Published : 13 Oct 2016 09:18 AM
Last Updated : 13 Oct 2016 09:18 AM

காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்!

திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது.

தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி ஒரு வாழ்நாளையே கழித்துவிடலாம்’ என்பார் எழுத்தாளர் தி.ஜானகிராமன். மிட்டா மிராசுகள், ஊர் பெருந்தனக்காரர்கள் வீட்டுத் திண்ணைகள் ஆளுயரத்துக்கு மேல் இருக்கும். கீழே பண்ணையாட்கள் கைகட்டி வாய்பொத்தி நிற்க அதிகார பீடத்தின் அடையாளங்களாகவும் அவை இருந்தன. காலப்போக்கில் முதியோர்களின் கடைசிப் புகலிடமாகவும் அவை மாறிப்போனது உண்டு.

திண்ணைப் பள்ளிக்கூடங்கள்

தமிழ்த் தாத்தா உ.வே.சா. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர்தான். திண்ணைப் பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் மேற்கூரை நெடுகவும் கயிறுகள் வரிசையாகத் தொங்கும். இரவில் படிக்க வரும் மாணாக்கர்கள் தங்களின் லாந்தர் விளக்குகளை அந்தக் கயிறுகளில் கட்டித் தொங்கவிட்டுப் படிக்க உட்காருவார்கள்.

நீண்ட திண்ணைகளில் நெடுக சிமெண்ட்டைக் குழைத்து ஒரு செங்கல் நீளம் கட்டிப் பூசியிருப்பார்கள். அது வழவழப்பாக ஜில்லென்று இருக்கும். இதற்கு மாப்பிள்ளைத் தலைகாணி என்று பெயர். இந்தத் திண்ணைகளில் விடிய விடிய சீட்டுக் கச்சேரி நடக்கும். அரட்டை, வெற்றிலைக் குதப்பல், ஊர்வம்பு அரங்கேறும் இடமே திண்ணைதான். திண்ணைப் பேச்சு, திண்ணைத்தூங்கிக் கூட்டம் இதெல்லாம் தஞ்சாவூர் ஜில்லாவின் கேலிப் பிரதாபங்கள்.

குறடும் ரேழியும்

திண்ணைக்கு முன்புறமுள்ள இடத்துக்குக் குறடு என்று பெயர். திண்ணையில் உட்கார்ந்து வேதம் படிக்கும் அந்தணர் முன்பு குறட்டில் குடியானவர்கள் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை வைத்து வணங்கிச் செல்வார்கள். திண்ணையிலிருந்து வீட்டு வாசலுக்குள் நுழையும் இடைப்பட்ட பகுதி ரேழி என்று அழைக்கப்படும்.

குடியானவர்களின் குடிசை வீடுகளில் சாணி மெழுகிய திண்ணைகளின் குளுமை சொல்லிமாளாது. தஞ்சாவூரில் விட்டில் மந்திர் திண்ணை பிரபலமானது. மேலவீதியில் உள்ள பாக்கு மரத்து ஐயர் வீட்டுக்குச் சொந்தமான இந்தத் திண்ணை, வீட்டின் காம்பவுண்டுச் சுவருக்கு வெளியே நீளமாகக் கட்டப்பட்டிருக்கும். தெருவாசிகளுக்கும் தேசாந்திரிகளுக்கும் அந்த வீட்டாரின் நன்கொடையாக அந்தத் திண்ணை இன்றும் உள்ளது. அங்கே அரசியல் கூட்டங்கள் நடந்தது உண்டு. மேலவீதி வழியே சுவாமி புறப்பாடு ஆகிவரும் ஊர்வலத்தில், நாகசுரம் முதலான வாத்தியங்களை வாசித்தபடி வரும் பெரிய வித்வான்கள் இந்தத் திண்ணைக்கு முன்னால் நின்று வாசித்துவிட்டுச் செல்வார்கள். அக்காலத்தில் சங்கீத ஜாம்பவான்கள் இந்தத் திண்ணையில் உட்கார்ந்து சாதகம் செய்ததால் இப்படியொரு மரியாதை இந்தத் திண்ணைக்குக் கிடைத்துவந்தது.

நல்ல, பெரிய, அகன்ற திண்ணைகளில் படுத்தும் உட் கார்ந்தும் விசிறியபடியே ஓய்வெடுக்கும் முதியவர்களையும், குழந்தைகளுக்குத் தலைபின்னிவிடும் தாய்மார்களையும், கதை சொல்லும் பாட்டிமார்களையும் இனி காண முடியாது. நவீன வாழ்க்கையிடமிருந்து விடைபெறும் திண்ணைகளைக் கண்டு மனம் கனக்கவே செய்கிறது.

- தஞ்சாவூர்க் கவிராயர்,

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x