Published : 28 Oct 2016 11:46 AM
Last Updated : 28 Oct 2016 11:46 AM

உங்கள் குரல்: பழைய வண்ணாரப்பேட்டையில் தேங்கும் கழிவுநீரால் கொசுத் தொல்லை

வேகத்தடை அமைக்க வேண்டும்

சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள பிரதான சாலையான அண்ணா சாலை தற்போது புதிதாக போடப்பட்டுள்ளது. எனவே இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. இதனால் வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது. விபத்துகளைத் தடுக்க, அந்த சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.

- பி.ஜெயராஜ், காரப்பாக்கம்.

சாலை சீரமைக்கப்படுமா?

கோவிலம்பாக்கம் அடுத்த உள்ளகரம் பகுதியில் சாலைகள் உரிய பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மண் சாலைகளாகவே உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை தார் சாலையாகவோ, சிமென்ட் சாலையாகவோ மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ப.கம்பல் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

திருவிக நகர் பஸ் சேவை மீண்டும் தொடருமா?

கோயம்பேடு- பெரம்பூர் பஸ் நிலையம்- திருவிக நகர் இடையே இயக்கப்பட்டு வந்த 138சி என்ற பஸ் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது 46 என்ற எண் கொண்ட பஸ், கோயம்பேட்டிலிருந்து திருவிக நகர் வழியாக பெரம்பூர் வரை இயக்கப்படுகிறது. இந்த பஸ் மீண்டும் கோயம்பேடு செல்லும்போது, திருவிக நகர் வழியாக, செல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே 46 எண் கொண்ட பஸ் திருவிக நகர் வழியாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஏ.ஜெயகிருஷ்ணன், திருவிக நகர்.

தேங்கும் கழிவுநீரால் கொசுத் தொல்லை

பழைய வண்ணாரப்பேட்டை, சோலையப்பன் தெருவில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீக்கப்படாததால், கடந்த சில மாதங்களாகவே கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடி வருகிறது. இதனால், அங்கு கொசுத் தொல்லையும், துர்நாற்றமும் அதிகரித்துள்ளது. எனவே தெருக்களில் கழிவுநீர் தேங்கு வதைத் தடுக்க வேண்டும்.

- வாசகர், பழைய வண்ணாரப்பேட்டை.

கழிவுநீர் கட்டமைப்பு இல்லை

புழல் சிறைக் காவலர் குடியிருப்பில் கழிவுநீரை வெளியேற்றும் முறையான கட்டமைப்பு இல்லாததால், குடியிருப்பு வளாகத்திலேயே கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. துர்நாற்றம் வீசுவதால், அங்கு வசிக்கவே முடியவில்லை. எனவே அங்கு முறையான கழிவுநீர் கட்டமைப்பை ஏற்படுத்தி, சுகாதார சீர்கேட்டைத் தடுக்க வேண்டும்.

- வாசகர், புழல்.

பழுதடைந்த சாலையை சீர் செய்வார்களா?

தர்கா சாலை, பி.வி.வைத்தியலிங்கம் சாலை சந்திப்பிலிருந்து கீழ்க்கட்டளை வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைக்காலத்துக்கு முன்பே இந்தச் சாலையை சரிசெய்ய வேண்டும்.

- ஏ.பி.மதிவாணன், ஜமீன் பல்லாவரம்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பெரம்பூரிலிருந்து பெசன்ட் நகர் வரை இயக்கப்படும் 29பி எக்ஸ்டென்ஷன் பஸ்கள் திருவிக நகர் வரை இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு இவற்றை கூடுதலாக இயக்க மாநகர போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குமார், திரு.வி.க.நகர்.

கிராம நிர்வாக அலுவலர் தேவை

காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்தூர் பகுதியில் நிரந்தரமாக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படவில்லை. கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள குன்றத்தூர் கிராம நிர்வாக அலுவலர் எப்போது வருவார், எப்போது செல்வார் என்றே தெரியவில்லை. இதனால், பல்வேறு பணிகள் தாமதமாகின்றன. எனவே, நிரந்தரமாக இந்தப் பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும்.

- ஆர்.தரன், அனகாபுத்தூர்.

பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

வேளச்சேரி பிரதான சாலையில் தண்டீஸ்வரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து புழுதி பறக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்தச் சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

- ஹூசைன், வேளச்சேரி.



‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x