Published : 21 Oct 2016 12:17 PM
Last Updated : 21 Oct 2016 12:17 PM

உங்கள் குரல்: ‘தி இந்து’வுக்கு நன்றி - புதிய கருவி

தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிப்பு

அனகாபுத்தூர் பாரி நகரில் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது இப்பகுதியில் புகுந்த நீர், அண்மையில்தான் வடிந்தது. இந்நிலையில் தற்போது பெய்த மழையால் மீண்டும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மழை நீர் வழிந்தோட நிரந்தர தீர்வு காணவேண்டும்.

- எம்.ராமசுவாமி, அனகாபுத்தூர்.

தெரு விளக்கு எரியவில்லை

கொளத்தூர் சூரப்பட்டு பகுதியில் உள்ள சாலைகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள மின் விளக்குகளை பழுது பார்த்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாசகர், கொளத்தூர்.

பஸ் நிறுத்தத்தில் பள்ளம்

கிழக்கு தாம்பரம் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ் நிறுத்துமிடத்தில் பள்ளங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது மழைக் காலமாக இருப்பதால், அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி, விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே அந்த பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எ.கார்த்திகேயன், கிழக்கு தாம்பரம்.

சீரமைக்கப்படாத சாலைகள்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ராஜம்மாள்நகர் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டவை. தற்போது மோசமான நிலையில் உள்ளன. அந்த சாலையில் முதியோர்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.ஏ.கார்னிகா, மாடம்பாக்கம்.

நிழற்குடை அமைக்க வேண்டும்

தாம்பரத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையம் செல்லும் வழியில் கோவிலம்பாக்கம் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். கடைகளின் அருகில் நிழலுக்கு நிற்க, அங்குள்ள கடைக்காரர்கள் அனுமதிப் பதில்லை. அதனால் கோவிலம் பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாசகர், கோவிலம்பாக்கம்.

மின்சார ரயில் கால அட்டவணை

ரயில்வே கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் மற்றும் ஆவடி வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்களின் கால அட்டவணையையும் இந்திய ரயில்வே வெளியிட வேண்டும். பயணிகளின் கோரிக்கையை ஏற்று செய்யப்பட்டுள்ள மாற்றங் கள் குறித்தும் விரிவான தகவல் கள் இடம்பெற வேண்டும்.

- வாசகர், அண்ணனூர்.

பஸ் சேவை குறைப்பு

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பல்வேறு பஸ்கள் இயக்கப்பட்டாலும், கீழக்கரணை பஸ் நிறுத்தத்தில் எம்500 என்ற வழித்தட எண் கொண்ட வெள்ளை நிற பலகை கொண்ட பஸ்களே நிற்கின்றன. இந்த பஸ் சேவையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, எம்500 வழித்தட பஸ்ஸின் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.என்.ஜி.விநாயகம், சிங்கப்பெருமாள்கோவில்.

போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படுமா?

பாடி மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில், வாகனங்கள் வேகமாக செல்கின்றன. அங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படாததால், அந்த சாலையை பொதுமக்கள் அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. அங்கு விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பாடி மேம்பாலத்துக்கு கீழே போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.

- கே.எம்.பாலாஜி, கொளத்தூர்.

‘தி இந்து’வுக்கு நன்றி - புதிய கருவி

அயனாவரம் நியாயவிலைக் கடையில் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் தெரிவித்திருந்தேன். அது கடந்த 10-ம் தேதி இதழில் செய்தியாக வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அந்த கடைக்கு புதிய கருவி கொண்டுவரப்பட்டு, ஆதார் எண் பதிவு இடையூறு இன்றி நடைபெற்று வருகிறது. இதற்காக ‘தி இந்து’ நாளிதழுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

- சி.எஸ்.செல்வம். அயனாவரம்.

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.



நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.





உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x