Published : 18 Oct 2016 12:13 PM
Last Updated : 18 Oct 2016 12:13 PM

சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி அருகே குப்பைகள் எரிப்பதால் அவதி

சேலத்தை அடுத்துள்ள தாசநாயக்கன்பட்டியில் ஊராட்சியில் சேரும் குப்பை முழுவதும் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளி அருகில் கொட்டி எரிக்கப்படுவதால், பள்ளி குழந்தைகள், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதி தொலைபேசி மூலம் வாசகர் கதிரவன் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் சின்னையாபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் அருகில் குடியிருப்புகளும் உள்ளன.

அங்கன்வாடி மையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது ஊராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை முழுவதும் கொண்டு வரப்பட்டு, இந்த பள்ளத்தில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.

சரிவர தீ வைத்து எரிக்கப்படாததால், அந்த இடத்தில் இருந்து நாள் முழுவதும் அதிகமாக புகை வெளியேறிக் கொண்டே இருக்கிறது.

இதனால் அங்கன்வாடியில் இருக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது. சுற்று வட்டார குடியிருப்புகளில் இருப்பவர்களும் குப்பை குழியில் எழும் புகையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு தனியாக கழிப்பிடமும் அமைக்கப்படவில்லை. மேலும், அங்கன்வாடி அமைந்துள்ள இடத்தின் சுற்றுப்புறத்தில் அடர்த்தியான முட்புதர் காணப்படுகிறது. இதனை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

முழுவதும் ஆரோக்கியமற்ற சூழலில் அங்கன்வாடி குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்கு பல்வேறு உடல்நலக்குறைபாடு ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது. பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி குழந்தைகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குண்டும், குழியுமாக உள்ள ஓசூர் அலசநத்தம் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட அலசநத்தம் சாலை கடந்த 10 வருடங்களாக பராமரிப்பின்றி பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. ஆகவே நகராட்சி அதிகாரிகள், இந்த சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திகிரி வாசகர் ஐயப்பன் (40) ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து ஐயப்பன் மற்றும் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் ஆகியோர் கூறியதாவது:

ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இடது புறமாக உள்ள குட்டஏரியை ஒட்டி அலசநத்தம் சாலை தொடங்குகிறது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. குட்டஏரியின் அருகே ஆரம்பித்து பிஸ்மில்லா நகர் மற்றும் இஸ்கான்சிட்டி வரை இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனிடையே வெங்கடேஷ்நகர், நரசிம்மா காலனி, அலசநத்தம், தோட்டகிரிநகர் போன்ற பல நகர்கள் இந்த சாலையில் அமைந்துள்ளன. மழைக் காலங்களில் ப ழுதடைந்த இந்த சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதால் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியவில்லை. இந்த சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளும், பள்ளி மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே குண்டும் குழியுமாக உள்ள அலசநத்தம் சாலையை சீரமைக்க ஓசூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினார்.

************

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் தொலைபேசி எண்கள்

சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x