Published : 07 Oct 2016 11:21 AM
Last Updated : 07 Oct 2016 11:21 AM
அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
‘தி இந்து’வுக்கு நன்றி - சாலை சீரமைப்பு
போரூர் மகானந்தபுரம் - முகலிவாக்கம் இடையே சாலை பழுதடைந்திருப்பதாக ‘தி இந்து’ உங்கள் குரலில் புகார் தெரிவித்திருந்தேன். அது ‘தி இந்து’ நாளிதழில் செய்தியாக வெளிவந்திருந்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உடனடியாக சாலை சீரமைக்கப்பட்டது. இது ‘தி இந்து’ செய்தியாலேயே சாத்தியமாகியுள்ளது. அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். - சி.பி.குகன், போரூர்.
கொசுத் தொல்லையால் மக்கள் அவதி
மடிப்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம், லட்சுமி நகர், பெரியார் நகர் ஆகிய இடங்களில் காலி நிலங்கள் அதிகமாக உள்ளன. அவ்வப்போது மழை பெய்து வருவதால் காலி இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கொசுவால் தொற்று நோய்கள் பரவக் கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியில் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - வாசகர், மடிப்பாக்கம்.
சாலை சீரமைக்கப்படுமா?
பெருங்களத்தூர் - கிழக்கு தாம்பரம் இடையே பழைய ஜிஎஸ்டி சாலையில் 3 கி.மீ. தொலைவுக்குச் சாலை சீரமைக்கும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. அதில் இரு இடங்களில் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சாலை பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சாலை அமைக்கவில்லை. காலை, மாலை வேளைகளில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பழைய ஜிஎஸ்டி சாலை பயனுள்ளதாக இருந்தது. அந்த சாலையும் தற்போது பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளகியுள்ளனர். எனவே, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். - கி.வினு, பெருங்களத்தூர்.
சுரங்க நடைபாதை அகலப்படுத்தப்படுமா?
ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள், அங்குள்ள சுரங்க நடைபாதையைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நடைபாதை குறுகியதாக இருப்பதால், கடும் நெரிசலுக்கு இடையேதான் பயணிகள் கடந்து செல்கின்றனர். கூட்டம் அதிகமானால் வரிசையில் நின்று செல்லும் நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் குறிப்பிட்ட ரயில்களைத் தவற விடும் நிலையும் பயணிகளுக்கு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவையும் விரைவில் தொடங்கப்பட இருப்பதால், சுரங்கப்பாதை மேலும் நெரிசலுக்குள்ளாகும். எனவே, அதை அகலப்படுத்த வேண்டும். - ஏ.முருகவேல், ஆதம்பாக்கம்.
சாலை நடுவில் தடுப்பு வேண்டும்
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து திருநீர்மலை செல்லும் சாலையில் எதிரெதிர் திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் சாலை விதிகளை மீறி, ஒன்றை ஒன்று முந்திச் செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிறது. எனவே, விபத்துகளைக் குறைக்க அந்தச் சாலையின் நடுவில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். - வாசகர், பம்மல்.
வங்கி பாஸ்புக் பிரின்ட்டர் பழுது
மறைமலைநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே பாஸ்புக் பிரின்ட் செய்துகொள்ளும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அது பல மாதங்களாக பழுதாகிக் கிடக்கிறது. வங்கி அலுவலர்களின் அருகில் உள்ள பிரின்ட்டர் இயந்திரங்களும் பழுதடைந்துள்ளன. அவற்றைப் பழுது நீக்க அலுவலர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அங்குள்ள பிரின்ட்டர் இயந்திரங்களின் பழுதினை சரிசெய்ய வேண்டும். - பி.சந்திரசேகரன், மறைமலைநகர்.
எரியும் மின் விளக்குகள்
மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள விளையாட்டரங்கம் அருகில், ரயில் நிலையம் செல்லும் சாலையில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை மூலம் புகார் தெரிவித்திருந்தேன். அது நமது நாளிதழில் செய்தியாக வந்திருந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் தற்போது விளக்குகள் எரிகின்றன. அதற்காக ‘தி இந்து’வுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். - கே.மாணிக்கம், காட்டாங்கொளத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT