Published : 25 Oct 2016 10:59 AM
Last Updated : 25 Oct 2016 10:59 AM

உங்கள் குரல்: கழிவுநீரால் மாசடையும் சேலம் குமரகிரி ஏரி

கழிவுநீரால் மாசடையும் சேலம் குமரகிரி ஏரி: சீரமைத்து பாதுகாக்க வேண்டுகோள்

சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரியில் கழிவுநீர் கலந்தும் குப்பை கொட்டப்பட்டும் நாளுக்கு நாள் அசுத்தமடைந்து வருவதாக ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த வாசகர் கணேசன் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

ஒரு காலத்தில் அம்மாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் ஆதாரமாக குமரகிரி ஏரி இருந்து வந்தது. ஆனால், நீர் வரத்து கால்வாய்கள் தூர் வாரப்படாமலும் ஆக்கிரமிப்புகளாலும் அடைபட்டு போனதால், ஏரிக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்துபோனது. அதேநேரத்தில் நகரின் சாக்கடை நீர் கலக்கும் இடமாக மாறிப்போனது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலம் மாநகராட்சி, சேலம் மக்கள் குழு, குமரகிரி ஏரி பாதுகாப்பு குழு உள்ளிட்ட அமைப்பினர் இணைந்து ஏரியை தூய்மைபடுத்தும் பணியை மேற்கொண்டனர். தற்போது, ஏரியை சுற்றிலும் வேலி போடப்பட்டு, பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், ஏரியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படாமல் இருக்கிறது. இதனால், ஏரி நீர் அசுத்தமாகவே காணப்படுகிறது.

மக்களும் ஏரியினுள் குப்பையை வீசி வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஏரியின் நீர் வரத்து கால்வாய் பகுதியில் ஆகாயத்தாமரைகள் மீண்டும் படர்ந்து, ஏரியின் பரப்பை மெல்ல ஆக்கிரமித்து வருகிறது.

மீண்டும் மாசடைவதை தவிர்க்க, ஏரியை மாநகராட்சி மற்றும் இயற்கை ஆர்வலர்கள் தூர்வாரி சீரமைப்பு பணியை தொடங்க வேண்டும். குறிப்பாக, வட கிழக்கு பருவமழைக்கு முன்னர் ஏரியை தூர் வாருவதுடன், நீர் வரத்து கால்வாய்களையும் சீரமைத்து ஏரியை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குமரகிரி ஏரி பாதுகாப்பு குழு சரணவன் கூறியதாவது:

மாநகராட்சி அனுமதியுடன் சேலம் மக்கள் குழு, நீர் நிலை ஆதாரப் பசுமை இயக்கக்குழு ஆகியவை பொதுமக்களுடன் இணைந்து, குமரகிரி ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொண்டோம். ஏரி வளாகத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதைகள் அமைத்தோம்.

ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ஆங்காங்கே தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். மேலும், கழிவுநீரை இயற்கையாக சுத்திகரிக்கக்கூடிய தாவரங்களை நீர்வரத்து கால்வாயில் வளர்த்து இருக்கிறோம். எனினும், ஏரியை தூய்மைபடுத்துவதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாநகராட்சி செயற் பொறியாளர் காமராஜ் கூறும் போது, “குமரகிரி ஏரியை தனியார் அமைப்புகளுடன் சேர்ந்து தூய்மை படுத்தும் பணி சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி செய்து முடிக்கப்பட்டது. சேலத்தில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுறும்போது, ஏரிக்கு செல்லக்கூடிய கழிவுநீரை கட்டுப்படுத்த வாய்ப்பு உள்ளது. தற்போதைக்கு ஏரியை சீரமைப்பது தொடர்பான திட்டம் ஏதும் இல்லை” என்றார்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x