Published : 14 Oct 2016 10:05 AM
Last Updated : 14 Oct 2016 10:05 AM

நம்மைச் சுற்றி: நண்பனா, பகைவனா?

நண்பனா, பகைவனா?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இருந்த காலகட்டத்தில், பிஹார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக பாஜகவின் சுஷில் குமார் மோடியும் இருந்தார்கள். இடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நிதிஷ் வெளியேறினார். மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி வென்றதையடுத்து, தார்மீகரீதியாகப் பதவி விலகி, சில மாதங்களில் மீண்டும் முதல்வரான நிதிஷ், பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, சுஷில் குமாரை அணைத்துக்கொண்டு, “என்ன இப்படியே இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?” என்று பாசத்துடன் கேட்டார். பிஹார் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வரான பின்னரும் சுஷில் குமாரிடம் ஆலோசனை கேட்பதும் வழக்கம். ஆனால், இப்போதெல்லாம் நிதிஷ் ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார் சுஷில் குமார். நிதிஷும் ‘சுஷில் சொல்வதையெல்லாம் காதில் வாங்குவதில்லை’ என்று சொல்லிவிட்டார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நீண்டகால நண்பரும் இல்லை என்பது எழுதப்படாத விதிபோலும்!

இன்னொரு சேனை!

மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட சிவசேனா கட்சி, இப்போது தீவிர இந்துத்துவ ஆதரவு இயக்கமாகச் செயல்பட்டுவருகிறது. தற்போது அதே போன்றதொரு அமைப்பு இலங்கையிலும் தொடங்கப்பட்டுள்ளது. பெயர் சிவசேனை. “சிங்கள பௌத்தர்கள் உள்ளிட்ட மற்ற மதக் குழுக்களின் அச்சுறுத்தலில் இருந்து சிறுபான்மை இந்துக்களைக் காப்பதற்காகவே இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம். இந்த அமைப்புக்கும் சிவசேனாவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அதேநேரத்தில், அவர்களின் ஆதரவையும், பாஜக, விஸ்வ இந்து பரிஷத் போன்றவற்றின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்” என்கிறார் அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன்.

செய்திச் சுருக்கம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் நடத்திய செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்துத் தெரிவித்தது. செய்தி வெளியாவதற்கு முன்பாகவே, முன்னாள் பிரதமர் எனும் முறையில் மன்மோகன் சிங்குக்கு, வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் தொலைபேசியில் இந்தத் தகவலைச் சுருக்கமாகத் தெரிவித்தாராம். மேலதிகத் தகவல்கள் தர முடியுமா என்று மன்மோகன் சிங் கேட்டபோது, பிரதமர் அலுவலகம் சொன்ன தகவல்கள் அவ்வளவுதான் என்று சொல்லி அழைப்பை முடித்துக்கொண்டாராம் ஜெய்சங்கர். கடுப்பில் இருக்கிறதாம் காங்கிரஸ்!.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x