Published : 05 Nov 2016 10:36 AM
Last Updated : 05 Nov 2016 10:36 AM
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கன்னியாகுமரி மார்க்சிஸ்ட் உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக டிஜிபிக்கு ஜி.ராமகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக விவசாயிகள் நாடு தழுவிய பிரச்சார பயணத்தை தொடங்கவுள்ளனர். இந்தப் பயணம் விவசாய சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் தலைமையில் டெல்லி நோக்கி செல்கிறது. வரும் 24-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு பல லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.
இதனை கன்னியாகுமரியில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் 10-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். நாகர்கோவிலில் 9-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார்.
இந்த சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை ஆகிய வட்டாரக்குழு அலுவலகங்களுக்கு பெயர், முகவரியில்லாமல் கொலைமிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரள முதல் வருக்கு எச்சரிக்கையும், பகிரங்க மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் கட்சி கமிட்டிகள் சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
ஆனால், காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே, இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, கொலைமிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் கடிதம் எழுதிய நபர்களை கண்டுபிடித்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கேரள முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சார பயண தொடக்க நிகழ்ச்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT