Published : 03 Nov 2016 12:22 PM
Last Updated : 03 Nov 2016 12:22 PM

உங்கள் குரல்: வேலூர் கன்டோன்மென்ட் வழியாக நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க வேண்டும்

அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை

வேலூர் வழியாக கடந்த 2006-ம் ஆண்டுக்கு முன் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேலூரைச் சேர்ந்த வாசகர் அசோகன் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தனது புகாரை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, “வேலூர்-விழுப்புரம் இடையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதை கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு அகலப் பாதையாக மாற்றப் பட்டது. இந்தப் பணி காரணமாக 2006-ம் ஆண்டுக்கு முன்பு வரை இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.

இப்பணி முடிந்த நிலையிலும் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உதாரணமாக, திருப்பதி-ராமேஸ்வரம் வரை நாள்தோறும் இயக்கப்பட்ட ரயில் தற்போது வாரத்துக்கு 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

அதேபோல, வேலூரில் இருந்து திருப்பதிக்கு தினமும் காலை 5.50, காலை 10.15 மற்றும் மாலை 5.50 மணிக்கு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவை 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டது.

புதுவையில் இருந்து திருப்பதிக்கு வாரத்தில் 7 நாட்கள் இயக்கப்பட்ட ரயில் தற்போது வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை இயக்குவதால் பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த ரயில் புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே மன்னார்குடியில் இருந்து திருப்பதி வரை விரைவு ரயில் இயக்குவதால் புதுவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணிகள் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை.

திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி வரை ரயில்கள் இயக்கவேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போதிருந்த ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி திருப்பதி-கன்னியாகுமரிக்கு புதிய ரயில் சேவைக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவு கிடப்பில் உள்ளது.

வேலூர் வழியாக ரயில்கள் இயக்குவது குறைக்கப்பட்டதால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். வட இந்தியர்கள் பலர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் அதிகம் வரும் கோயில் என்றால் அது ராமேஸ்வரம்தான். எனவே, திருப்பதி-ராமேஸ்வரம் வழியாக கன்னியாகுமரிக்கு ரயில் இயக்கவேண்டும்.

வேலூரில் இருந்து விழுப்புரம் வரையிலான ரயில்பாதை திருச்சி ரயில்வே கோட்டத்தின்கீழ் வருகிறது. எனவே, வேலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்பிக்கள் ஒன்றாக ரயில்வே நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் அதிகரிப்பதில் நிர்வாகம் அக்கறை செலுத்தவேண்டும். வேலூரில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயிலில் நீண்ட நேரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதில், கழிப்பறை பெட்டியை இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில்வே நிர்வாகம் பழைய திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. புதிய ரயில்கள் இயக்கும் திட்டங்கள் மெதுவாகத்தான் செயல்படுத்தப் படுகிறது. வேலூர் வழியாக புதிய ரயில்கள் இயக்குவது படிப்படியாக நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது’’ என்றனர்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x