Published : 22 Oct 2016 03:48 PM
Last Updated : 22 Oct 2016 03:48 PM
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.
இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகளின் தற்போதைய நிலையையும் தவறாமல் குறிப்பிடுகிறோம். இதைத் தொடர்ந்து படித்துவரும் 'தி இந்து' வாசகர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
அன்பாசிரியர் 18 - மகாலட்சுமி: மலைவாழ் மாணவர்களுக்காக மேன்மைப் பணி! தொடரில் பலரின் ஆதரவால்தான் தன் படிப்பை முடித்து, ஆசிரியப் பணிக்கு வந்திருப்பதாகவும், தனக்குக் கிடைத்த உதவி தன் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் தங்கள் தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் மகாலட்சுமி.
இந்நிலையில், இந்த அத்தியாயத்தைப் படித்த 'தி இந்து' வாசகர்கள் பள்ளி வகுப்பறைகளுக்குத் தேவையான டைல்ஸ், சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
பள்ளியின் வெளிப்புறச் சுவர்களுக்கு வர்ணங்கள் பூசுகிறார் ஆசிரியர் மகாலட்சுமி. அவருக்கு உதவுகின்றனர் மாணவர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அன்பாசிரியர் மகாலட்சுமி, ''டைல்ஸ் பதிக்க முகமது சையது காலந்தர் ரூ.35 ஆயிரமும், திருவண்ணாமலையில் இருந்து சீதா ரூ.10 ஆயிரமும், செந்தில் குமரன் என்னும் வாசகர் ரூ.5 ஆயிரமும், கோவையில் இருந்து சௌகார்த்திகா ரூ.4 ஆயிரமும் அனுப்பினர். பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர் ரூ.3 ஆயிரம் அளித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளி&விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காளிதாஸ், ஆறுமுகம் மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் ரூ.20 ஆயிரம் வழங்கினர்.
இவர்கள் அனைவரின் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு, எங்கள் தொடக்கப்பள்ளி வகுப்பறைகளுக்கு டைல்ஸ் பதித்தோம். சுவர்கள் அமைத்தோம்.
அத்தோடு ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியை சரண்யா மற்றும் சென்னை ஆசிரியர் சக்திவேல்முருகன் ஆகிய இருவரும் வகுப்பறை சுவர்களுக்கு வர்ணமடிக்க ரூ.7,500 அளித்தனர். இதைக்கொண்டு வர்ணங்கள் வாங்கி நாங்களே சுவர்களுக்குப் பூசிவிட்டோம். ஓவியங்களும் வரைந்துள்ளோம்.
இப்போது ஜவ்வாது மலையில் உள்ள எங்கள் மலைவாழ் கிராம பழங்குடியினர் தொடக்கப் பள்ளியின் வகுப்பறைகள் தரமாக நிமிர்ந்து நிற்கின்றன.
வண்ணங்கள் பூசப்பட்ட அறை | டைல்ஸ் பதிக்கப்பட்ட வகுப்பறை சுத்தப்படுத்தப்படுகிறது.
ஹைதராபாத்தில் இருந்து ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் அனுப்பி வருகிறார். இதைக்கொண்டு ஜன்னல். கதவுகளுக்கான திரைகளை வாங்கியிருக்கிறோம். அதைக்கொண்டு மாணவர்களின் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
உண்டு உறைவிடப் பள்ளி என்பதால் மாணவர்களுக்கு ஆடைகள் தேவைப்படுகிறது; சலவை இயந்திரம் இருந்தால் அவர்களின் உடைகளை எளிதாகத் துவைக்க முடியும் என்று அன்பாசிரியர் தொடரில் கூறியிருந்தேன். இந்நிலையில் திருப்பூரில் இருந்து விஸ்வநாதன் உடைகள் அனுப்பினார். கரூர் மாவட்டத்தைச் சார்ந்த பொறியாளரான திருமாவளவன் பெருமாள் வாஷிங்மெஷின் வாங்க ரூ. 27,500 அனுப்பினார். அதையும் வாங்கிவிட்டோம்.
வாசகர் அளித்த தொகையில் வாங்கப்பட்ட சலவை இயந்திரம். | மாதாமாதம் கிடைக்கும் தொகையில் வாங்கப்பட்ட திரைகள்
இவை எல்லாவற்றையும் விட, எங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது பெருமகிழ்வைத் தந்திருக்கிறது. ஆம், எங்கள் பள்ளி நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய 'தி இந்து'- அன்பாசிரியர் தொடருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்'' என்று நெகிழ்கிறார் ஆசிரியர் மகாலட்சுமி.
இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் 'தி இந்து' பெருமிதம் கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT