Published : 14 Oct 2016 01:37 PM
Last Updated : 14 Oct 2016 01:37 PM

உங்கள் குரல்: கோவை- திருச்சி நெடுஞ்சாலையில் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பு

அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

044-42890003 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

மாநகர பஸ்களை சுத்தம் செய்ய வேண்டும்

சென்னை மாநகர பஸ்களின் உள்ளே தூசு, மண், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அப்படியே கிடக்கின்றன. வேகமாக காற்றடித்தால், அவை பயணிகளின் முகத்தில்தான் விழுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநில தலைநகரில் உள்ள பஸ்களில் இப்படி இருந்தால், வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டினரும், தமிழகத்தை குறைவாகவே மதிப்பிடுவார்கள். அதனால் பஸ்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

- த.சேகர், அய்யப்பன்தாங்கல்.

பூங்காக்கள் பராமரிக்கப்படுமா? - கே.கே.லட்சுமணன், நஞ்சுண்டாபுரம்.

கோவை மாநகர் முழுவதும் உள்ள பூங்காக்களை சரிவர பராமரிப்பதில்லை. மாநகரின் பெரும்பான்மை வார்டுகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. ஆகவே அவற்றை பாராமரிக்க மாநகராட்சி போதிய கவனம் செலுத்த வேண்டும். திருச்சி சாலையில் 68-வது வார்டு நஞ்சுண்டாபுரம் பகுதியில் காய்கறிச் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தெரு விளக்குகள் எரியுமா?- குப்புசாமி, கோவை.

கோவை மாநகரில் ராமநாதபுரம் -நஞ்சுண்டாபுரம் சாலையில், ரயில்வே மேம்பாலத்தையொட்டிச் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பு- ஜி.பாலகிருஷ்ணன், இருகூர்.

கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் உப்பிலிபாளையம் கிராமத்தில் ராஜலெட்சுமி பேருந்து நிறுத்தம் கிழக்குப் புறமாக சிங்காநல்லூர் குளத்துக்கு வரும் 30 அடி நீர்வழிப் பாதையில் 25 அடி ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இது தொடர்பாக அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.



உடுமலையில் துர்நாற்றத்தால் அவதி- கணேஷ்குமார், உடுமலை.

உடுமலை-பழநி சாலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னலுக்காக மக்கள் காத்திருந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்குள்ள பேருந்து நிலைய கழிப்பிடத்தில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், வாகனங்களில் செல்வோர் தவிக்கும் நிலை உள்ளது. கழிப்பிடத்தை மாற்றி அமைக்கவோ அல்லது முறையாக பராமரிக்கவோ நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சூலூரில் தேங்கும் குப்பை?- ஜோதிமணி, கோவை.

கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சிப் பகுதியில் குப்பை அள்ளுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது வீதிகளில் அதிக அளவில் குப்பை தேங்குகிறது. இதனால் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஆகவே, தொய்வில்லாமல் குப்பையை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை வேண்டும்.



நெடுஞ்சாலையில் பள்ளம்- கதிர்வேல், பொள்ளாச்சி

பொள்ளாச்சி -உடுமலை நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி மின்மயானம் முன்புறம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளத்தை சரிசெய்ய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஏடிஎம்-ல் விளக்கு எரியவில்லை- கங்கா, உதகை

உதகை ரயில் நிலையம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரவு நேரங்களில் விளக்கு எரிவதில்லை. இதனால் பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். விளக்குகள் எரியாததால் திருட்டு பயமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த இந்த ஏடிஎம்மில் வங்கி நிர்வாகம் உடனடியாக விளக்குகளை சீரமைக்க வேண்டும்.



ஒண்டிப்புதூர் மேம்பாலத்தில் விளக்குகள் எரியுமா?- ரவிச்சந்திரன், ஒண்டிப்புதூர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் மேம்பாலத்தில் உள்ள விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் கோவை மாநகருக்குள் வரும் வாகனங்களும், வெளியேறும் வாகன ஓட்டிகளும் போதிய வெளிச்சம் இன்மையால் மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆகவே, மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சாலையை புதுப்பிக்க வேண்டும்- ரூபேஷ், உடுமலை.

பாதாள சாக்கடைக்காக தோண்டி எடுக்கப்பட்ட இச் சாலையில் தார்ச் சாலை அமைக்க ஒரு மாதத்துக்கு முன்பு ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால், இன்னும் தார் சாலை அமைக்கப்படவில்லை. அதனால் இவ்வழியாகச் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பண்டிகைக்கு முன்பாக இச் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x