Published : 23 Nov 2016 11:06 AM
Last Updated : 23 Nov 2016 11:06 AM

உங்கள் குரல்: நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எம்.மாரிமுத்து, ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையில் 1,800 ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. அதில், 800 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 முதல் 30 பேர் பணியில் உள்ளனர். சாலைகளை ஆய்வு செய்தல், சாலைப் பணியாளர்களுக்கு பணிகளை பகிர்ந்தளித்தல் ஆகியவை ஆய்வாளர்களின் முக்கிய பணியாகும்.

அரசின் ஒவ்வொரு துறையிலும் 3:1 என்ற அடிப்படையில் புதிய ஆட்கள் நியமனமும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்.

இத்துறையைப் பொறுத்தவரை டிப்ளமோ படித்த, 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஆய்வாளர்களுக்கு, இளநிலை வரைதொழில் அலுவலராக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பொறியியல் சார்நிலை பணி விதி பிரிவு 15-லும், அது தொடர்பான அறிவிப்பு அரசாணை எண் 426/7.4.1984 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே கடந்த 2009, 2013, 2016-ம் ஆண்டுகளில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை அவை பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2009 மற்றும் 2013-ல் நடைபெற்ற நியமனத்திலும், இத்துறையில் உள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர் வழங்கப்படவில்லை.

இது குறித்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு பதில் அளித்துள்ள துறை அதிகாரிகள், அரசின் விதிமுறைகள் அவ்வாறு இல்லை என தவறான தகவலை அளித்துள்ளனர்.

கடந்த 18.9.2016 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட பதிலில் அதே துறை அதிகாரிகள் அரசின் விதிமுறைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வெளிப்படையான அணுகுமுறை இல்லாத நிலையே இத்துறையில் நிலவுகிறது. இதே விதியைப் பின்பற்றி, கடந்த 1972-ல் பலரும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பதவி உயர்வால் அரசுக்கு ரூ.6,000 மட்டுமே கூடுதல் செலவு ஏற்படும். புதிதாக தேர்ந்தெடுக்கும் நபரால் அரசுக்கு ரூ.24,000 வரை செலவு பிடிக்கும்.

இன்றைய நிலையில் மாநிலம் முழுவதுமே கணக்கிட்டாலும் பதவி உயர்வுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை மிக சொற்பமே. ஆகவே இனியாவது இத்துறையின் உயர் அதிகாரிகள் எங்களுக்கு பதவி உயர்வு அளிக்க முன் வரவேண்டும்.

அரசு விதிகளை முறையாக பின்பற்றினால், சுழற்சி அடிப்படையில் பணி நியமனமும், பதவி உயர்வும் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x