Published : 14 Oct 2016 02:11 PM
Last Updated : 14 Oct 2016 02:11 PM
அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
044-42890008 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
வாரச் சந்தையில் இட நெருக்கடி
பனப்பாக்கம் பேரூராட்சியில் வாரச் சந்தைக்கான இடத்தில் அதிக நெருக்கடியாக உள்ளது. சந்தை நடக்கும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, வாரச் சந்தை மைதானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனியாண்டி, பனப்பாக்கம்.
பகலில் எரியும் மின் விளக்குகள்
செங்கம் வட்டம் பரமனந்தல் கிராமத்தில் இரவு, பகலாக தெருவிளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மின் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாசகர், பரமனந்தல்.
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
செங்கம் வட்டம் மகமத்தூர், மேல்நாச்சிப்பட்டு, வடமாத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருக்கும் ஏரிகள் தூர்ந்து கிடக்கின்றன. மேலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், மழை காலத்தில் நீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
-ராஜா, சேந்தமங்கலம்.
வேகத்தடை மீண்டும் வேண்டும்
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் ஜெயலலிதா அரக்கோணம் வந்து சென்றார். அப்போது, அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த வேகத் தடைகளை அகற்றினர். அகற்றப்பட்ட வேகத் தடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் உடனே அமைக்க வேண்டும்.
-தன்ராஜ், விண்டர்பேட்டை.
புதிய கடைகள் திறக்கப்படுமா ?
திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நகராட்சி சார்பில் புதிய கடைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தக் கடைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடக்கிறது. நகராட்சி வருமானத்தைப் பெருக்க கட்டப்பட்ட புதிய கடைகளை, பொது ஏலம் மூலம் திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும்.
கே.கிருஷ்ணமூர்த்தி, திருப்பத்தூர்.
தொடரும் மணல் கொள்ளை
கணியம்பாடி அடுத்துள்ள நாகநதியில் தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணி வரை, 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மணல் கடத்தப்படுகிறது.
இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் யாரும் சம்பவ இடத்துக்கு வருவதில்லை.
-பொதுமக்கள், கணியம்பாடி.
ஆதார் படத்துக்கு மாற்று ஏற்பாடு
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் முதல் மாடியில் ஆதார் அட்டை பெற புகைப்படம் எடுக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. வயதானவர்கள், மாற்றுத் தினாளிகள், பெண்களால் எளிதாக முதல்மாடிக்கு சென்று வர முடிய வில்லை. எனவே, கீழ்தளத்தில் ஆதார் அட்டைக்கு தேவையான புகைப்படம் எடுக்க வருவாய்த் துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-எஸ். மணிகண்டன், திருப்பத்தூர்
ஓட்டேரி ஏரி தூர்வாரப்படுமா?
வேலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக ஓட்டேரி இருக்கிறது. கடந்த ஆண்டு பருவ மழைக் காலத்தில் பெய்த மழையால் ஓட்டேரி நிரம்பியது. இந்த ஆண்டு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஓட்டேரியை ஏரி மற்றும் கால்வாயைத் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அசோகன், வேலூர்.
கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை தெருக்களில் கொட்டப்படுகிறது. நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பை, கழிவுகளை அகற்ற முன் வராததால் ஆங்காங்கே வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன. இதனால், திருப்பத்தூர் பிரதானச் சாலைகளில் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.
-எல். சாவித்ரி, திருப்பத்தூர்.
கிடப்பில் பாதாளச் சாக்கடை பணி
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கி பல மாதங்களாகின்றன. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், ஒரு சில வார்டுகளில் மட்டுமே 60 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது.
15-க்கும் மேற்பட்ட வார்டுகளில் பணி தொடங்கிய நிலையிலேயே உள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கால்வாய் கழிவுநீர் நிரம்பி சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கு வதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, பாதாளச் சாக்கடைத் திட்டப்பணியை நகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும்.
-எல்.மஞ்சுளா மற்றும் அசோகன் திருப்பத்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT