Published : 14 Oct 2016 02:09 PM
Last Updated : 14 Oct 2016 02:09 PM
அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
044-42890006 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:
தரைப்பாலங்களில் தார்சாலை போடப்படுமா?
திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து தம்மம்பட்டி செல்லும் வழியில் குறுக்கிடும் காட்டாறுகளின் மேல் வாகனங்கள் செல்வதற்காக 5 இடங்களில் தரைப்பாலங்கள் அமைத்துள்ளனர். இந்த பாலங்களின் மீது தார் சாலை அமைக்கவில்லை. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, இந்த பாலங்கள் மீது தார் சாலை அமைக்க வேண்டும்.
-அண்ணாமலை, சோபனபுரம்.
ரவுண்டானா அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் லால்குடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் இறங்கும் இடத்தின் அருகில் தான் வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் இந்த இடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, பால இறக்கத்தில் ரவுண்டானா அமைக்க அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வரதராஜன், லால்குடி
சாலையோர முள் செடிகளை அகற்ற வேண்டும்
தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூரிலிருந்து கும்பகோணம், சுவாமிமலை, அண்டக்குடி, கபிஸ்தலம், நாககுடி, பட்டவர்த்தி, திருவையாறு செல்லும் சாலைகள் மற்றும் மண்ணியாற்றின் கரையில் உள்ள சாலையின் இருபுறமும் முள் செடிகள் மற்றும் புதர்கள் மண்டியுள்ளன. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கீதா முருகானந்தம், திருவைகாவூர்.
தனியாரிடம் விற்கப்படும் குளோரின் பவுடர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் ஊராட்சி மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்ய வழங்கப்படும் குளோரின் பவுடர் தனியாருக்கு விற்கப்படுகிறது. அரசு சார்பில் கழிவறை கட்டும் திட்டத்துக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.12 ஆயிரத்தைப் பெற்றுத்தருவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வசூலிக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தினர் இந்த முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.
கிடப்பில் போடப்பட்டுள்ள உதவித்தொகை விண்ணப்பம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான நான், ஊனமுற்றோர் உதவித்தொகை தொடர்பாக விண்ணப்பம் கொடுத்து, 4 மாதங்களுக்கு மேலாகியும் அந்த விண்ணப்பம் திருத்துறைப்பூண்டி சமூக நலத்திட்ட அலுவலகத்திலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா?.
-மணிகண்டன், முத்துப்பேட்டை.
பசுமை வீடுகள் ஒதுக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகேயுள்ள அம்மாபட்டினம் கிராமத்தில் ஏழை எளியோருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அரசின் பசுமை வீடு திட்டத்தில் தகுதியானவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எனவே, அரசு விசாரணை மேற்கொண்டு, தகுதியானவர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும்.
-அப்துல் ரகுமான், அம்மாபட்டினம்.
வாரச்சந்தைக்கு கட்டிடம் கட்ட வேண்டும்
அரியலூர் பேருந்து நிலையம் அருகே வாரந்தோரும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தை அமைந்துள்ள இடம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. காய்கறிகள் தரையிலேயே, சாக்குகளை விரித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதையே மக்களும் வாங்கிச் செல்கின்றனர். சுகாதாரமான முறையில் காய்கறிகளை விற்க புறவழிச்சாலையில் இடம் தேர்வு செய்து, கட்டிடம் கட்டி வாரச் சந்தையை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். அல்லது, தற்போது நடந்து வரும் வாரச்சந்தை உள்ள இடத்திலாவது கட்டிடம் கட்டி கடைகளை அமைத்து கொடுக்க வேண்டும்.
-மருதமுத்து நாராயணசாமி, அரியலூர்.
வி.கைகாட்டியில் சாக்கடையை தூர் வார வேண்டும்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் சாக்கடை வாய்க்கால் தூர் வாரப்படாமல், ஆங்காங்கே சாக்கடை தண்ணீர் தேங்கியுள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு சில இடங்களில் சாக்கடை வாய்க்கால் தோண்டப்பட்டது. அவை இதுவரை சரிசெய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, ஊராட்சி நிர்வாகம் சாக்கடையை தூர் வாரவும், சாக்கடை வாய்க்காலை முழுமையாக அமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபாகரன், வி.கைகாட்டி, அரியலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT