் அமோக ஆதரவுடன் 3-ம் ஆண்டை நிறைவு செய்து 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இத்தருணத்தில் இனியதொரு கொண்டாட்டமாக வாசகர் திருவிழா ஓசூர் சிஷ்யா பள்ளியில் நேற்று நடந்தது.
‘தி இந்து’ நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றார். முதுநிலை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, அமுதவன், கருந்தேள் ராஜேஷ், ஒளிப்பதிவாளரும் திரைப்பட இயக்குநருமான கே.வி.ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி ஆட்சியர் சி.கதிரவன் பேசியது:
இன்றைய காலத்தில் பத்திரிகைகள் வெளிவருவது என்பது வேறு. பேச்சுரிமை, எழுத்துரிமை இல்லாத காலத்தில் வாசிப்பு பழக்கமற்ற 18-ம் நூற்றாண்டில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தொடங்கி, இன்றளவும் தனிசிறப்புடன் வெளிவருகிறது.
அக்காலத்தில் வெளிவந்த பல பத்திரிக்கைகள் இப்போது அழிந்துவிட்டன. ஆனால், அன்று தொடங்கப்பட்ட ‘தி இந்து’ இன்றளவும் மிளிர்கிறது. ‘தி இந்து’ நாளிதழை வாசிக்கும்போது, நல்ல செய்தித்தாளை படிக்கிறோம். மனதுக்கு பிடித்தமான செயலை செய்கிறோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. நாங்கள் அரசு தேர்வுக்கு தயாராகும்போது, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலையங்க பக்கத்தை படித்ததன் மூலம், நாட்டின் நிலை பற்றியும் அது குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த கருத்தையும் அறிய முடிந்தது. மேலும், ஆசிரியருக்கான கடிதங்களை படிக்கும் போது, வாசகர்களின் அறிவியல் அறிவையும், சமூக கருத்துகளையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றோம்.
ஏராளமான பத்திரிகைகள், தொலைக் காட்சிகள், சமூக வலைதளங்கள், வார, மாத இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இவற்றையெல்லாம் கடந்து செய்திகளை தனித்தன்மையுடன் விறுவிறுப்பாக ‘தி இந்து’ நாளிதழ் வழங்கி வருகிறது.
இளையோர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் விதமாக இணைப்பிதழ்கள், கட்டுரைகள், செய்திகளை தாங்கி வருகிறது. பகுப்பாய்வு கட்டுரைகளும், நடுப்பக்க கட்டுரைகளும் வாசகர்கள் விரும்பும் வகையில் உள்ளன. ‘தி இந்து’ நடத்தும் புத்தக திருவிழாவுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வாசகர்களுக்கு நல்ல வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நாளிதழாகவும் ‘தி இந்து’ விளங்கி வருகிறது.
ஓசூர் உழவர் சந்தையில் கிடைக்கும் காய்கறி கழிவுகளைக் கொண்டு மக்கிய உரம் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. செயல்பாடு அடிப்படையில் தமிழகத்தின் சிறந்த உழவர் சந்தையாக ஓசூர் விளங்கி வருகிறது. ஓசூரின் தட்பவெப்பத்தை கருத்தில் கொண்டு வீடுகளின் மாடியில் மாடித் தோட்டம் அமைக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
ஏரி, கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டுமென ‘தி இந்து’ நாளிதழில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன்தொடர் நடவடிக்கையாக பல ஏரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், வாசகர்களும் மேடையேறி தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். ‘தி இந்து’ விளம்பரத்துறை தலைவர் சங்கர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். சேலம் இணை மண்டல மேலாளர் கே.வெங்கடேசன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வை ‘தி இந்து’வுடன் லலிதா ஜூவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், அறம் இலக்கிய அமைப்பு-ஓசூர், யுனிவர்சல் பேக்கேஜஸ்-ஓசூர், சிஷ்யா பள்ளி- ஓசூர், தனஞ்ஜெயா ஹோட்டல்- ஓசூர், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, ஓசூர் மக்கள் சங்கம் ஆகியவை இணைந்து வழங்கின.
நிகழ்ச்சியில் ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளைச் சேர்ந்த முகவர்கள், துணை முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர். வாசகர்களுக்கு ஓசூர் ஆராதனா சமூக சேவை அமைப்பு சார்பில் ஓசூர் ரோஜா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
வாசகர் திருவிழாவையொட்டி, ‘தி இந்து’ பதிப்பு வெளியிட்ட நூல்கள் வாசகர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டன. இதனை வாசகர்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் வேலூர் மாவட்ட வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா ஓசூர் சிஷ்யா பள்ளியில் நேற்று நடந்தது. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட விவசாய சங்கத்தினர்.
படங்கள்: எஸ். குரு பிரசாத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT