Published : 07 Oct 2016 11:37 AM
Last Updated : 07 Oct 2016 11:37 AM

உங்கள் குரல்: சிவகங்கையில் சேதமான இணைப்பு பாலம்

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890004 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

போக்குவரத்து நெரிசலான சாலை

மதுரை பழைய சிறைச்சாலை பகுதியில் தினமும் காலை 5 முதல் 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் காலையில் பணிகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - சந்தானகிருஷ்ணன், ஆனையூர்.

பயணிகளை அவதிக்குள்ளாக்கும் பேருந்து

மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து செல்லும் 1706 என்ற எண் கொண்ட பேருந்தில் அதிர்வுகள், இரைச்சல் அதிகமாக உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளால் பயணிகள் பேருந்தில் செல்லவே யோசிக்கின்றனர். எனவே, இதனை சரிசெய்ய போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும். - கே.ராமநாதன், மதுரை.

சேதமான இணைப்பு பாலம்

சிவகங்கை இந்திராநகர் 3-வது குறுக்குத் தெருவில் உள்ள இணைப்புச்சாலை பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயணிகள் செல்ல முடியவில்லை. - அப்துல்ரஹீம், சிவகங்கை.

மந்தமான பாலம் வேலை

மதுரை ஆரப்பாளையம், அருள்தாஸ்புரம் பால வேலைகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இந்த பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மனோகரன், மதுரை.

வாகன காப்பகத்தில் கூடுதல் கட்டணம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வாகன கட்டண காப்பகத்தில் வாகனங்களை நிறுத்த ரூ.5 தான் வாங்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரூ.10 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். இதுதொடர்பாக சரியான தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். - கலைமணி, காரைக்குடி

சாலையில் தேங்கும் மழைநீர்

மதுரை விளாங்குடி சூசைநகர் இரண்டாவது தெருவில் மழைநீர் அதிகளவில் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதியுடன் சாலை வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மனோகரன், விளாங்குடி, மதுரை

தரமற்ற பள்ளி கட்டிடம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடம் தரமின்றி கட்டப்பட்டதால் பாதியிலேயே விழுந்துவிட்டது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். எனவே, பள்ளி கட்டிடத்தை தரமாக கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். - ஆனந்த், இளையான்குடி.

கோயிலை சுற்றி சேதமடைந்த சாலை

மதுரையை சுற்றி சாலைகள் மிக மோசமாக உள்ளன. மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியும் சாலை மோசமாக உள்ளது. சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இவற்றை சரி செய்ய வேண்டும். - முருகதாஸ், மதுரை.

கான்கிரீட்டுகளை அகற்ற வேண்டும்

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மின்சார வாரியம் அருகேயுள்ள காலியிடத்தில் சாலைகளை பெயர்த்த சிமெண்ட் கான்கிரீட்டுகளை கொட்டி குப்பையாக்குகின்றனர். இதனால் பூச்சிகளின் வசிப்பிடமாக மாறும் ஆபத்து உள்ளது. ஆரம்பத்திலேயே இதனை தடுக்க வேண்டும். - மோகனசுந்தரம், வில்லாபுரம்.

மக்களை மிரட்டும் தெருநாய்கள்

மதுரை பீ.பீ.குளம் அன்னை தெரசா காலனியில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இதுவரை பலரையும் நாய் நடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மதுரை மாநகராட்சியில் பலமுறை புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. - அய்யனார், பீ.பீ.குளம், மதுரை.

வேகமாக செல்லும் எஸ்கலேட்டர்

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள 2 எஸ்கலேட்டர்கள் மிகவும் வேகமாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதியோர், குழந்தைகள் ஏற முடியவில்லை. எனவே, எஸ்கலேட்டர் வேகத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - அன்புமணி, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x