Last Updated : 31 Oct, 2016 09:09 AM

 

Published : 31 Oct 2016 09:09 AM
Last Updated : 31 Oct 2016 09:09 AM

நம்மைச் சுற்றி: சேவல் பீதியும், அமெரிக்க அரசும்

“சேவல்-பீதி கொண்ட ஒருவனைப் பற்றி மொரீஷிய நாட்டுப்புறக் கதையொன்று இருக்கிறது. எப்போதெல்லாம் சேவலை அவன் பார்க்கிறானோ அப்போதெல்லாம் அவனுக்குப் பித்துப் பிடித்தாற்போல ஆகிவிடும்.

‘ஏன் சேவலைப் பார்த்து இப்படி பயப்படுகிறாய்?’ என்று அவனிடம் மனநல மருத்துவர் கேட்கிறார். ‘சேவல்கள் என்னைச் சோளம் என்று நினைக்கின்றன’ என்கிறான் அவன். ‘நீ சோளம் கிடையாது. வளர்ந்த, பெரிய ஆள். உன்னைப் போய் யாரும் சிறிய சோளக் கதிர் என்று நினைக்க மாட்டார்கள்’ என்று அந்த மருத்துவர் சொன்னார். ‘நான் ஒரு சோளக்கதிர் இல்லை என்று எனக்குத் தெரியும் டாக்டர்.

ஆனால், சேவலுக்கு அப்படித் தெரியாதே. சேவலிடம் போய் நான் ஒன்றும் சோளம் இல்லை என்று சொல்லி அதை நம்பவைப்பதுதான் உங்கள் வேலை’ என்றான் அந்த மனிதன். சேவலுடன் பேசுவதென்பது நடக்காத காரியம் என்பதால் அந்த மனிதனுக்குக் கடைசிவரை பீதிநோய் குணமாகவே இல்லை. கதை அவ்வளவுதான். அமெரிக்க அரசிடமும் அப்படித்தான். நான் சோளம் இல்லை, நான் சோளம் இல்லை என்று அவர்களை நம்ப வைக்கத்தான் இத்தனை ஆண்டுகளாக முயன்றுகொண்டிருக்கிறேன்.”

குவாந்தனாமோ சிறையில் 14 ஆண்டுகாலம் அடைக்கப்பட்டிருந்த மோரிட்டேனியா நாட்டைச் சேர்ந்த முகமது ஔல்து அல்-ஸ்லாஹீ தனது நாட்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அங்கு கைதுசெய்யப்பட்டவர்களை அடைத்து வைத்துள்ள இடம் குவாந்தனாமோ சிறை. மிக மோசமான சித்ரவதைகள் கட்டவிழ்த்து விடப்படும் சிறைகளில் இதுவும் ஒன்று.

இந்தச் சிறை, அமெரிக்காவின் வைரியான கியூப மண்ணில் இருப்பது வரலாற்று முரண். அமெரிக்கப் பிடியில் இருந்து கியூபாவுக்கு விடுதலை கொடுத்த மறு வருடமே, (1903-ல்) ஒரு ஒப்பந்தம்போட்டு, குவாந்தனாமோ விரிகுடாவை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது அமெரிக்கா.

சமீபகாலமாக இந்தச் சிறையிலிருந்து தொடர்ந்து கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர் அல்லது அவர்களது சொந்த நாட்டு சிறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஒபாமா அதிபரான பின்பு, கைதிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது குறிப்பிடத் தக்கது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x