Published : 21 Oct 2016 12:52 PM
Last Updated : 21 Oct 2016 12:52 PM
விபத்துகளைத் தவிர்க்க சாலை சீரமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் பிரதான சாலை நக்க சேலம் வரை மிகவும் மோசமாக உள்ளது. இந்தச் சாலையில் வாகனங்களில் செல்ல மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலையால் தினமும் விபத்து ஏற்படுகிறது. சாலை முழுவதும் பள்ளங்களும், படுகுழிகளும் நிறைந்துள்ளதால் பேருந்து, கார், மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களில் செல்வோர் உடல் வலியால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்தச் சாலையை விரைந்து புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மைக்கேல்ராஜ், துறையூர்.
ஆடுதுறை ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி வேண்டும்
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை ரயில் நிலையத்தில் குடிநீர் குழாய் மேடைகள் அமைக்கப்பட்டும், தண்ணீர் வராமல் உள்ளது. இதேபோல, புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறை திறக்கப்படாததால், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இவற்றை, உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-கண்ணன், இடையநல்லூர்.
இரு சக்கர வாகன திருட்டு தடுக்கப்படுமா?
கும்பகோணம் பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடு போகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும். அதே நேரத்தில் திருட்டு வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது, திருட்டும் குறைய வாய்ப்புள்ளது. காவல் துறையினர் கண்டிப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே இரு சக்கர வாகன திருட்டைத் தடுக்க முடியும்.
-கீதா முருகானந்தம், திருவைக்காவூர்.
மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவணிதம் கிராமத்தில் உள்ள பாண்டவை ஆற்றில் இரவு முழுவதும் மணல் அள்ளுகின்றனர். பல இடங்களில் ஆறு கட்டாந்தரையாக மாறிவிட்டது. முறைப்படி தூர் வாரி பராமரிக்காமல் ஆற்றையே சிதிலமடையச் செய்துவிட்டனர். இனியாவது மணல் அள்ளுவது தடுக்கப்படுமா?.
-பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.
மரப்பாலத்தை சீரமைக்க வேண்டும்
நாகை மாவட்டம் செம்போடை அருகில் உள்ள நாகக்குடையான் கிராமத்தில் ஈரவாய்க்காலில் உள்ள மரப்பாலம் சேதமடைந்து, வெகு நாட்களாகி விட்டது. இதனால், அப்பாலத்தின் வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த மரப்பாலத்தை விரைந்து சீரமைத்துத் தரவேண்டும்.
-ராஜசேகர், நாகக்குடையான்.
குண்டும் குழியுமாக உள்ள புதுகை சாலைகள் சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் இந்தச் சாலைகளில் இயக்கப்படும் வாகனங்களின் டயர்கள் விரைவில் தேய்ந்து பாதிப்படைவதுடன், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. மழைக் காலம் தொடங்கும் முன்னரே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ரங்கசாமி, திருக்கோகர்ணம்.
பணம் டெபாசிட் செய்ய கூடுதல் இயந்திரம் அமைக்க வேண்டும்
பெரம்பலூர் நகரில் பாலக்கரை அருகேயுள்ள கிருஷ்ணா திரையரங்கம் எதிர்புறம் ஸ்டேட் வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம் உள்ளது. வெளியூர்களில் இருந்து இங்கு வந்து பணிபுரியும் பலர், இந்த இயந்திரம் மூலம் வெளியூர்களில் வசிக்கும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்களுக்கு பணம் அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலான நாட்கள் இந்த இயந்திரம் செயல்படுவதில்லை.
எனவே, இங்கு பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தை கூடுதலாக அமைக்க ஸ்டேட் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.வசந்தன், பெரம்பலூர்.
வெளிமாநில இளைஞர்களை கண்காணிக்க வேண்டும்
அரியலூரில் நடைபெறும் கட்டிடப் பணிகளுக்காக, பிஹார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் அழைத்து வரப்படுகின்றனர். அரியலூர் நகரில் தங்கிப் பணியாற்றும் அவர்களுக்கு, அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இந்நிலையில், அவர்களில் சிலர் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, வெளிமாநில இளைஞர்களைக் கண்காணிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருதமுத்து நாராயணசாமி, அரியலூர்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT