Published : 14 Oct 2016 01:30 PM
Last Updated : 14 Oct 2016 01:30 PM

உங்கள் குரல்: திருவொற்றியூர்- அம்பத்தூர் பஸ் சேவை அதிகரிக்கப்படுமா?

அன்புள்ள வாசகர்களே.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

மாநகர பஸ்களை சுத்தம் செய்ய வேண்டும்

சென்னை மாநகர பஸ்களின் உள்ளே தூசு, மண், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அப்படியே கிடக்கின்றன. வேகமாக காற்றடித்தால், அவை பயணிகளின் முகத்தில்தான் விழுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநில தலைநகரில் உள்ள பஸ்களில் இப்படி இருந்தால், வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டினரும், தமிழகத்தை குறைவாகவே மதிப்பிடுவார்கள். அதனால் பஸ்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

- த.சேகர், அய்யப்பன்தாங்கல்.

எஸ்கலேட்டர் இயங்குவதில்லை

சென்ட்ரல் ரயில் நிலையம், மூர்மார்க்கெட் வளாகத்தில் உள்ள மின்சார ரயில் நிலையம் ஆகியவற்றிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணிகள், தினமும் பூங்கா ரயில் நிலையத்துக்குச் செல்ல எஸ்கலேட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எஸ்கலேட்டர்கள், காலை, மாலை நேரங்களில் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே எஸ்கலேட்டரை நிறுத்தாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாசகர், நுங்கம்பாக்கம்.

பஸ் சேவை அதிகரிக்கப்படுமா?

திருவொற்றியூர்- அம்பத்தூர் தொழிற்பேட்டை இடையே இயக்கப்பட்டு வந்த 34 என்ற வழித்தட எண் கொண்ட பஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூரில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குறைக்கப்பட்ட சேவையை அதிகரிக்க வேண்டும். மேலும் திருவொற்றியூர்- பெரியார் நகர் வரை இயக்கப்பட்ட வழித்தட எண் 138ஏ பஸ்ஸை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.பிரதாப் குமார், திருவொற்றியூர்.

சீரமைக்கப்படாத தெருக்கள்

சென்னை எல்லிஸ் சாலையில், ஜாம்பஜார் மார்க்கெட் அருகில் தரா ஹைதர் தெரு, சையத் அப்துல்லா தெரு ஆகியவை உள்ளன. இப்பகுதியைச் சுற்றியுள்ள எல்லா தெருக்களிலும் தார் போட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு தெருக்களை மட்டும் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. எனவே இந்த தெருக்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாசகர், ஜாம்பஜார்.

மின் விளக்கு அமைக்க வேண்டும்

தாம்பரத்திலிருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில் கூட்டுரோடு என்னுமிடத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியால் அங்கு சாலை மோசமாக உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் கட்டுமானப் பணி முடியும் வரை தற்காலிகமாக வாவது மின் விளக்குகளை அமைக்க வேண்டும்.

- வாசகர், தாம்பரம்.

அமைக்கப்படுமா வேகத்தடை?

ராமாபுரத்தில் முக்கிய சாலைகளில் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களைப் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் ராமாபுரத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராயலாநகர் முதல் பிரதான சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்தச் சாலையில் பல குறுக்கு சாலைகள் உள்ளன. ராயலாநகர் முதல் பிரதான சாலை வழியாக வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தச் சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.

- சீ.சுப்பிரமணியன், ராமாபுரம்.

சீரமைக்கப்படாத சாலைகள்

குன்றத்தூர் அருகே சிக்கராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மூகாம்பிகை நகரில் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அந்தச் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.வெங்கடகுரு, சிக்கராயபுரம்.

பாதாள சாக்கடை மூடி பழுது

அண்ணாநகர், 11-வது பிரதான சாலை, 7-வது தெருவில் பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து, காயமடைகின்றனர். எனவே பழுதடைந்த மூடியை உடனடியாக சீரமைக்க சென்னை குடிநீர் வாரியம் உரிய நடவடிக்கை வேண்டும்.

- வாசகர், அண்ணாநகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x