Last Updated : 30 Nov, 2016 09:44 AM

 

Published : 30 Nov 2016 09:44 AM
Last Updated : 30 Nov 2016 09:44 AM

நம்மைச் சுற்றி: கம்யூனிஸ நாடு, சோஷலிச நாடு: என்ன வித்தியாசம்?

ஏழை, பணக்காரன் இல்லை என்றால் ‘அரசு’ என்ற கட்டமைப்பே தேவையில்லாது போகும். அதுவே கம்யூனிஸ சமூகம் என்கிறது கம்யூனிஸ தத்துவம். அதை நோக்கிச் செல்ல முயலும் நாடுகளைப் பொதுவாக, கம்யூனிஸ நாடுகள் என்கிறார்கள். ஆனால், ஒரு நாடு கம்யூனிஸ நாடாக மாறும் வழியில் சோஷலிசம் என்ற கட்டத்தை கடக்கவேண்டும் என்கிறது தத்துவம்.

20-ம் நூற்றாண்டில் ரஷ்யா, ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அங்கோலா, பல்கேரியா, கம்போடியா, செக்கோஸ்லேவியா, ஹங்கேரி, மங்கோலியா, போலந்து உள்பட 20-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ நாடுகள் இருந்தன. சீனா, கியூபா, லாவோஸ், வடகொரியா, வியத்நாம் ஆகிய 5 நாடுகளாக அவை குறைந்துவிட்டன. பல கம்யூனிஸ நாடுகளில் ஒரு கட்சி ஆட்சி முறைதான் உள்ளது. சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு சில கட்சிகள் இருந்தாலும், அங்கே கம்யூனிஸத்தை எதிர்க்கும் நோக்கத்தோடு ஒரு கட்சியைத் தொடங்க முடியாது.

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கே சவால்விட்ட ரஷ்யா, தற்போது கம்யூனிஸ நாடு இல்லை. அதிபராக இருக்கும் புதின், ‘யுனைட்டட் ரஷ்யா’ என்ற கட்சியைச் சேர்ந்தவர். அது நம் நாட்டின் காங்கிரஸைப் போன்றது, அதை வலது என்றோ, இடது என்றோ கூற முடியாது. அந்த நாட்டில் எதிர்க்கட்சி வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நாடுகளும் உண்டு. நேபாளம் ஓர் உதாரணம்.

இன்று தங்களை பல நாடுகள் சோஷலிச நாடுகள் என அழைத்துக்கொள்கின்றன. இந்தியா, இலங்கை போர்ச்சுகல், தான்சானியா உள்பட பல நாடுகள் தங்களின் அரசியல் சாசனங்களில் சோஷலிசத்தை நோக்கமாக வைத்துள்ளன. இந்தியாவும் எழுத்தளவில் சோஷலிச நாடுதான்.

அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளை முதலாளித்துவ நாடுகள் என்கிறார்கள். முதலாளித்துவத்தில் உள்ள நல்ல விஷயங்களையும், கம்யூனிஸத்தில் உள்ள நல்ல கருத்துக்களையும் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்யவே பல நாடுகள் முயல்கின்றன. எனவே, இன்றைய சூழலில் எந்த நாட்டையும் 100% கம்யூனிஸ நாடு என்றோ, முதலாளித்துவ நாடு என்றோ சொல்லிவிட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x