Published : 07 Oct 2016 12:02 PM
Last Updated : 07 Oct 2016 12:02 PM

உங்கள் குரல்: வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

044-42890008 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

நாய்களால் தீராத தொல்லை

நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாய்களால் மனிதர்களுக்கு ஆபத்து மட்டு மல்ல, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் கூட்டமாக வரும் நாய்கள் மனிதர்களை துரத்திக் கடிக்கின்றன. சில நேரங்களில் நாய்களால் மனித உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன. எனவே, நாய்கள் விஷயத் தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

- அப்துல் காதர், மேல்விஷாரம்.

கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு

விரிஞ்சிபுரம் பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாலாற்றில் கலக்கிறது. அங்கு கழிவுநீர் தேங்கும் இடத்தில் நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அதே இடத்தில் திருமண மண்டபங்களில் இருந்து எடுத்துவரப்படும் இலைகள் மற்றும் கோழிக் கழிவுகளை கொட்டுகின்றனர்.

இதனால், அங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. மேலும், பாலாற்றங்கரையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். அங்கு குப்பை கொட்டுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குப்பையில் இருந்து இறைச்சி துண்டுகளையும் உணவுப் பொருட்களையும் காக்கைகள் வீடுகள் மீது வீசுகின்றன. எங்கள் பிரச்சினைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் தான் தீர்வு காண வேண்டும்.

- பொதுமக்கள், விரிஞ்சிபுரம்.

ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்

ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இதற்கான அரசாணை மட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால், ஓய்வூதியம் கிடைக்காமல் ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர் கள் அவதிப்படுகிறார்கள். தமிழக முதல மைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைக் காரணம் காட்டி நிதித் துறையினர் அரசாணை வெளியிடாமல் வைத்திருக்கக் கூடாது. தமிழ்நாடு முழுவதும் ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர்களின் நலன் கருதி நிதித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கதிர்வேல், செயலாளர், ஆவின் ஓய்வூதியர் சங்கம்.

அடிப்படை வசதிகள் இல்லை

வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சென்னை பேருந்துகள் நிறுத் தும் இடத்தில் மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. தவிர, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பேருந்துகள் எளிதாக உள்ளே வந்து செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள காத்திருக்கும் அறையில் மின்விசிறிகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. எனவே, அடிப்படை வசதிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து தர வேண்டும்.

- கே.பிரபாகரன், வேலூர்.

வாகனத் திருட்டு அதிகரிப்பு

திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை அந்தந்த நிறுவனங்கள் முன்பு நிறுத்துகின்றனர். அவ்வாறு நிறுத்தப் படும் வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன. குறிப்பாக, திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகே நிறுத்தப்படும் வாகனங்கள் திருடுபோகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் காணாமல் போயுள்ளன.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றால் மனுவை வாங்கவே குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகின்றன. அதன் பிறகு வழக்குபதிவு செய்ய பல மாதங்கள் அலைய வேண்டியுள்ளது. எனவே, வாகனத் திருட்டைத் தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-எஸ். மாரிமுத்து, கேதாண்டப்பட்டி.

கல்விக் கடன் வழங்க மறுப்பு

சென்னையில் உள்ள அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜியில் ‘டெக்ஸ்டைல் டெக்னாலஜி’ என்ற பாடப்பிரிவில் (பி.டெக்) எனது மகன் முதலாமாண்டு படித்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்ந்தார். மகனின் படிப்புக்கு கல்விக் கடன் கேட்டு தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தானிப்பாடியில் உள்ள இந்தியன் வங்கியில் விண்ணப்பித்தேன்.

முதலில் பார்க்கலாம் என்றும், அடுத்த முறை இப்படியொரு பாடப்பரிவு உள்ளதா? என்றும், அதற்கு அடுத்தமுறை இதுபோன்ற பாடப்பிரிவுக்கு கடன் தருவதில்லை என்றும், இறுதியாக உங்கள் மகனுக்கு கல்விக் கடன் தரமுடியாது என்று கூறி பலமுறை அலைக்கழித்தனர். நான் தையல் தொழிலாளி. கல்விக் கடனை நம்பிதான் என் மகனை கல்லூரியில் சேர்த்தேன். மேலும் 2 பிள்ளைகள் உள்ளனர். அவர்களை எவ்வாறு படிக்க வைக்கப் போகிறேன் என தெரியவில்லை. இதுகுறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். என் மகனின் படிப்பு தொடர்வதற்கு, கல்விக் கடன் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-தண்டபாணி, தானிப்பாடி கிராமம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x