Published : 28 Oct 2016 12:05 PM
Last Updated : 28 Oct 2016 12:05 PM
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா ?
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், வாணியம்பாடி சாலை உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன. குறுகிய சாலைகள் உள்ள பகுதிகளில் தெருவோரக் கடை வியாபாரிகளும் நடைபாதை வியாபாரிகளும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எளிதாக வந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. நகராட்சி நிர்வாகமும் போக்குவரத்து போலீஸாரும் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தவிர, ஆட்டோ ஓட்டுநர்கள் தொந்தரவு அதிகமாக உள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து போலீஸார் முன் வரவேண்டும்.
-கே. வேல்பாண்டியன், திருப்பத்தூர்.
விபத்துகளை தடுக்கவேண்டும்
பள்ளிகொண்டா அடுத்த எஸ்.என்.பாளையம் கிராமத்தில் 80 முதல் 90 வீடுகள் மட்டுமே உள்ளன. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் ஆபத்தான வளைவு உள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைந்த பிறகு தினமும் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகளவில் ஏற்படுகிறது.
இந்த வளைவை சரி செய்ய அங்குள்ள மலையை 10 அடி குடைந்தால் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
-செந்தில்குமார், எஸ்.என்.பாளையம்.
சுகாதாரச் சீர்கேடு
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் இலவச சிறுநீர் கழிப்பறை நோய் பரப்பும் வகையில் உள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும். அதேபோல, திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கழிப்பறை யில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலை யோரம் தேங்குகிறது. நடந்து செல்லவே முடிய வில்லை. இதனால் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்பரசு, குடியாத்தம்.
ஆபத்தான பள்ளம்
வாலாஜா அடுத்த அனந்தலை சாலையில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தில் அடிக்கடி பொதுமக்கள் தவறி விழுகின்றனர். சமீபத்தில் அந்த வழியாகச் சென்ற தாயும் மகனும் பேருந்துக்காக ஒதுங்கிய போது, பள்ளத்தில் தவறி விழுந்தனர். அவர்களை, பொதுமக்கள் மீட்டனர். அந்த இடத்தை சரி செய்ய வேண்டும்.
-அனந்தலை கிராம மக்கள்.
மானியத் தொகை வழங்க கோரிக்கை
போளூர் வட்டத்தில் தோட்டக்கலைத் துறை பயிர்களுக்கும் மானியம் வழங்கவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடந்த 8 மாதங்களாக மானியத் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்கின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத் துக்கு கொண்டு சென்றும் கண்டுகொள்ள வில்லை. எனவே, உரிய காலத்துக்குள் மானியத் தொகையை வழங்கவேண்டும்.
-குப்புலிங்கம், போளூர்.
சாலைகள் சீரமைக்கவேண்டும்
திருப்பத்தூர் நகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பல தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பணி முடிவுற்ற பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுதவிர, பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிக்காக பள்ளம் தோண்டி அதிலிருந்து வெளியேற்றப்படும் மண்ணை, சாலையில் கொட்டி விடுகின்றனர். இந்த மண் சரிந்து தெருக்கால்வாயில் நிரம்புகிறது. இதனால், கழிவுநீர் சீராக செல்ல முடியாமல், கொசு உற்பத்தி அதிகரித்து நோய் தொற்று அபாயம் நிலவுகிறது. பாதாளச் சாக்கடைத் திட்டப்பணியை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் முனைப்பு காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதி காரிகள் இத்திட்டத்தை விரைவாக முடித்து சாலைகளை சீரமைக்க முன் வரவேண்டும்.
- செல்வராஜ், திருப்பத்தூர்.
எடையாளர் நியமனத்தில் முறைகேடு
பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வெளியாட்கள் பலர் எடையாளர்களாக உள்ளனர். இவர்களை கடையின் விற்பனையாளர்கள் முறைகேடாக நியமித்துள்ளனர். ரேஷன் பொருட்கள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களுக்கு கூலியாக கொடுக்கின்றனர். இவர்கள், பொருட்களை வாங்க வரும் பொதுமக்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தால் வட்ட வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எடையாளர்களால் பொதுமக்கள் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-டி.பஷீருத்தீன், பேரணாம்பட்டு.
அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம்
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்வதற்கு அரசுப் பேருந்தில் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். அதே நேரத்தில் தனியார் பேருந்தில் 15 ரூபாய் வசூலிக்கின்றனர். அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தாலும், இருக்கைகள் படுமோசமாக உள்ளன. பயணிப்பதற்கான வசதி இல்லாத நிலை உள்ளது.
-அண்ணாமலை, போளூர்.
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.
உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT