Published : 30 Nov 2016 11:11 AM
Last Updated : 30 Nov 2016 11:11 AM

உங்கள் குரல்: தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடி

அணுகு சாலை நிறுத்தங்களை புறக்கணிக்கும் பேருந்துகள்



அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தங்களில் நிற்காமல் பிரதான சாலையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

‘தி இந்து’ நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் பேசிய தூத்துக்குடியை சேர்ந்த வாசகர் ஒருவர், ``தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் செல்லும் பேருந்துகள் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. பிரதான சாலையிலேயே ஏற்றி இறக்குவதால் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது” என புகார் தெரிவித்தார்.

அணுகுசாலை புறக்கணிப்பு

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் சிதம்பரநகர், மில்லர்புரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் அணுகு சாலைகளில் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதிகளாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேருந்து நிறுத்தங்கள் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், பேருந்துகள் எதுவுமே அணுகு சாலைக்கு செல்வதில்லை. பிரதான சாலையிலேயே பயணிகளை ஏற்றி இறக்குகின்றன.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், பயணிகள் நிறுத்தத்தில் காத்திருக்காமல் பிரதான சாலையை ஒட்டிய சாலை தடுப்பு பகுதியிலேயே ஆபத்தான நிலையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

சிதம்பர நகர்

சிதம்பர நகர் நிறுத்தம் அமைந்துள்ள அணுகுசாலையில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, இந்த அணுகுசாலையில் பேருந்துகளை இயக்க முடியவில்லை. இந்த சாலையில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனு மதிக்கக் கூடாது என சுட்டிக் காட்டு கின்றனர் பயணிகள்.

மில்லர்புரம்

மில்லர்புரத்தை பொறுத்தவரை சந்திப்பு பகுதியில் பிரதான சாலையிலேயே நிறுத்தம் இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக கூறி தற்போது அணுகு சாலையில் வ.உ.சி. கல்லூரி அருகே புதிய நிறுத்தம் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், அந்த பேருந்து நிறுத்தம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. பயணிகள் பழைய பேருந்து நிறுத்தத்திலேயே நிற்பதாலும், பேருந்துகள் அணுகு சாலைக்குள் செல்லாமல் பிரதான சாலையிலேயே செல்வதாலும் இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி தொடர்ந்து வருகிறது. பழைய பேருந்து நிறுத்தத்தை முழுமையாக அகற்றிவிட்டு, அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்கின்றனர் பயணிகள்.

ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள நிறுத்தத்தை பொறுத்தவரை அணுகு சாலையில் எந்தவித இடர்பாடும் இல்லை. இருப்பினும் பேருந்துகள் அணுகு சாலைக்குள் செல்வதில்லை. பிரதான சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே, அனைத்து பேருந்துகளும் அணுகு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x