Published : 02 Nov 2016 11:35 AM
Last Updated : 02 Nov 2016 11:35 AM
கோவை ரயில் நிலையத்தில் வாடகை வாகனங்களிடம் கட்டணக் கொள்ளை?- சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கும் அவலம்
கோவை ரயில் நிலையத்தில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தால் வாடகை கார் ஓட்டுநர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. விமான நிலையத்தைப் போன்ற நடைமுறையில் வாடகை கார்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் கோவையும் ஒன்று. தொழில், சுற்றுலா வசதிகளுக்காகவும், கேரள ரயில்களுக்காகவும் கோவை ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக இயக்கப்படும் வாடகை வாகனங்கள், கோவை ரயில் நிலைய வளாகத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அதன் ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக பார்க்கிங் கட்டணங்கள் சரியான முறையில் ரயில்வே நிர்வாகம் வரையறை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
விமான நிலையம் போல…
துடியலூரைச் சேர்ந்த ஓட்டுநர் ராபர்ட் என்பவர் ‘தி இந்து’ ‘உங்கள்குரல்’ பகுதியில் கூறும்போது, ‘கோவை ரயில் நிலைய வளாகத்துக்குள் வாடகைக் கார்கள் நிறுத்த 2 மணி நேரத்துக்கு ரூ.20 என்கிறார்கள். ஆனால் பயணிகளை ஏற்றி, இறக்கியதும் அதிகபட்சமாக 10 நிமிடத்தில் அங்கிருந்து பலரும் சென்றுவிடுகிறோம். மீண்டும், அடுத்த வாடகைக்கு வரும்போது, அதேபோல மீண்டும் ரூ.20 கட்ட வேண்டுமென நிர்பந்திக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட முறை மீண்டும், மீண்டும் கட்டணங்களைக் கட்ட வேண்டியிருக்கிறது.
அதேபோல 12 பேருக்கு மேல் அமரக்கூடிய சுற்றுலா வாகனங்கள் ரயில் நிலைய வளாகத்துக்குள் நுழைந்து பயணிகளை ஏற்றி, இறக்கினாலே ரூ.100 கட்ட வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகிறது. இந்த கட்டணத்தையெல்லாம் பயணிகளிடம் கேட்க முடியாது என்பதால், ஒவ்வொரு முறையும் எங்களது சொந்தப் பணத்தை செலவிட்டு வருகிறோம். உதகை, பொள்ளாச்சி, வால்பாறைக்கு சுற்றுலா வருபவர்களை கோவை ரயில்நிலையத்திலிருந்தே அழைத்துச் செல்ல முடியும். அப்படி ஒவ்வொரு முறை வரும்போது, அதிகபட்சமாக 5 நிமிடம் நின்றால் கூட கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. கேள்வி கேட்டால், மிரட்டி வசூலிக்கிறார்கள். இதனாலேயே பெரும்பாலானோர், ரயில்நிலையத்தின் பின்புற வாசலில், சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர்.
கோவை விமான நிலையத்தில் உள்ளே செல்லும் வாடகைக் கார்களுக்கு 90 விநாடிகள் வரை எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு மேலே அந்த வாகனம் உள்ளே நின்றிருந்தால் மட்டுமே ரூ.60 வசூலிக்கிறார்கள். ஒரு வாகனம் எப்போது உள்ளே வருகிறது, எப்போது வெளியே செல்கிறது என்பதை கணக்கிட்டு முறைப்படி கட்டணம் வசூலிப்பது வரவேற்கத்தக்கது. அதைப்போன்ற நடைமுறையை ரயில் நிலையத்திலும் பின்பற்ற வேண்டும். அதேபோல எந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை ரயில்வே நிர்வாகம் முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கோவை ரயில் நிலையத்தின் வருவாயை ஒப்பிடும்போது வசதிகள் குறைவுதான். பல வசதிகள் இருந்தும், இடவசதி இல்லாததால் அவற்றை செயல்படுத்துவதில் சுணக்கம் நீடிக்கிறது. பார்க்கிங் நடைமுறையை ஒரே நாளில் மாற்றி விட முடியாது. பிரச்சினை இருப்பதை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கிறோம். மற்றபடி, பயணிகளை ஏற்றி இறக்க கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT