Published : 29 Oct 2016 11:14 AM
Last Updated : 29 Oct 2016 11:14 AM

நமது நாட்டை இந்தியத் தாய் என்று ஏன் அழைக்கிறோம்?- ஜவஹர்லால் நேருவின் பதிலை கேளுங்கள்...

சாலை, டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகம். வரவேற்பு அறையில் அமர்ந்திருக்கிறார் ராஜீவ் காந்தி. அப்போது அவர் வளர ஆரம்பித்த இளம் தலைவர். இந்திய பிரதமரான அவரது தாய் இந்திரா காந்தி உள்ளே இருக்கிறார். முதியவர் ஒருவர் வருகிறார். கந்தல் ஆடை. கரங்கள் நடுங்குகின்றன. கரிசனத்துடன் விசாரிக்கிறார் ராஜீவ். மத்தியப்பிரதேசத்தில் இருந்து வருவதாக கூறும் முதியவர், தனது கிராமத்தின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டும் என்கிறார். அதிர்ச்சியடைகிறார் ராஜீவ். மத்தியப்பிரதேசத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரத்தைக் கடந்து, ஏன் இவர் டெல்லிக்கு வர வேண்டும்? அக்கறையாக அருகில் ஒரு ஆள் இருந்தால் இப்படி நடக்குமா? கவலையடைந்தார் ராஜீவ். காந்தியின் கனவு அவருக்குள் கருக்கொண்டது அப்போதுதான்!

1980-களின் தொடக்கம் அது. உலகம் முழுவதுமே மாற்றங்களை எதிர்நோக்கியி ருந்தது. பரிணாமத்தின் அடுத்த கட்டத்துக்கு பாயத் தயாராக இருந்தன உலக நாடுகள். உலகமயமாதல், ஜனநாயக விரிவாக்கம், அதிகாரப் பரவல் மூன்று அம்சங்களும் மூன்றாம் உலக நாடுகளிடம் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இந்திராவுக்குப் பிறகு ராஜீவ் பிரதமர் ஆனார். புதிய பாய்ச்சலுக்கு அவரும் தயாராகவே இருந்தார். புதுமையைத் தேடிச் தேடிச் சென்றார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் சிதைந்துப் போயிருந்தது. காந்தியின் கனவை நிறைவேற்றத் துடித்தார் ராஜீவ். பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை தூசுத் தட்டி எடுத்தார் அவர். அது தொடர்பான ஆவணங்களைத் தேடிப் படித்தார். அப்போது அவர் கண்ணில் பட்டது நேருவின் உரை ஒன்று.

நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நேருவுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. அவற்றை எல்லாம் அவர் சமநிலையோடு சமாளித்தார். அன்று நேரு இல்லை எனில் இந்தியா இன்று இல்லை. பல துண்டுகளாகச் சிதறியிருக்கும். சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் காந்தியின் கனவான கிராம சுயராஜ்ஜியம் மீது நேருவுக்கு மிகுந்த அக்கறை இருந்தது. அதேசமயம் நாடு எதிர்கொண்டிருந்த நெருக்கடிகளையும் அவர் பார்க்க வேண்டியிருந்தது. வெளியே பாகிஸ்தான், சீனா என எதிரி நாடுகள்; உள்ளே சுமார் 600 சமஸ்தானங்கள்; பன்முகத் தன்மை கொண்ட மாநிலங்கள் என எல்லாவற்றையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதல் வேலையாக வலிமையான நாடாக இந்தியாவைக் கட்டமைக்க விரும்பினார். அவ்வாறே கட்டமைத்தார். அதன் பின்பு பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை கையில் எடுத்தார். 1959-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் ராஜஸ்தான் மாநிலம் நாகூர் ஜில்லாவில், நாட்டின் முதல் பஞ்சாயத்தை தொடங்கி வைத்துப் பேசினார் நேரு. ராஜீவ் முன்னால் இருந்தது அந்த உரைதான். நாம் ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய உணர்வுபூர்வமான, அறிவூபூர்வமான நீண்ட உரை அது. அதன் சுருக்கம் இங்கே.

“இன்றைய

தினம் ஜனநாயகத்தின் அடித்த ளமான பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை கட்டியமைத் திருக்கிறோம். காந்தி மட்டும் இன்று உயிருடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். காந்தியின் பிறந்த நாளான இன்று மக்கள் அதிகாரத்தை மக்களிடமே ஒப்படைப்பதில் பெருமைகொள்கிறேன். நாம் சாதாரணமாக இந்த நிலைக்கு வந்துவிடவில்லை. பல முன்னேற்றங்களையும் பின்னடைவுகளையும் கடந்தே வந்திருக்கிறோம். மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் கடந்தே வந்திருக்கிறோம். வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்தே வந்திருக்கிறோம். இவை எல்லாவற்றையும் சேர்த்துத்தான் இந்த இந்தியாவை கட்டியிருக்கிறோம். இந்தியாவின் வரலாறு மிகவும் நெடியது. நமது நாட்டை பாரதம், ஹிந்துஸ்தான், இந்தியா என்று பல பெயர் களில் அழைக்கிறோம்.

பாரத மாதா என்கிறோம். இந்தியத் தாய் என்கிறோம். ஏன் அப்படி அழைக்கிறோம்? அதன் உண்மையான அர்த்தம் என்ன? நீண்ட கூந்தலையுடைய தெய்வீக வடிவம் பொருந்திய பெண்ணா இந்தியத் தாய்? இல்லை, அந்த உருவம் ஒரு குறியீடு மட்டுமே! உண்மையான இந்தியத் தாய் யார் தெரியுமா? நீங்கள், நான், இந்த தேசத்தின் கடைக்கோடியில் வசிக்கும் ஒவ்வொருவரையும் உள்ளடக்கிய ஆகச் சிறந்த தேசமே இந்தியத் தாய். இங்கே வசிக்கும் 400 மில்லியன் மக்களே இந்தியத் தாய். நமது கடந்த தலைமுறை, எதிர்காலத் தலைமுறைகளை உள்ளடக்கியவளே இந்தியத் தாய். இந்தியத் தாய்க்கு நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

வறுமை காரணமாக உங்கள் இந்தியத் தாயின் பழைய உடைகள் கிழிந்திருக்கின்றன. உங்கள் இந்தியத் தாய்க்கு புத்தாடை அணிவித்து அழகான வீட்டில் குடியமர்த்துவது நமது கடமை அல்லவா! சுதந்திரம் வாங்கிவிட்டோம். ஆனால், உங்களை யாரோ ஆண்டுகொண்டேயிருக்கிறார்கள். காந்தி விரும்பிய சுதந்திரம் இது அல்ல. உங்களை ஆள வேண்டியது மத்திய சர்க்கார் அல்ல; உங்கள் சமூகத்தை நீங்கள் ஒவ்வொருவரும் ஆள வேண்டும். அதுவே பஞ்சாயத்து அரசு. அரசாங்கம் என்பது உதவிக்கு மட்டுமே. வருங்காலத்தில் வளமான, வறுமை இல்லாத, பசி இல்லாத தேசத்தை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.

இதை செயல்படுத்த நான் மூன்று அம்சங்களை நம்புகிறேன். பஞ்சாயத்துக்கள், கல்வி நிலையங்கள், கூட்டுறவு அமைப்புகள் இவையே அந்த மூன்று அம்சங்கள். நாட்டை தாங்கிப் பிடிக்கும் தூண்கள் இவை. பஞ்சாயத்து அமைப்புகள் உங்களுக்கு அரசியல் அதிகாரத்தை அளிக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் இந்திய ஜனநாயகத்தில் பங்கேற்பதை அது உறுதி செய்கிறது. கல்வி நிலையங்கள்... உங்களுக்கு சமூகப் பார்வையைக் கொடுக்கும். சுத்தத்தை, சுகாதாரத்தை வலியுறுத்தும். கூட்டுறவு அமைப்புகள் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் அமைப்புகள் மட்டும் அல்ல; அவை உரம் வாங்கிக் கொடுக்கும். விதை வாங்கிக் கொடுக்கும். விளைபொருளை விற்றுக் கொடுக்கும். நியாயமான விலையை பெற்றுக்கொடுக்கும். இடைத்தரகர்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். அவை விவசாயியின் நிலத்தை பறித்துக்கொள்ளாது. விவசாயியின் நிலத்துக்கு உரிமைக் கொண் டாடாது. விவசாயியின் லாபம் உயர உதவி புரியும். இவை மூன்றும் ஒன்றுக்கொன்று சங்கிலித் தொடராக பணிபுரிய வேண்டும்.

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் இந்த உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. நமது செயல்பாடுகளில் ஈடுபாட்டை காட்டத் தவறினால் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. பசியை ஒழிக்க இயலாது. வறுமையை ஒழிக்க இயலாது. நான் சொன்னவற்றை எல்லாம் நீங்கள் சரியாக செய்தீர்களானால் நீங்கள் அமைதியையும் வலிமையையும் ஒருசேர உணர்வீர்கள். வரும் தலைமுறை நம்மை நினைத்து பெருமை கொள்ளும்” என்றார் நேரு.

படித்து முடித்தபோது ராஜீவ் காந்தியின் கண்கள் கலங்கியிருந்தன. ஏனெனில், நேரு உருவாக்கியிருந்த பஞ்சாயத்து ராஜ்ஜியம் ராஜீவ் கண் முன்னால் கரைந்து கொண்டிருந்தது. சிதைந்துகொண்டிருந்தது. காரணம், நேருவேதான். அவர் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை உருவாக்கும்போது நெருக்கடி காரணமாக ஒரு விஷயத்தை தெரிந்தே தவறவிட்டார். இந்தமுறை வாய்ப்பை தவறவிட தயாராக இல்லை ராஜீவ் காந்தி!

- பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x